பாஜகவை வீழ்த்துவதற்கு தேவைப்பட்டால் நாங்கள் கழிவறையை கூட கழுவத் தயாராக இருக்கிறோம் என மக்கள் நீதி மய்யம் சார்பாக சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் பெரியார் குணா ஹாசன் தெரிவித்தார். வரும் 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (Special Intensive Revision) கொண்டு வந்துள்ளன.. இதன் ஒரு பகுதியாக, வீடு வீடாக கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த படிவங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, மாற்றம் செய்ய அல்லது நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்த வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையானது, ஜனநாயக முறையை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
காரணம், வெளிமாநிலத்தவர்களுக்கும் வாக்குரிமை கொடுக்கும் முயற்சியே இந்த அவசர திருத்தப் பணியாகும். வெளிமாநிலத்தவருக்கு இங்கே வாக்குரிமை கொடுக்கும்போது, தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், கட்சிகள் ஆகியவை அவர்களுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தேசியக் கட்சிக்கே வாக்களிக்கக்கூடும்..
பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் பலர் நீக்கப்படலாம். தகுதியில்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்பதால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நடைமுறையில் முறைகேடு மற்றும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக திமுக குற்றஞ்சாட்டியிருப்பதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதுமட்டுமல்ல, எதற்காக அவசரமாக சிறப்பு தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்? தமிழகத்தில் 8 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில், ஒரு மாதத்திற்குள் எப்படி சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ள முடியும்? தேர்தல் ஆணையம் உத்தரவிட்டபடி ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரிகளும் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை நேரில் எப்படி செல்ல முடியும்? என்பன போன்ற கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுந்துள்ளன.
எனவேதான் இன்றைய தினம் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கின்றன. அந்தவகையில், சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் SIRயை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, விசிக, மநீம, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் பெரியார் குணா ஹாசன் கலந்து கொண்டு பேசும்போது, சென்னை அறிவாலயத்தில் மக்கள் நீதி மையத்தினர் செக்யூரிட்டி வேலை செய்கிறார்கள் என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், பாஜகவை வீழ்த்துவதற்கு தேவைப்பட்டால் நாங்கள் கழிவறையை கூட கழுவத் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.