தேனி மாவட்டம், வருசநாடு அருகே தும்மக்குண்டு பகுதியை சேர்ந்தவர் முருகன் என்ற துரைமுருகன். இவர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகில் ஸ்ரீமுருகன் ‘கோல்டு லோன்’ என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். அங்கு பொதுமக்கள் பலர் தங்களின் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த அடகு கடையில் ரோசன்பட்டியை சேர்ந்த ரமேஷ் சுமார் 6 பவுன் நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த தனது நகையை திருப்புவதற்காக அவர் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் அடகுக்கடை மூடப்பட்டிருந்ததால், அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது சில நாட்களாகவே கடை திறக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அடகுக்கடையை மூடிவிட்டு உரிமையாளரும், பணியாளர்களும் தலைமறைவாகியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, நகையை அடகு வைத்தவர்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். இந்த புகார்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த அடகுக்கடையில் 64 வாடிக்கையாளர்கள் மொத்தம் சுமார் 139 பவுன் மதிப்புள்ள நகைகளை வைத்து பணம் பெற்றுள்ள நிலையில், உரிமையாளர் உள்பட்டோர் தலைமறைவாகி உள்ளது இதையடுத்து இந்த மோசடி குறித்து உரிமையாளர் முருகன் என்ற துரைமுருகன், அவருடைய தந்தை முருகேசன், கடை ஊழியர் ஸ்ரீமதி ஆகிய 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீமுருகன் ‘கோல்டு லோன்’ என்ற அடகுக்கடையில் வேலை செய்த பெண் ஸ்ரீமதியை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.