திருப்பூரில் நட்பின் ஆழம் பிராணிகளுக்கும் பொருந்தும் என்பதை வெளிப்படுத்திய மணி என்கிற தெரு நாய். நண்பன் நாய் உயிரிழந்த சோகத்தில் ஒரு நாள் முழுவதும் அதன் உடல் அருகிலேயே அமர்ந்து நட்பு என்பது சேர்ந்து ஓடுவதில் மட்டுமில்லை கடைசி பயணம் முடியும் வரை துணையாக நிற்பது என்பதை மயானம் வரை சென்று வெளிப்படுத்திய நாட்டு நாய் மணி .
நாய்கள் நம்முடன் வாழ்ந்து பழக்கப்பட்ட ஒரு விலங்கு. அது மனிதனை போலவே இயல்பிலேயே தனியாக வாழ்வதை விட ஒரு கூட்டமாகவோ வாழவே விரும்புகின்றன. நாய்களுக்கும் நம்மைப் போலவே மகிழ்ச்சி, பயம், பொறாமை போன்ற உணர்வு உள்ளது. தனது எஜமான், தன்னை கவனிக்காமல் வேறு ஒருவரை கொஞ்சினால் பொறாமையை வெளிப்படுத்தும். அதேபோல் தனது எஜமான் அல்லது நண்பனை இழந்தால் ஆழ்ந்த துக்கத்தையும் வெளிப்படுத்தும். எனவே தன்னுடைய நண்பனை இழப்பது அதற்குத் தன் சொந்தக் குடும்ப உறுப்பினரை இழப்பதாக நினைக்கிறது.
திருப்பூர் ஓம் சக்தி கோவில் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் இரண்டு நாட்டு நாய்கள் ஒன்றாக தெருக்களில் சுற்றி வருவது வழக்கம். இந்த இரண்டு நாய்களில் ஒரு நாய் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஓரத்தில் உயிரிழந்து கிடந்தது,அதன் நண்பன் நாயானது இறந்த நாயின் உடலை சுற்றி வந்து அதன் அருகிலேயே சோகத்தை வெளிப்படுத்தி அமர்ந்து கொண்டது.
இதனை அந்த சாலை வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்த போது உயிரிழந்த நாயின் உடலின் அருகில், மற்றொரு நண்பன் நாய் உடலை விட்டு சிறிது கூட நகராமல் அருகிலேயே சோகத்துடன் அமர்ந்திருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் இறந்த நாயின் உடலை மாநகராட்சி மயானத்தில் அடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்லும் போது அதன் நண்பன் நாய் ஆனது அருகிலேயே நின்று அமைதியாக பார்த்து சோகத்துடன் காணப்பட்டது. உயிர் பிரியும் வரை அல்ல நட்பு அடக்க முடியும் வரை நட்பு என நண்பன் நாய் உயிரிழந்த நண்பனின் உடல் அடக்கம் செய்யும் வரை துணையாக நின்று நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தியது.