திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அருகேயுள்ள அக்ரகாரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்தப் பகுதியில் நெல், வாழை, பூச்செடிகள் சாகுபடி செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பெய்த கோடை மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளன. தரையில் இருந்து சுமார் 4 அடி உயரம் அளவிற்கு மிகவும் தாழ்வான நிலையில் மின்சார மின்னழுத்த கம்பிகள் தொங்கிக்கொண்டு உள்ளன.

இது சம்பந்தமாக நிலக்கோட்டை மின்சார வாரியத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நேரில் சென்று மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக தற்சமயம் அந்தப் பகுதியில் விவசாயம் ஏதும் செய்ய இயலவில்லை.
விவசாய நிலம் அருகில் குழந்தைகள் மற்றும் கால்நடைகள் இருப்பதால் தாழ்வான உயர் மின்னழுத்தக் கம்பிகள் காரணமாக எந்த நேரமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே மழையின்மையின் காரணமாக விவசாயிகள் பெரும் துயரத்தை அனுபவித்து வந்த நிலையில், மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியம் காரணமாக அந்தப் பகுதியில் விவசாயம் ஏதும் செய்ய முடியாத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இதன் காரணமாக எந்தவித அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மிகவும் தாழ்வான நிலையில் உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளை சரி செய்து கொடுக்கும்படி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.