நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 9 காவல்துறையினருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரிதிலும் அரிதான வழக்காக கருதிய மதுரை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ், செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, சாமதுரை என 9 காவல்துறையினருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2020 -ஆம் ஆண்டில் உலகமே மரணபீதியில் உறைந்திருக்கின்றது . மழலைபேச ஆரம்பித்திருக்கும் குழந்தை முதல் முதியவர்வரை தினமும் உச்சரிக்கும் வார்த்தை கொரோனா. கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆட வல்லரசு, மக்களரசு , அணுவாயுத அரசுகள் என உலகின் அனைத்து அரசு இயந்திரங்களும் கொரோனாவினால் கொத்துக்கொத்தாக செத்துமடியும் தம்மக்களை பார்த்து செய்வதறியாது திகைக்கின்றன.
தாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதரையுமே பார்த்து “இவருக்கு கொரோனா இருக்குமோ?” என்கிற அச்சத்தில் தூரவோடும் பலர். அந்நிலையில், 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு சாத்தான்குளம் நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு அருகிலுள்ள செல்போன் கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்சுக்கும் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதற்குப் பிறகு, ஜெயராஜை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரைத் தேடி அவரது மகன் பென்னிக்சும் அங்கே சென்றார். அவரும் அங்கே அடைக்கப்பட்டார். இந்நிலையில் தந்தை மற்றும் மகன் மீது காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே “தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது” என முதல் தகவல் அறிக்கை 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
ஜூன் 22-ந் தேதி, திங்கள்கிழமை மாலை நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பென்னிக்சை பணியில் இருந்த வார்டன்கள் மீட்டு துணைச் சிறையின் கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த அன்று இரவு 9 மணியளவில் அவர் இறந்துவிட்டார். அதற்கு சிறிது நேரத்திலேயே பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்” என சிறை அதிகாரிகள் அந்தத் தருணத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாத்தான்குளத்தில் போராட்டத்தில் இறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இருவர் உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக #JusticeforJayarajandBennix என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் பிரபலமாக மாநிலம் தழுவிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு உதவி ஆய்வாளர்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டார். காவல்நிலையத்தில் பணியாற்றிய அனைவருமே முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஓப்படைக்க உத்தரவிட்டார். ஒரு சிபிஐ குழு தொடர்ந்து மதுரையில் முகாமிட்டு, கோவிட் 19 தொற்று சிக்கலின் போது இந்த வழக்கில் பணியாற்றியது.
சிபிஐ குற்றப்பத்திரிகையில், பிணக்கூறு ஆய்வு அறிக்கையில் காவல்துறை அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்சை கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், அவர்கள் மௌனமாக இருந்த போதெல்லாம், ஆய்வாளர் மௌனத்திற்கான காரணத்தை கேட்க்கச் சொல்லி தன் ஊழியர்களை ஏவி, அதன் மூலம் மீண்டும் தாக்கத் தூண்டினார். சித்திரவதையின் போது அவரகளின் ஆடைகள் அகற்றப்பட்டன. காவல் நிலையத்தின் அடைக்கபட்ட வளாகத்திற்குள் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தைக்கு கொடூரமான சித்திரவதைகள் பல மணி நேரம் தொடர்ந்தது நடந்தது என உறுதிப்படுத்தியது.
காவல்துறையினரால் தாக்கப்படுவது கொரோனா பெருந்தொற்றைப் போல பரவியிருக்கிறது என்றும் இந்த விவகாரத்தை தாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனுக்கு அங்கிருந்த காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்பதோடு, ஒரு காவலர் அவரிடம் மிக மோசமாகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதன் பிறகு இந்திய காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் ஆதாரங்களை பாதுகாக்கவும், காவல்துறையினர் தலையீட்டைத் தடுக்கவும், வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்தது. மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு மார்ச் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 6-ந் ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர, இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகாரிகள் கூட்டாக ₹1.40 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாத்தான்குளம் சம்பவம் போலவே, கேரளாவில் உதய்குமார் வழக்கும் காவல்நிலைய மரணத்திற்கு பெயர் பெற்ற வழக்காகும். கடந்த 2005-ல் திருவனந்தபுரம் காவல்துறையால் திருட்டு சந்தேகத்தில், பிடித்து செல்லப்பட்ட உதய், கனமான இரும்பு பைப்பால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில், 2018-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரு காவல்துறை அதிகாரிகளான கே. ஜித்குமார், எஸ்.வி. ஸ்ரீகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. காவல் நிலைய மரண வழக்கில், காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழகத்தில் சாத்தான்குளம் வழக்கை போல, 1998-99 காலகட்டத்தில் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர், ஒரு நிலத்தகராறு தொடர்பாக கியூ பிரிவு காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராஜன் லாக்-அப்பில் இருக்கும்போது கடுமையான சித்தரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார். அவரது உடலை காவல்துறையினர் ரகசியமாக அப்புறப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ராஜனின் மனைவி ராஜம்மாள் தனது கணவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு பல ஆண்டுகள் நீடித்தது. உள்ளூர் காவல்துறையினரின் விசாரணையில் திருப்தி இல்லாததால், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் ராஜன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதவி ஆணையர் உட்பட முக்கிய காவல்துறை அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் முடிவில், பாதிக்கப்பட்ட ராஜம்மாளுக்கு அரசு தரப்பில் பெரும் தொகை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த அனைத்து வழக்குகளிலிருந்தும், சாத்தான்குளம் வழக்கு வித்தியாசமானது. காரணம், பல குற்றவாளிகளுக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இது மாதிரியான வழக்குகளில், வழக்கமாக, ஒன்று அல்லது இரண்டு முக்கிய குற்றவாளிகளுக்கு மட்டுமே மரண தண்டனை கிடைக்கும். ஆனால், இங்கே ஆய்வாளர் முதல் காவலர் வரை 9 அதிகாரிகளுக்கும் ஒரே மாதிரியான அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இக்குற்றத்தை நீதிமன்றம் கொடூரமானது என்றும் வழக்கை அரிதிலும் அரிதான வழக்கு எனவும் அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது. மரண தண்டனை வழங்க அரிதிலும் அரிதான என்ற சட்டபூர்வக் குறியீடு பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது சாத்தான்குளம் தீர்ப்பின் தீவிரமான தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது.
சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் குற்றவாளிகள் நீதித்துறை நடுவரையே மிரட்டி உள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கில் கடுமையாக பலமணி நேரம் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டது குறித்து அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதி மற்றும் பெண் காவலர் பியூலா ஆகியோர் சாட்சியம் அளித்தனர். சக காவலர்களின் மிரட்டல்கள், உயர் அதிகாரிகளின் அழுத்தம் இவற்றையெல்லாம் மீறி, காவல் நிலையத்தில் நடந்த கொடூரமான சித்திரவதைகளை தலைமை காவலர் ரேவதி அளித்த துணிச்சலான வாக்குமூலம் முக்கிய சாட்சி. வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பதற்கு, சாட்சியங்கள் மிக துல்லியமாக இருந்ததுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. ஆகையால், தலைமைக் காவலர் ரேவதி அவர்களின் நேர்மைக்கு ஒரு ராயல் சல்யூட்.