விருதுநகர் மாவட்டத்தில் அரசு விழாவில் தனது பெயரை முதலில் போடாமல் அமைச்சர் கீர்த்தனா பெயரை போட்டது ஏன் என்று மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பிய வீடியோ பேசுபொருளாகி இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறை சார்பாக சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்காக வைக்கப்பட்ட பேனரில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மகளிர் நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இடம்பெற்றிருந்தது.
விருதுநகர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக ஜெகதீஸ்வரி இருந்து வருகிறார். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கிறார். இதனால் விழாவின் பேனரில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் பார்த்த அமைச்சர் ஜெகதீஸ்வரி டென்ஷனாகி இருக்கிறார்.

உடனடியாக அங்கிருந்த மாவட்ட ஆட்சியரையும் அழைத்திருக்கிறார். அப்போது அமைச்சர் ஜெகதீஸ்வரி, பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் என்னுடைய பெயர் தான் முதலில் இருக்க வேண்டும்.. எதற்காக அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலில் போட்டீர்கள்.. விழா ஏற்பாடுகளை நீங்கள் தானே செய்தீர்கள் என்று ஆட்சியர் சுகபுத்ராவிடம் கேள்விகளை எழுப்பி கொந்தளித்தார். உடனடியாக அங்கிருந்த மற்ற அதிகாரிகளுக்கும் டோஸ் விழுந்துள்ளது. இதன் காரணமாக நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.