தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும், மாநிலங்களவை எம்பி சுதீஷும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினை நேற்று இரவு நேரில் சென்று சந்தித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக திமுக மெகா கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என வரிசையாக அத்தனை களங்களிலும் இந்த பிரம்மாண்டக் கூட்டணி எதிரிகளை துவம்சம் செய்தது.
கடந்த 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், தேமுதிக திமுக கூட்டணியில் சேர்ந்தபோது, ‘இனி இவர்களை யாராலும் வீழ்த்த முடியாது’ என்றே அரசியல் விமரிசகர்கள் கணக்கு போட்டனர். ஆனால், 2026 தேர்தல் முடிவுகள் அந்த அத்தனை கணக்குகளையும் சுக்குநூறாக உடைத்து, தமிழக வரலாற்றிலேயே இல்லாத ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!
தேர்தல் முடிவுகள் வெளியானபோது அறிவாலயம் அதிர்ச்சியில் உறைந்தது. கடந்த முறை அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்த திமுக கூட்டணி, வெறும் 73 இடங்களை மட்டுமே பிடித்து சுருண்டது. நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனித்து களம் கண்டு, 108 இடங்களைக் கைப்பற்றி அரியணையை தட்டிப்பறித்தது. தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் அடுத்த அரங்கேறிய கூத்துகள் தான் ‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை’ என்ற பழமொழியை மீண்டும் நிரூபித்தன.

தோல்வி முகம் காட்டிய அடுத்த கணமே, திமுகவின் ‘கொள்கைக் கூட்டணி’ கோட்டை பலவீனமடையத் தொடங்கியது. முதலாவதாக, காங்கிரஸ் கட்சி சட்டென திமுகவின் கையை உதறிவிட்டு, புதிய ஆளுங்கட்சியான தவெகவின் பக்கம் தன் பார்வையை திருப்பியது. அதைத் தொடர்ந்து, இத்தனை காலம் திமுகவின் ‘மதச்சார்பற்ற’ கொள்கையை மேடைகளில் உருகி உருகிப் பேசிய இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற முஸ்லீம் லீக் அமைப்புகளும் அடுத்தடுத்து தவெக முகாமுக்குத் தாவின.
தற்போது வைகோவின் மதிமுகவும் தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பதற்கான இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. ஒரே ஒரு தோல்விக்காக, இத்தனை காலம் கட்டிக்காத்த ‘கொள்கை’, ‘கோட்பாடு’ அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, புதிய அதிகார மையத்தை நோக்கி ஓடும் இந்தக் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல், தமிழக மக்களிடையே கடுமையான விமரிசனங்களை எழுப்பியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் இந்த ஒட்டுமொத்த துரோகத்தால் கொதிப்படைந்த திமுக தலைமை, இனி யாருக்காகவும் வளைந்து கொடுக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. நேற்று திருவாரூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதி பாணியை நினைவு கூர்ந்தார். “கருணாநிதி ஒருபோதும் கூட்டணியை முறிக்கத் தொடங்க மாட்டார்,
அதே சமயம் வெளியேறுபவர்களைத் தடுக்கவும் மாட்டார்” என்று சூசகமாகக் குறிப்பிட்ட அவர், “இனி வரும் காலங்களில் திமுக தன் சொந்த பலத்தில் மட்டுமே களம் காண வேண்டும் என்ற பொதுமக்களின் எண்ணத்தை நாம் பரிசீலிக்க வேண்டும்” என தனித்துப் போட்டி குறித்தான அதிரடி சிக்னலை கொடுத்தார். ஆனால், சென்னை திரும்பிய ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், மாநிலங்களவை எம்பி சுதீஷும் திடீரென நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.