சட்டப்பேரவையில் ஆதாரத்தோடு பேசுங்கள் என முதல்வர் விஜயை கேட்டேன். அதனால் பழிவாங்கலின் உச்சத்தால் சோதனை தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என எ.வ. வேலு குற்றம் சாட்டியுள்ளார். முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பியதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் தாம் நிரபராதி என்பதை நிரூபிப்போம் என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான எ வ வேலு தொடர்பான 20 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை இந்த சோதனை நடந்தது. இதில் ரூ.40 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த எ.வ வேலு பேசுகையில், சட்டசபையில் முதல்வர் விஜய் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதை எதிர்த்து கேள்வி கேட்டேன். சட்டமன்றத்தில் நான் கேட்ட கேள்வியின் அடிப்படையில்தான் கரூரில் எங்கோ ஒரு அலுவலகத்தில் சம்பதப்பட்ட குற்றச்சாட்டை மையப்படுத்தி என் வீட்டிற்கு ரெய்டு வந்து இருக்கிறார்கள். எனது சொந்த கிராமத்தில் இல்லம் உள்ளது.
ஆனால், திருவண்ணாமலை கல்லூரிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். இப்போது வரை ஆய்வு நடத்தி கொண்டு இருக்கிறார்கள். அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். இப்படியெல்லாம் செய்தால் நாங்கள் பயந்துவிடுவோம் என்று அர்த்தம் இல்லை. நாங்கள் மிசாவையே பார்த்த இயக்கம். நீங்கள் வழக்கு தொடரலாம். ரெய்டு நடத்தலாம் நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கிறது.
கடைசியாக நமக்கு இருக்கும் நம்பிக்கை நீதிமன்றம்தான். நீதிமன்றத்தில் நான் நிரபராதி என நிரூபிப்பேன் நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பரிசுத்தமானவன். ஒரு பொய்யை பலமுறை சொல்வதாலேயே அது உண்மையாகிவிட முடியாது. நீதிமன்றத்திற்கு செல்வேன். நிரபராதி என்று காட்டுவேன். நான் திரும்பவும் சொல்கிறேன். எங்கள் தலைவர் ஸ்டாலின் மிசாவில் ஓராண்டு காலம் இருந்தார்.
அற்புதமான அரசை நடத்தி காட்டியிருக்கிறார். அதனால், எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நீதிமன்றத்தில் சந்திப்பேன். 40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்து இருப்பதாக கூறுவது பொய்யான தகவல். என்னுடைய வீட்டிலோ.. என்னுடைய கிராமத்தில் உள்ள வீட்டிலோ ஒரு பைசா பணமும் எடுக்கவில்லை. என்னுடைய அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்து சென்று இருக்கிறார்கள்.
கம்ப்யூட்டரில் எனது சுற்றுப்பயண பட்டியல், அறிக்கைகள் ஆகியவை தவிர வேறு எதுவும் இல்லை. கரூரில் சாலை போடப்பட்டது. அதற்காக பில் போடப்பட்டது. அங்கு தவறு நடந்துள்ளது. அந்த ஒப்பந்தராரருக்கு அமைச்சர் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி செய்தார் என்றுதான் முதல் தகவல் அறிக்கையில் போடப்பட்டுள்ளது. அங்கே வந்து டெண்டர் நடத்த வேண்டும் என்றால் கோட்ட பொறியாளர்தான் நடத்துவார்.
அதற்குரிய ஆவணங்கள் எல்லாம் அங்கேதான் இருக்குமே தவிர அமைச்சர் இல்லத்திலோ.. அலுவலகத்திலோ இருக்காது. டெண்டர் விடும் அதிகாரிகளின் அலுவலகத்திதான் ஆவணம் இருக்கும். என்னுடைய இல்லத்தில் இந்த ஆவணங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. அதிகாரத்தின் உச்சத்தில் என்னை டார்கெட் செய்கிறார்கள். கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. எதிர்க்கட்சி என்றால் கேள்வி கேட்கத்தான் வந்து இருக்கிறோம்.
கேள்வி கேட்கத்தான் செய்வோம். ஆதாரத்துடன் குற்றச்சாட்டு சொல்லுங்கள் என்று கேட்டதில் என்ன தவறு உள்ளது. நான் 7 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். எவ்வளவு அனுபவம் இருக்கும். நான் எவ்வளவு போராட்டம் நடத்தியிருக்கிறேன். புதுசா பதவிக்கு வந்து இருக்கிறார் என்பதற்காக நாங்கள் எழுந்து கேள்வி கேட்டதற்காக இப்படி ஒரு சோதனை.. அதிகாரத்தின் உச்சம் இப்படி ஒரு சோதனை நடைபெற்றுள்ளது” என எ.வ.வேலு தெரிவித்தார்.