தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா நாட்டின் மேற்குப் பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, தலைநகர் பொகோடாவிற்கு மேற்கே சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர்பகுதிக்கு அருகில், பூமிக்கு அடியில் 107 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. 7.4 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஆன்டிலியோகா, பொகோடா, மெட்டா உள்ளிட்ட பல பகுதிகளிலும் வலுவாக உணரப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடான ஈக்வடாரிலும் இதன் அதிர்வுகள் எதிரொலித்துள்ளன.

ஆரம்பத்தில் நிலநடுக்கத்தின் அளவு 7.4 என்று பதிவாகியிருந்த நிலையில், நிலநடுக்கவியல் அமைப்புகள் கூடுதல் தரவுகளை ஆராய்ந்து வருவதால் இந்த அளவுகளில் மாற்றங்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால மீட்புக் குழுவினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதால், உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.