தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி வியாழக்கிழமைக்குள் மனுத்தாக்கல் செய்யாவிட்டால் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் எச்சரித்துள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் பெரம்பூர் தொகுதியில் அவரது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் அந்த பகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இதுபோல திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். மேலும் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதற்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரித் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின் படி தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனுதாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவித்து இருந்ததாக சுட்டிக் காட்டினார்.
அதேபோல ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் தேர்தல் வழக்கு நிராகரிக்க கூறி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதற்கும் அவச அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பினரும் கேட்ட இரண்டு வார கால அவகாசத்தை வழங்க மறுத்த நீதிபதி, ஆகஸ்ட் 27-ந் தேதி வரை மட்டும் அவகாசம் வழங்கினார். அதற்குள் தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்களைத் தாக்கல் செய்யாவிட்டால், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்புக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.