தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் மணிக்கூண்டு அருகே தீரன் சின்னமலை அவரது உருவப்படத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சி மலர் தூவி மரியாதை செலுத்தினர். 1756-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி 1756-ம் ஆண்டு கொங்கு நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டம் காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தம்பதிக்கு மகனாக கடந்த பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
இவர் தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான சிலம்பாட்டம், மல்யுத்தம், வாள்பயிற்சி, வில்பயிற்சி, தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். அவர் கற்ற பல தற்காப்புகலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம் வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.
கொங்கு நாடு மைசூர் மன்னர்களான ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்து செல்லப்படுவதைக் கண்டு ஒருநாள் தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற தீர்த்தகிரி, அந்த வரிப்பணத்தை பிடுங்கி, ஏழை, எளிய மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.

இதை தடுத்த ஹைதர் அலியின் திவான் முகமது அலி யார் நீ எனக் கேட்க, ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையிலே ஒரு சின்னமலை பறித்தான் என்று போய்க் கூறு!’ எனக் கம்பீரமாகச் சொல்லியனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப் பட்டார்.இயல்பாகவே தலைமைப் பண்புடன் வளர்ந்த சின்னமலை, தனது மக்களைக் கொடுமைப்படுத்தியவர்களை எதிர்த்துப் போரிட நினைத்தார்.
1790-களின் பிற்பகுதியில் திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்க்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் ஒன்றாகக் கைகோர்த்தனர். சின்னமலை, திப்பு சுல்தான் கூட்டணி ஆங்கிலேயருடன் மோதியது. அதில் திப்புவின் கோட்டையை மட்டுமே ஆங்கிலேயர்கள் தரிசித்துச் சென்றனர். இது பொறுக்காத ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளை நயவஞ்சமாகத் தீட்டினர். 1799-ல் நடைபெற்ற நான்காம் மைசூர்ப் போரில் திப்பு மரணம் அடைய, மைசூர் ஆங்கிலேயர் வசம் போனது. திப்பு சுல்தானின் வீரமரணத்திற்குப் பின்னர், கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் சின்னமலை தங்கியிருந்தார்.
திப்புவின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, சின்னமலைக்கு சொந்தமான சிவன்மலை- பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார். தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டை நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார். ஆங்கிலேயர்கள் 1802-ல் குதிரைப் படைகளை அனுப்பினர். இப்படை ஓடாநிலையில் சின்னமலையின் படையுடன் மோதியது. மீண்டும் ஆங்கிலேய அரசு தோல்வி கண்டது.
1803-ல் ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையையும் கையெறி குண்டுகள் வீசி சின்னமலை வெற்றிக் கண்டார். அவரின் கோட்டையைத் தகர்க்க பீரங்கிப் படையோடு ஆங்கிலேயர்கள் வருவதை அறிந்தவர், கோட்டையை விட்டு வெளியேறினார். அறச்சலூர் அருகிலுள்ள ஓடாநிலையில் அவர் கட்டிய பலமிக்க கோட்டையை, 143 பீரங்கிகளை வைத்தே, பிரிட்டிஷ் படைகள் இடிக்க வேண்டிதாக இருந்தது.
சின்னமலை அந்தக் கோட்டையில்தான் எண்ணற்ற துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், வெடிமருந்துகளையும் தயாரித்தார். ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களைத் தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை, யாராலும் வீரத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. எனவே சூழ்ச்சியால் சின்னமலையை வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, தங்கள் வலையில் விழச் செய்ய பழனிமலைக்கு அருகிலுள்ள வனத்தில் தீரன் சின்னமலை இருப்பதைக் காட்டிக் கொடுத்தான்.

தீரன் சின்னமலையையும், அவர் தம்பிகள் மற்றும் படைவீரர்களையும் கைது செய்து, அவர்களை சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், 1805-ல் ஆடிப்பெருக்கான 18-ம் நாளன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீர மரணமடைந்தார்.ஆங்கிலேயர்களைப் பலமுறை வெற்றி கண்டு, புறமுதுகிட்டு ஓடச்செய்து, கடைசியில் சூழ்ச்சியினாலே மாண்ட தைரிய வீரன், தீரன் சின்னமலையின் தீரச்செயல்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று நாள்அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் தீரன் சின்னமலையின் திருஉருவச் சிலைக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்ட தலைமை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு சமூக நீதிப் பார்வையோடு அழைப்பு கொடுத்ததன் அடிப்படையில் நாமக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் குமரவேல் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் நாமக்கல் மணிக்கூண்டு அருகே தீரன் சின்னமலை அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர் குமரவேல், நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மோகனூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மோகனூர் ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.