பொது விநியோகத் திட்டம், எரிவாயு விநியோகம் மற்றும் விலைவாசி நிலவரங்கள் ஆய்வு செய்யும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் நுகர்வோர் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளைக் கண்காணிக்கவும் நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டங்கள் காலாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர வட்ட வழங்க அலுவலகத்தில் வட்டார வழங்கல் அலுவலர் ரம்ஜான் பேகம் தலைமையில் நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளர் வேணி முன்னிலை வகிக்க நகராட்சி ராஜு, பொதுப்பணித்துறை சண்முகம், பழனிவேல். இ.பி .சுரேஷ், சுகாதாரத்துறை முனீஸ்வரன், போலீஸ் ரவிச்சந்திரன், வருவாய் துறை சிவமணி மற்றும் எரிவாய்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மேலும் நுகர்வோர் ரத்தினவேல் முருகானந்தம், கோர்ட் வெங்கடேசன், கமல் கணேசன், வரம்பியம் ராஜேந்திரன், அண்ணாதுரை, கலா, ஜான்சி ராணி மற்றும் சரோஜினி கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் கீழ்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார். அப்போது, திருத்துறைப்பூண்டி தாலுகா அளவில் நிலுவையில் உள்ள புதிய குடும்ப அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி வருவாய் துறையில் நிலுவையில் உள்ள வாரிசு சான்று, பட்டா மாற்று சான்று, ஜாதிச் சான்று ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதம மந்திரி சூரிய மின் இணைப்பு திட்டத்திற்கு பயனாளிகளிடம் வசூலிக்கப்பட்ட ரூபாய் 30 ஆயிரத்தை உடனடியாக பயனாளிகளுக்கு திரும்ப வழங்க வேண்டும்.

நியாயவிலைக் கடையில், ஆவின் பால் அதிகமாக விற்பனை செய்ய வேண்டும். காவல்துறைக்கு வரும் முதல்வர் தனிப்பிரிவு கோரிக்கை மனுக்களை உடனடியாக தீர்க்க வேண்டும். வேலூர் பாலம் இருந்து மண்ணை சாலை வழியாக பட்டுக்கோட்டை சாலையை இணைக்கும் பைபாஸ் சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

அங்கீகாரம் இல்லாமல் மீன்களை கண்ட இடங்களில் விற்பதை தடை செய்ய வேண்டும். மாமிச மிச்ச கொழுப்பு மற்றும் கழிவுகளை குளத்தில் கொட்டுவதை தடுக்க வேண்டும் போன்ற முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து தீர்மானங்களையும் பரிசீலனை செய்த திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் 30 நாட்களில் தீர்மானங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோருக்கு உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து இந்த கூட்டத்திற்கு ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.