திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில், வனவிலங்குப் பொருட்கள் கடத்தப்பட்டு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் அவர்கள் தலைமையிலான வன அதிகாரிகள் மற்றும் சத்திரப்பட்டி கிராம நிர்வாக அலுவலர்ஆகியோர் இணைந்து, செம்பட்டி பிரிவு, சித்தையன்கோட்டை பீட்டிற்குட்பட்ட டி. கோம்பை கிராமத்தில் இன்று அதிரடி வீட்டு சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மான் கொம்பு – 1, அலுங்கு ஓடுகள் 2 கிலோ 300 கிராம், சந்தன சிராய் 200 கிராம், கருங்காலி சிராய் 360 கிராம் மற்றும் பழுதடைந்த நிலையிலுள்ள ஏர் கன் 1 உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இப்பொருட்கள் வழக்குகளின் அடிப்படையில், வனக்குற்ற அறிக்கை (WLOR.8/2026) பதிவு செய்யப்பட்டு, டி. கோம்பை பகுதியைச் சேர்ந்த தருமர் என்பவரின் மகன் ராமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.