பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு அமிழ்தம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அதற்குப் பதிலாக, பாலைக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்கின்றன வேதங்கள். அமெரிக்காவில் கோதுமை பிரதான உணவு, சீனாவில் பிரதான உணவு கோதுமை மற்றும் அரிசிப் போல இந்தியாவில் பிரதான உணவு அரிசி. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லாருக்கும் ஏற்ற உணவு பால் தான்.
மனித இனம், நாகரிகம் அடையும்போதே அதனுடன் வளர்ந்தது இந்த பால் பழக்கம். கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் டி உள்ளிட்ட பல சத்துகளைக் கொண்டுள்ள பால், தயிர், வெண்ணெய், நெய், பன்னீர், பால் பொருட்கள் என்று பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றது. உலகில், தான் உற்பத்தி செய்யும் பாலை தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி, மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி, உயிரைக் காப்பவர்கள் பால்காரர்கள்.
நாம் தூங்கி விழிப்பதற்கு முன்பே, நமக்காக கடுமையான குளிர், சுட்டெரிக்கும் வெயில், பனி, கொட்டித் தீர்க்கும் மழையாக இருந்தாலும் அதிகாலையிலே மாடுகளைத் தூய்மைப்படுத்தி, அவற்றுக்குத் தீவனம் வைப்பது, பின்னர் பால் கறப்பது என உழைக்கத் தொடங்கும் உன்னதமான உழைப்பாளி பால்காரர். பசு ஒரு லிட்டர் பாலை கொடுப்பதற்கு, பசுவின் உடலில், சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், பசுவுடன் சேர்ந்து கதிரவன் தோன்றும் முன்பே தன் கடமையைத் தொடங்கும் பால்காரர்களின் அன்றாட வாழ்க்கையும், அவர்கள் படும் பாடுகளும் விவரிக்க முடியாதவை.
தமிழகத்தில், 8,800 பால் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள, 3.16 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள்தோறும், 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், ஆவின் வாயிலாக நாள்தோறும், 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, 4.3 சதவீதம் கொழுப்புச்சத்து மற்றும் 8.2 சதவீதம் இதரச் சத்துக்கள் அடங்கிய, ஒரு லிட்டர் பாலுக்கு, கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில அரசின் ஊக்கத்தொகையாக 3 ரூபாயும் என, 38 ரூபாய், கடந்த 2022 நவம்பர் மாதம் முதல் வழங்கப்படுகிறது.
ஆனால், பசுந்தீவனம், அடர் தீவனம், பால் கறவைக் கூலி, மருத்துவச் செலவுகள் மற்றும் இதர பராமரிப்பு செலவுகள் போன்றவை கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, கறவை மாடுகள் வளர்ப்போர் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். பஞ்சாப்பில் 65 ரூபாய், மத்தியப்பிரதேசத்தில் 62 ரூபாய் மற்றும் கர்நாடகாவில் லிட்டருக்கு சராசரியாக 50 ரூபாய் என பால் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் கடந்த 19-ந் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பால்கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். அதாவது, கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக அதிகரிக்கப்படும் என கூறினார். ஆனால், இதனை பால் உற்பத்தியாளர்கள் ஏற்கவில்லை. காரணம், சட்டமன்றத் தேர்தலின்போது, தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் பால் லிட்டருக்கு ரூ.44 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் வாக்குறுதியின்படி விலை உயர்வு வழங்கப்படாதது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தி விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு பாலை மிகுந்த வலியுடனும், வேதனையுடன் தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தினால்தான், தங்களுக்கு சிறிதளவாவது லாபம் கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்க, லிட்டருக்கு ரூ.41 வழங்கிவிட்டு தவெக அரசு, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்ததாக நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால், எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல், விவசாயிகளை மேலும் நெருக்கடிக்கு தான் ஆளாக்கியிருக்கிறது. காரணம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதும் தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலையும் உயர்த்தப்படுவதால், விவசாயிகளுக்கு விலை உயர்வின் முழு பலனை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஏற்கனவே, ஆவினுக்கு பால் உற்பத்தியாளர்கள் பால் கொடுப்பதை நிறுத்தி தனியாருக்கு கொடுக்க ஆரம்பித்ததன் காரணத்தால் ஆவின் பால் சரிவர கிடைக்காத காரணத்தால் மக்கள் பலர் தனியார் பாலை வாங்கத் துவங்கி விட்டனர். இதனால் ஆவின் பால் விற்பனை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஒன்று தவெக அறிவித்தபடி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், இல்லையென்றால் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும். ஒரு லிட்டருக்குக் குறைந்தபட்சம் 10 ரூபாயாவது உயர்த்தி வழங்க வேண்டும்’ என்பது பால் உற்பத்தியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். ஆனால், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை நட்டாற்றில் விட்டதுபோல், இப்போதும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறது தவெக அரசு. தனியார் நிறுவனங்கள் பாலுக்கான கொள்முதல் விலையை அதிகமாக வழங்கி வருவதால் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு சென்று விட்டனர்.
இதனால், தற்போதே ஆவினுக்கு பால் வரத்து சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த சூழலில், இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் பால் வார்ப்பாரா? பொறுத்திருந்து பார்க்கப் போதுமான காலமில்லை. உடனடியாக இதை கவனத்தில்கொண்டு நல்லதோர் அறிவிப்பை வெளியிடுவார் என உறுதியாக நம்புவோம். தவறும்பட்சத்தில் பால் நிறுத்தப் போராட்டம் நடத்தவிருப்பதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் கதிரவன் தோன்றும் முன்பே தன் கடமையைத் தொடங்கும் பால்காரர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் படும் பாடுகளை உணர்ந்து மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள் பால் என்பதை தமிழக அரசு அறிந்தும் செயல்படுமா..!?