நான் மட்டும் அந்த கலெக்டராக இருந்திருந்தால், என்கவுன்ட்டர் செய்திருப்பேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தலைமைச் செயலாளரிடம் ஆட்சியர் பத்மஜாவின் கணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொந்தளித்து வருகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் இதுவரை அமைதி காத்து வருகிறார். இதுதொடர்பாக பொதுவெளியில் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதனால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுகுறித்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்நேரம் நான் மட்டும் அந்த கலெக்டராக இருந்திருந்தால், அவரை என்கவுன்ட்டர் செய்திருப்பேன். சுட்டு தள்ளி இருப்பேன்.. யாராக இருந்தாலும் கட்டிப் போட்டிருப்பேன். வீடு தேடி ஒருவர் வந்து தொல்லை கொடுத்தால், என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டுமா? அடித்து உதைத்து சுட்டு தள்ள வேண்டும். அந்த மாதிரி செய்திருக்க வேண்டும். ஆனால் பாவம் அந்த கலெக்டர்.. எவ்வளவு மனவேதனை இருந்திருக்கும்.. ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை.. சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.