திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வரும் சூர்யா என்பவர் ஈரோடு பாரதி நகரை சேர்ந்த வினோதினிக்கும் 5 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்து தனிஷ் என்ற 4 வயது மகன் உள்ளான். வினோதினி, எந்நேரமும் செல்போனில் மூழ்கியிருந்ததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரைப் பிரிந்து, ஈரோட்டில் தன் மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிமுகமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிம்கார்டு விற்பனையாளர் நவநீதிகிருஷ்ணனுடன் வினோதினிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. சமீபகாலமாக நவநீதிகிருஷ்ணனின் போக்கில் மாற்றம் தெரிந்ததால் அவருடன் பேசுவதை வினோதினி தவிர்க்கத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த நவநீதிகிருஷ்ணன், நள்ளிரவில் வினோதினியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து வினோதினி மீது ஊற்றி தீ வைத்தார்.
தீப்பற்றியதும் வினோதினி நவநீதிகிருஷ்ணனையும் இறுகப் பிடித்துக் கொண்டதால் அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த வினோதினி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் வினோதினி அனுமதிக்கப்பட்டதுமே, ஈரோடு கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி நேரில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதில் வினோதினி, நவநீதகிருஷ்ணன் தான் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார் என மரண வாக்குமூலம் அளித்தார்.
இதனிடையே, நவநீதகிருஷ்ணனை தேடும் பணி ஆரம்பமானது. அவரது செல்போன் சிக்னலை வைத்து ஈரோடு தாலுகா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.. அதில், நவநீதகிருஷ்ணனின் செல்போன் டவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை காட்டியது. இதையடுத்து, கரூர் சென்று காவல்துறையினர் தனியார் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நவநீதகிருஷ்ணனும் தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. வினோதினி இறந்ததையடுத்து, நவநீத கிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்தனர்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் உடனடியாக கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் நவநீதகிருஷ்ணனை காவல்துறையினர் கண்காணித்தும் வருகிறார்கள்.
நவநீதகிருஷ்ணன் வினோதினி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததுமே, வினோதினி வலியால் அலறியிருக்கிறார். உடலில் தீ மளமளவென பரவியதை நவநீதகிருஷ்ணன் அதை பக்கத்தில் நின்று பார்த்து கொண்டிருந்தாராம். ஆனால் கொஞ்சமும் நவநீதகிருஷ்ணன் எதிர்பார்க்காத நிலையில் அவர் தப்பி செல்லாதவாறு தீயுடன் நவநீதகிருஷ்ணனையும் கட்டி பிடித்துள்ளார். இதில், நவநீதகிருஷ்ணன் உடலிலும் தீ பரவியது. அதுமட்டுமல்ல, நவநீதகிருஷ்ணனுடன் வினோதினி இன்ஸ்டாவில் பழகியபோது, அதை கணவர் சூர்யா வினோதினிக்கு புத்திமதி சொல்லி ஆரம்பத்திலேயே தடுத்திருக்கிறார்.
எனினும் கள்ளக்காதல் வினோதினியின் கண்ணை மறைக்க நவநீதகிருஷ்ணனனுடைய கள்ளக்காதலை கைவிடவில்லை. போதாக்குறைக்கு வினோதியிடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை, சூர்யாவுக்கு தொடர்ந்து அனுப்பி வந்தாராம் நவநீதகிருஷ்ணன். இதனால்தான் வினோதினி மீது உச்சக்கட்ட வெறுப்பு ஏற்பட்டு, வினோதினியை அவரின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு சூர்யா பிரிந்து வாழ ஆரம்பித்தாராம். இந்த தகவலும் விசாரணையில் தற்போது வெளியாகி உள்ளது.