மின்சார டெபாசிட் தொகை செலுத்தாமல் மின் கட்டணத்தை மட்டும் தனியாகச் செலுத்துவதற்கு லஞ்சம் வாங்கிய அதிகாரியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் முகம்மது இப்ராஹிம் என்பவர் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு இந்த மாத மின் கட்டணத்துடன் கூடுதலாக டெபாசிட் தொகையும் சேர்ந்து உயர்ந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விவரம் அறிய வண்ணாங்கோவில் மின் வாரிய ஆர்.எஸ். பிரிவு அதிகாரி பழனிசாமியிடம், தனது மின்கட்டணம் ரூ. 7,000 மட்டுமே வந்துள்ளதாக முகம்மது இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அதிகாரி பழனிசாமி, டெபாசிட் தொகையான ரூ. 21,000 இதோடு சேர்த்து கட்ட வேண்டும் என்றும், அப்போது தான் உங்களால் மின் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மின் கட்டணத்தை மட்டும் தனியாகச் செலுத்துவதற்கு வழிவகை செய்ய ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஒரு வழியாக பேசி ரூ.6,800 விற்கு “ஜிபேல வேண்டாம்.. காச கைல எடுத்துட்டு வாங்க”… என அதிகாரி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முகம்மது இப்ராஹிம் அந்த அதிகாரியிடம் பேசி ரூ. 6,800 லஞ்சமாக தொடுத்துள்ளார். இதை மறைமுகமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது . அந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் காட்சிகள் தற்போது ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மின்வாரிய அதிகாரி பழனிசாமி லஞ்சம் பெறும் இந்த வீடியோ திருச்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.