கரூர் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தவெக பொறுப்பாளர்களே. அன்றைய ஆட்சியாளர்களான திமுக மீது குற்றம் சாட்டுவது முறையல்ல என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருமுருகன் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், அச்சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள்ளாக கள ஆய்வினை செய்ததில் நாங்கள் கண்டறிந்த உண்மைகளை முன்வைத்தோம். அன்று காலை 8 மணி முதலாக காத்திருந்த மக்களுக்கான குடிநீர் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் தவெக பொறுப்பாளர்களால் செய்துதரப்படவில்லை என்பதை அன்றே ஊடகச் சந்திப்பில் வெளிப்படுத்தினோம்.

சம்பவ இடத்தில் கொட்டிக்கிடந்த செறுப்புகளுக்கு மத்தியில் தண்ணீர் பாட்டில்கள் எவற்றையும் போதுமானதாக காண முடியவில்லை என்பதைச் சொன்னோம். இந்த வசதிகளை செய்து கொடுத்திருந்தால் பல இழப்புகளை தடுத்திருக்க இயலும். இதுபோல பல தவறுகள் நடந்திருந்ததை அங்கிருந்த மக்கள் வாயிலாக அறிந்ததை பதிவு செய்துள்ளோம். மேலதிக விசாரணைகள் நடந்தால் பல விவரங்களை அனைவரும் அறிய இயலும். இந்த சம்பவம் குறித்து அன்றய ஆட்சியாளர்களான திமுக மீது குற்றம் சாட்டுவது முறையல்ல.

அப்படியான குற்றச்சாட்டை வைப்பதெனில் உரிய விளக்கங்கள், ஆதாரங்களோடு வைப்பதுதான் ஆட்சியிலிருக்கும் தவெக கட்சிக்கு அழகாகும். அவ்வாறான முழுமையான விசாரணை நடத்தி நாங்கள் அறியாத தகவல்களை ஒருவேளை தவெக அரசு அறிந்திருந்தால் வெளிப்படுத்துங்கள். மாண்புமிகு அமைச்சரின் மேலோட்டமான குற்றச்சாட்டு ஏற்புடையதாக அமையாது என திருமுருகன் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.