‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் ஹரியானாவை போல, மகாராஷ்டிராவில் செல்லாது..!

‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் ஹரியானாவை போல, மகாராஷ்டிராவில் செல்லாது என மகா யுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஆளும் மகா யுதி கூட்டணிக்கு ஆதரவாக, உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது உரையில் ‘பட்டேங்கே தோ கட்டங்கே’ எனும் கோஷத்தை தவறாமல் எழுப்பி வருகிறார். இந்த கோஷம் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால், ஹரியானா பேரவை தேர்தலில் முதன்முறையாக எழுப்பப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியும் தனது பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத்தின் கோஷத்தை அங்கீகரித்து பேசினார். ஹரியானாவில் இந்துக்களின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைக்கும் இக்கோஷம், பாஜக வெற்றிக்கு அடித்தளமிட்டதாக கருதப்படுகிறது. இது தற்போது, அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் பாஜகவின் அதிகாரபூர்வக் கோஷம் என்றானது. இதை மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்திலும் தொடரும் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு, ஆளும் மகா யுதி கூட்டணியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எதிர்ப்பவர்களில் ஒருவரான பாஜக MLA பங்கஜா முண்டே பேசுகையில், உத்திரபிரதேச மாநிலம் போன்ற மாநிலங்களில் எடுபடும் இந்த கோஷம் மகாராஷ்டிராவில் தேவையில்லை. ஏனெனில் இங்கு வட மாநிலங்கள் போன்ற அரசியல் சூழல் இல்லை. எனவே எங்கள் கட்சியை சேர்ந்தவர் எழுப்புகிறார் என்பதற்காக அதை நாங்களும் ஏற்க முடியாது என தெரிவித்தார்.

ஜெகத்குரு பரமஹன்ஸ்: மோடியின் அரசியல் வாரிசு யோகி ஆதித்யநாத்..! அடுத்து யோகி ஆதித்யநாத் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது..!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசாக வளர்ந்திருப்பதாக என அயோத்தி மடத்தின் தலைவர் ஜெகத்குரு பரமஹன்ஸ் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் முடிந்த தீபாவளியில் அயோத்தியின் தீப உற்சவத்தில் இரண்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அயோத்தி உள்ளடக்கிய பைஸாபாத் மக்களவை தொகுதி எம்பியான அவ்தேஷ் பிரஸாத் அழைக்கப்படவில்லை.

உத்தரப் பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியைச் சேர்ந்த அவ்தேஷ் இதற்காக, பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்யுடன் அயோத்தியின் துறவிகளையும் மடங்களின் தலைவர்களையும் விமர்சித்து இருந்தார்.

இதை கண்டிக்கும் வகையில் அயோத்யாவின் ராம் ஜானகி கோயிலின் தபஸ்வீ மடத்தின் தலைவர் ஜெகத்குரு பரமஹன்ஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், சமாஜ்வாதி எம்.பி.,யான அவ்தேஷை கண்டித்ததுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் நாட்டின் அடுத்த பிரதமர் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெகத்குரு பரமஹ்ன்ஸ் தனது அறிக்கையில், அவ்தேஷ் பிரஸாத்தின் கருத்துக்களை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இவர் ஓர் ‘அழுகிய மாம்பழம்’ போல் இருப்பவர். அயோத்தியின் களங்கமாக இருப்பவருக்கு துறவிகளை விமர்சிக்கத் தகுதி இல்லை. உத்தரப் பிரதேசத்தின் திறமைப்படைத்த சிறந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து பேசவும் அவருக்கு அருகதை இல்லை.

பிரதமர் மோடியின் அரசியல் வாரிசாக வளர்ந்திருப்பவர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பிரதமர் மோடிக்கு பின் அப்பதவியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமர்த்தப்பட வேண்டும். இந்த கோரிக்கை நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் இடையேயும் கிளம்பி வருகிறது. எனவே, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம் நாட்டின் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என ஜெகத்குரு பரமஹன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஞானவாபி என்பதே கடவுள் விஸ்வநாதர்தான்.. யோகி ஆதித்யநாத் மசூதி சர்ச்சையை மீண்டும் தூண்டுகிறாரா..?

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் சமீப காலமாக இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடந்த தொடரப்பட்ட வழக்கை விசாரித்து மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஞானவாபி மசூதி வளாகத்தில் தரையின்கீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ணெதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் மசூதி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தடை விதிக்க கோரி இந்து அமைப்புகள் அளித்த மனுவையும் நேற்றைய தினம் வாரணாசி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

கோரக்பூரில் நடத்த கருத்தரங்கு ஒன்றில் சிவனின் வடிவமான விஷ்வநாதர் தோன்றிய முன் கதையை கூறிய அவர், ஞானவாபி என்பதே கடவுள் விஸ்வநாதர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக அதை மக்கள் மசூதி என்று அழைக்கின்றனர். இஸ்லாமியர்கள் இந்த வரலாற்று தவறை திருத்திக்கொள்ள வேண்டும். ஞானவாபியின் சுவர்கள் உரத்து கதறுகின்றன. ஞானவாபிக்குள் ஜோதிலிங்கமும் கடவுளர்களின் சிலைகளும் உள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Yogi Adityanath: “ஒற்றுமையாக இருந்தால்தான் தேசம் ஒற்றுமையாக இருக்கும்”

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி உத்தரப் பிரதேசம் மாநிலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அந்தவகையில் ஆக்ராவில் துர்காதாஸ் ரத்தோரில் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது ஒற்றுமையில்லை என்றால் வங்கதேசத்தைப் போல் நாமும் தனித்து விடப்படுவோம் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுரை கூறியுள்ளார்.

விழாவில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று நான் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் நல்க பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கையில் பலமும், வளமும் சேரட்டும். நீங்கள் அனைவரும் தனித்தனியாக வளர்ந்த பாரதத்தை உருவாக்க உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்

தேசத்தில் ஒற்றுமை வேண்டும். சகோதர, சகோதரிகளே ஒற்றுமையில்லாமல் எதுவும் செய்ய முடியாது. எதையும் சாதிக்கவும் முடியாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் தேசம் ஒற்றுமையாக இருக்கும். நாம் பிரிந்துகிடந்தால் நாம் தனித்து விடப்படுவோம். வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கத்தானே செய்கிறீர்கள். அந்தத் தவறுகள் இங்கேயும் நடந்துவிடக் கூடாது” என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.

உத்தப்பிரதேசத்தில் மெகா மோசடி: வந்ததும் வந்த அந்த பெண்ணுடன் மாலையை மாத்திட்டு பணம் வாங்கிட்டு போங்க..!

உத்தப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்நிலையில் பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேட்கி சிங் முன்னிலையில் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த கூட்டு திருமண நிகழ்வில் திருமணத்தில் ஏழைப் பெண்களுக்கு ரூ35 ஆயிரம் பணம், ரூபாய் 65 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என்று உ.பி உத்தப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்தார்.

ஆனால் இந்த திருமணத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட பெண்களையும், அவர்களது கணவர்களையும் அழைத்து வந்து, அவர்களை மீண்டும் மணமக்களாக நிறுத்தினர். மேலும், ஏராளமான பெண்கள் ஜோடி இன்றி தனியாக நின்றனர். அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மாலையை, தாங்களே அணிந்துகொண்டனர்.

சிலர் திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அந்தப் பெண்களிடமும், இளைஞர்களிடமும் பண ஆசை காட்டி, அவர்களையும் மணமக்களாக நிறுத்தினர். அவர்கள் அங்கு உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளாமல், வெறுமனே மாலையுடன் முன்பின் தெரியாத பெண்ணுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தங்களுக்குத் தாங்களே மாலையை அணிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கிருந்து தனித்தனியாக கலைந்து சென்றனர். 588 ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடந்தது போல புகைப்படத்தைக் காட்டி அரசிடம் பணம் பெற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தப் போலி திருமணத்தை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த மோசடி அம்பலமானது.

இதையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அரசு உதவித்தொகையை அபகரிப்பதற்காக முறைகேட்டில் ஈடுபட்ட 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் போலி ஜோடிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட திருமண விழாவின் மூலம் சுமார் ரூ. 2 கோடி அளவுக்கு பணம் சுருட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியாக மணப்பெண், மணமகனாக படித்தவர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 2000 வரை பணம் கொடுத்தது அம்பலமானது. திருமணம் பார்க்க வந்த சில இளைஞர்களை பணம் கொடுத்து மணமகனாக நடிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

உத்தரபிரதேசத்தில் அடிக்கும் புயலால் யோகி ஆதித்யநாத்திற்கு பீதி

அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக கட்சியை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதனால் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. ஆகையால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா சூறாவளியாக சுழன்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

பிரியங்காவின் இந்த தீவிர களப்பணியை மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘உத்தரபிரதேசத்தில் ஒரு புயல் அடித்து வருகிறது. அதன் பெயர் பிரியங்கா காந்தி. இது வருகிற தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க உதவும். உத்தரபிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகளை பிரியங்கா காந்தி எழுப்பி வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் அரசும் அவரால் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறது’ என்று தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுக்க …! மீண்டும் துடைப்பத்தை கையிலெடுத்த பிரியங்கா காந்தி…!

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது காவல்துறையினர், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே காவல்துறையினர் கைது செய்து, சித்தாப்பூர் விருந்தினர் மாளிகையில் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டபோது அங்குள்ள அறையை சுத்தம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதனை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்து இருந்தார்.”மக்கள் அவர்களை இம்மாதிரியான பணிகளை மேற்கொள்ள தகுதியுள்ளவர்களாக மாற்ற விரும்புகின்றனர். அதற்குதான் அவர்களை உருவாக்கியுள்ளனர். மற்றவர்களுக்கு தொல்லை தருவதற்கும் எதிர்மறை கருத்துகளை பகிர்வது மட்டுமே இவர்களின் பணி. இவர்களுக்கு வேறு வேலையே இல்லை” என கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக இன்று தலித்துகள் வசிக்கு காலனிக்கு சென்ற பிரியங்கா, துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். மேலும், இது எளிமை மற்றும் சுயமரியாதையின் சின்னம் எனக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் மக்களுடன் உரையாடிய பிரியங்கா, “இப்படி விமரிசித்து அவர் என்னை அவமானப்படுத்தவில்லை. சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு ஊழியர்களாக உள்ள கோடிக்கணக்கான தலித் சகோதர சகோதரிகளை அவமானப் படுத்தியுள்ளார்.

உங்கள் அனைவருடன் சேர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள இங்கு வந்துள்ளேன். துடைப்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்வது சுயமரியாதைக்கான செயல் என்பதை யோகிக்கு தெரியப்படுத்தினேன். உத்தரப் பிரதேச முதல்வர் சாதிய ரீதியாக பேசி தனது தலித்-விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்” என தெரிவித்தார்.