எடப்பாடி பழனிசாமி சூளுரை: “2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுபுள்ளி..!”

“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மேல்சித்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “அதிமுக வலுவான கூட்டணி இல்லாமலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தலை விட, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 1 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றது. இதனால், அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது குறித்து முதலமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலோடு தான் ஒப்பிட வேண்டும். ஆனால் நாமக்கல்லில் ஸ்டாலின் பேசும்போது, அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டதாகவும், நான் கனவு காண்பதாகவும் பேசுகிறார்.

நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக தோல்வி அடைந்தது. 2019-ஆம் ஆண்டை விட 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 7 சதவீதம் குறைந்துள்ளது. 2019-ஆம் ஆண்டை விட, 2024 நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 1 சதவீதம் வாக்கு உயர்ந்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணியை நம்பித்தான் கட்சி நடத்துகிறார், ஆட்சி செய்கிறார். திமுக செய்த சாதனைகளை நம்பி தேர்தலில் நிற்பதில்லை. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறிவிட்டு, ‘கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கும் ஆனால் பிளவு இருக்காது’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். இதற்கு கூட்டணியில் விரிசல் என்று தான் அர்த்தம்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் 1 இடத்தை மட்டுமே வென்ற அதிமுக 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வென்றது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலை ஒப்பிட்டால் திமுக குறைவான இடத்தில் தான் வென்றுள்ளது. ஊழல் செய்வதில் தான் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நான் ஜோசியராக மாறிவிட்டேனா எனக் கேட்கிறார். நான் கூறிய ஜோதிடம் பலிக்கும், திமுக தோற்கும்.

2026 தேர்தலில் வென்று அதிமுக நிச்சயம் ஆட்சியமைக்கும். திமுக கம்பெனிக்கு ஸ்டாலின் தான் சேர்மன். குடும்ப உறுப்பினர்கள் உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் இயக்குநர்கள். அதனால் தான் ஸ்டாலின் முதலமைச்சராகவும், உதயநிதி துணை முதலமைச்சராகவும், கனிமொழி எம்பி-யாகவும் இருக்கின்றனர். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். உதயநிதியை துணை முதலமைச்சராக்கியது தான் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் சொல்கிறார். எனக்கு ஆளுமை இருந்ததால் தான் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சியை மேற்கொண்டும் நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். திமுக ஆட்சியில் கொண்டு வந்த எந்தவொரு திட்டத்தாலும் தமிழ்நாடு முதலிடம் பெறவில்லை.

அதிமுக ஆட்சியில் பல்வேறு தேசிய விருதுகளை பெற்றோம். திறன் மிக்க அரசாக அதிமுக அரசு விளங்கிய நிலையில், அதிமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார். நாம் பெற்ற தேசிய விருதுகளே அதிமுகவின் சிறப்பான ஆட்சிக்கு சான்று. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஊர் ஊராகச் சென்று பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனுவை வாங்கினார்.

அந்த பெட்டியை திறந்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர். சேலத்தில் ஒருவரை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்துள்ளனர். அவரோ தமிழக அமைச்சர் என்பதை உணராமல், சேலத்தை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகிறார்.

இத்தனை நாட்கள் கும்பகர்ணன் போல தூங்கிவிட்டு, தேர்தல் நெருங்குவதால் மக்களை சந்தித்து மனுக்களை பெறுவதாக நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். திமுக ஆட்சியில் அனைத்து வரியையும் உயர்த்திவிட்டார்கள். ஆனால், திட்டங்கள் தான் வரவில்லை. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் நிச்சயம் பலமான கூட்டணி அமையும்.

தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் பழுதடைந்த பேருந்துகள் தான். பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்பது வெறும் அறிவிப்பு தான். மக்கள் நலத்திட்டம் இல்லை. மாதா மாதம் கடனை வாங்கித்தான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். இந்தக் கடன் மக்கள் தலையில்தான் விழும். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மு.க.ஸ்டாலின்: இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்..!

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் ரவியும் அழைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தது வருகின்றனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் வரையறுக்கவில்லை. பன்மொழிகள் நிறைந்த இந்திய நாட்டில், இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அதனை மட்டும் கொண்டாடுவது பிற மொழிகளைச் சிறுமைப்படுத்துவதாகும்.

இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும்; நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் வரிசையில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு

மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் வரிசையில் தமிழகத்தின் 3-வது துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2006-11-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 29-ஆம் தேதி துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011-ஆம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின்: எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது…! அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் சிறையை..!

ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி தற்போது வரையில் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகிறார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் உட்பட மொத்தம் 47 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியங்களாக உள்ளனர். இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களை செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலைத்து விடுவார் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ராம்சங்கர், செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவர் மீது பதியப்பட்டுள்ள ஒரு வழக்கை தனித்தனியான சாராம்சங்களாக பிரித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு செயல்படுகிறது. இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.

குறிப்பாக செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டத்திற்கு புறம்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகு அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை கூட செய்து கொண்டார். தற்போதும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தான் தொடர்ந்து சிறையிலும் அடைக்கப்பட்டு இருக்கிறார். முகாந்திரமே இல்லாத இந்த வழக்கில் என்ன தான் அமலாக்கத்துறை தரப்பில் விசாரிக்கிறார்கள் என்று எதுவும் தெரியவில்லை. மேலும் எப்போது விசாரணை முடியும் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சமாக இருக்கிறது.

எனவே செந்தில் பாலாஜியின் உடல்நிலயை நீதிமன்றம் கருத்தில் கொண்டு இந்த வழக்கிலிருந்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை கூறியபடி செந்தில் பாலாஜி மீதான வழக்கை தனித்தனியாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்ததோடு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 20-ஆம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் அபஸ்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.

எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்திரராஜன்: யார் ஏமாற போகிறார்கள் என்பது அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், ஏமாற்றம் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அமைச்சரவை மாற்றம் என்பது உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். GKM காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த இந்த பேட்டி மூலம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ” யார் ஏமாற போகிறார்கள் என்பது தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும் என்றார். முதலமைச்சர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Stalin: ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய பெரியாரின் அறிவுத்தீதான்…! நமது பாதைக்கான வெளிச்சம்..!

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், புரட்டுக் கதைகளுக்கும் – வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!

இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!

ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி: ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வக்கில்லாதவர்கள்..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல் படும் எடப்பாடி பழனிசாமி அதை திசைதிருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை, அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்ததாலேயே பள்ளியில் பேச அனுமதித்திருக்கிறார்கள்” எனக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்.

முதலமைச்சராக இருந்த நீங்கள் ஒரு விஐபிதானே? ஒரு விஐபி-யைத் தேடி நிறையப் பேர் பார்க்க வருவார்கள் என்பது அடிப்படை தியரி. அப்படிப் பார்க்க வருகிறவர்கள் ஒவ்வொருவரின் பின்புலத்தை அலசிப் பார்த்துவிட்டா அனுமதி அளிப்பார்கள்? இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படி முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தீர்கள்? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதுதான் கோவை, வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் அவருடைய கோஷ்டியினர் கோடிக்கணக்கான புதிய 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு 2018-இல் கைதானார்கள்.

கள்ளநோட்டு கும்பலுடன் பழனிசாமி இருக்கும் புகைப்படம் வெளியாகி அன்றைக்குச் சந்தி சிரித்தபோது அவர் எங்கே போனார்? பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு சீட் கொடுத்தது பொதுச் செயலாளர் பழனிசாமிதானே? “சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் பேச்சுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும்” எனச் சொல்லும் பழனிசாமி, ஆனந்த், ஹரிதரன் ஆகியோரது செயல்களுக்கும் பொறுப்பு ஏற்றாரா?

“அதிகாரத்துக்கு என்றுமே நாங்கள் அடிமை இல்லை. எங்களுக்கு மரியாதை, தனித்துவம் உள்ளது” எனப் பெருமை பேசியிருக்கிறார். “அதிகாரத்துக்கு என்றுமே அடிமை இல்லை” என்றால், ஆட்சிக்கு ஆபத்து என்றதும் டெல்லிக்கு ஏன் காவடி தூக்கினீர்கள்? கட்சிக்காரர்கள் தவறு செய்திருந்தால் அம்மையார் ஜெயலலிதா பொறுப்பில் இருந்து நீக்குவார்; கட்சியை விட்டு கட்டம் கட்டுவார்; எம்.எல்.ஏ பதவியை எல்லாம் பறித்ததில்லை. ஆனால், ஆட்சிக்கு ஆபத்து என்றதும் அதிமுக எம்.எல்.ஏ-கள் 18 பேரை நீக்கிய நீங்கள் அதிகாரத்துக்கு என்றுமே அடிமை இல்லை என்று சொல்ல நா கூசவில்லையா? தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டு, அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றவில்லையா? உங்களின் தனித்துவ அடையாளமே பாதம்தாங்கிதானே?

“அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி மீதான தாக்குதல் போலீஸுக்கே பாதுகாப்பில்லை என்பதை வெளிப்படுத்துகிறது” என பழனிசாமி புலம்பியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடிவிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடைகளை அமைக்க முயன்றபோது திருப்பூர், சாமளாபுரத்தில் போராடிய பெண்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர். ஆனால், ‘சாமளாபுரத்தில் பெண்கள்தான் போலீஸை தாக்கினார்கள். தமிழகத்தில் போராட்டங்கள் நடத்துவது பேஷனாகிவிட்டது’ என்று அன்றைக்கு வியாக்கியானம் பேசியவர்தான் பழனிசாமி.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவுக்கு அழுத்தம் கொடுத்து அவரை தற்கொலைக்கு தள்ளியது யார்? உங்கள் ஆட்சியில் போலீஸாரால் பெண்களுக்கு மட்டுமல்ல, போலீஸாரால் போலீஸுக்கே பாதுகாப்பில்லாமல் போனது எல்லாம் ‘செலக்டிவ் அம்னீஷியா’ போல் மறந்துவிட்டதா? “உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கிறார். அதை மறைக்கவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள்” என உளறிக் கொட்டியிருக்கிறார்.

அம்மையார் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் அப்போலோவில் இருந்த போது ஆரம்பித்த உளறல்களை இன்னுமா நீங்கள் நிறுத்தவில்லை? கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. புகைப்படங்களும் வெளியிட்டோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறு சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அது தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருப்பதை இன்றும் இணையத்தில் தேடிப் படிக்கலாம்.

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வக்கில்லாதவர்கள் எல்லாம் தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருக்கும் முதலமைச்சரைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. 75 நாட்கள் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதலமைச்சரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? ‘கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்’ என எம்.ஜி.ஆர் பாடிவிட்டு போனது பழனிசாமிக்குத்தான்!

“இட்லி சாப்பிட்டார்கள்… வார்டுக்கு மாறிவிட்டார்கள்… விரைவில் வீடு திரும்புவார்கள்” என அ.தி.மு.க நிர்வாகிகளும் அமைச்சர்களும் பொய் பூக்களைக் கோத்து, கதை மாலையைக் கட்டியதை போல எங்களுக்குக் கட்ட தெரியாது. திமுக எப்போதுமே வெளிப்படையான இயக்கம். திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுகவின் கொள்கை.

ஜெயலலிதா மயக்கமான பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக்கப்பட்டன. ஆஞ்சியோ பரிந்துரைக்கப்பட்டும், அதனை அப்பல்லோ வழங்காத வகையில் சசிகலா உள்ளிட்ட 5 பேர் திட்டமிட்டுச் செயல்பட்டனர். முதல்வர் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். அவர் இறந்த தேதியே தவறு. ஜெயலலிதா இறப்பை மறைத்து, அறிவிப்பைத் தாமதப்படுத்தத் தந்திர நடவடிக்கை’ என்றெல்லாம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை அக்கு வேறாகப் பிரித்தார்கள். காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு என்ற திருவள்ளுவரின் குரலை மேற்கோள் காட்டி, வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்” என நீதிபதி ஆறுமுகசாமி குறிப்பிட்டார்.

அந்த நரிகள் கூட்டம் எங்கள் தலைவரின் உடல்நிலையைப் பற்றிப் பேசத் தகுதி இருக்கிறதா? தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல் படும் எடப்பாடி பழனிசாமி அதை திசைதிருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தனது ஆட்சியில் தமிழ்நாட்டை அனைத்து துறையிலும் தரை மட்டத்துக்கு இறக்கி பாழ்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு யாரையும் குறை சொல்லும் தகுதியோ அருகதையோ கிடையாது. தானும் இருக்கிறேன் என்பதைக் காட்ட நடத்தும் பேட்டி நாடகத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என ஆர்.எஸ்.பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்தரத்தில் தொங்கி..! வயநாட்டில் சிகிச்சையளித்த சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். அந்தவகையில், நர்ஸ் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருதும், மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருதும் வழங்கினார் தமிழக முதல்வர். அந்தவகையில், தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையால், இந்த விருதினை குமரி அனந்தன் பெற்றார்.

அதேபோல, கல்பனா சாவ்லா விருது, செவிலியர் சபீனாவுக்கு வழங்கப்பட்டது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா, ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், செவிலியர் சபீனாவிற்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

M.K. Stalin: “தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்”

“தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், நமக்குரிய முறையில் வரிப்பகிர்வைப் பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும்!” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் வாழும் மொழிச்சிறுபான்மையினரின் நலனில் என்றுமே அக்கறையுடன் செயல்பட்டும் வரும் கழக அரசுதான் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக்குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம். புத்தாடை, மாவிலைத் தோரணம், அறுசுவையும் கலந்த பச்சடியுடன் உகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும்!

இந்தப் புத்தாண்டு, தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், நமக்குரிய முறையில் வரிப்பகிர்வைப் பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

M.K. Stalin: மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்பட, பா.ஜ.க. ஆட்சி வீட்டுக்குப் போக வேண்டும்..!

புதுச்சேரியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார். அப்போது, பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!” என்று தமிழர் ஒற்றுமைக்கு போர்ப்பரணி பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மண்ணிற்கு நான் வந்திருக்கிறேன்! பிரெஞ்சு – இந்திய விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்து, இந்த மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் குரல்கொடுத்த விடுதலை இயக்கத் தளபதி மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள் போற்றிப் பாதுகாத்த புதுச்சேரி மண்ணிற்கு வந்திருக்கிறேன். கடல் அழகும் – இயற்கை அழகும் கொஞ்சும் எழில்மிகு புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன்.

புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக – இந்தியா கூட்டணி வேட்பாளராக வைத்திலிங்கம் அவர்கள் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். வைத்திலிங்கம் அவர்களுக்குப் புதுச்சேரியில் அறிமுகம் தேவையில்லை! மக்கள் பணியாற்றி புதுச்சேரியின் உயர்வுக்காகப் பாடுபட்டு, உங்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர்! விடுதலைப் போராட்ட வீரரின் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இப்போது இரண்டாம் விடுதலைப் போராட்டத்தில் வேட்பாளராக, உங்கள் முன்னால் இருக்கிறார். நாற்பது ஆண்டுகளாகக் காங்கிரஸ் பேரியக்கத்தில் பயணிப்பவர். எட்டு முறை சட்டமன்ற உறுப்பினர்.

அதில், எதிர்க்கட்சித் தலைவராக – அமைச்சராக – சட்டப்பேரவைத் தலைவராக – இரண்டு முறை முதலமைச்சராக என்று பழுத்த அரசியல் அனுபவத்திற்குச் சொந்தமான இவர், இரண்டாம் முறையாக நாடாளுமன்றத்திற்குச் செல்ல உங்களின் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறார். வைத்திலிங்கம் அவர்களுக்குக் கை சின்னத்தில் வாக்களித்து, சென்ற தேர்தலைவிட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். வெற்ற பெற வைப்பீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக – உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா?

புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகக் காங்கிரஸ் பேரியக்கமும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான் பாடுபட்டிருக்கிறது. புரட்சிகரத் திராவிட இயக்கத்தையும் – புதுவையையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசனைத் தந்த மண் இது! தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் ‘ஆரிய மாயை’ தடைசெய்யப்பட்டபோது, அதைத் துணிச்சலாக கவிஞர் புதுவை சிவம் வெளியிட்ட மண் இது!

தலைவர் கலைஞரின் அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய மண், இந்த புதுச்சேரி! அதனால் தலைவர் கலைஞருக்கு தமிழ்நாடும் – புதுச்சேரியும் ஒன்றுதான்! அதே உணர்வுடன்தான், இந்த ஸ்டாலினும் – புதுச்சேரி மக்கள்மீது தனிப்பாசம் கொண்டவன். அந்த அடிப்படையில்தான் சிவா, சிவக்குமார், நாஜீம் என்று இங்கு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளும், இந்தப் புதுச்சேரி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறார்கள். அந்த உரிமையோடுதான், உங்களிடம் நான் வாக்கு கேட்க வந்திருக்கிறோம்.

புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் தி.மு.க.வும் – காங்கிரசும் பாடுபட்டால், புதுச்சேரியை எப்படியெல்லாம் பின்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்று பா.ஜ.க. செயல்படுகிறது! இதைப் புதுச்சேரி மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறீர்கள். இங்கு நம்முடைய வேட்பாளராக இருக்கும் வைத்திலிங்கம் அவர்கள் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது, அவருடன் மோதினார்கள் ஒரு துணைநிலை ஆளுநர்.

பா.ஜ.க.வின் கட்சிப் பொறுப்பில் இருக்கிறவர்களைப் புதுச்சேரி சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக போட்டு, சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கினார், ஒரு துணைநிலை ஆளுநர்! அதுமட்டுமல்ல, ஆட்சியில் இருந்த அரசையே புறக்கணித்துவிட்டு, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தராமல், அந்த வசதிகள் இல்லை என்று காரணம் காட்டி ரேஷன் அரிசியைத் தடை செய்தார்கள்.

புதுச்சேரியில் பொங்கலுக்கு தரும், வேட்டி-சேலை, இலவச அரிசி எல்லாம் எதற்கு என்று கேள்வி கேட்டார்கள். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக இருந்த நம்முடைய நாராயணசாமி அவர்களுக்கு ஒத்துழைக்காமல் அரசியல்சட்டக் கடமையைக் காற்றில் பறக்கவிட்டு, புதுச்சேரி நிர்வாகத்தைச் சீர்குலைத்தது பா.ஜ.க.!

இப்படி செயல்பட்டது யார் என்றால், துணைநிலை ஆளுநராக இருந்த அம்மையார் கிரண் பேடி அவர்கள்! ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர் அவர்! சட்டத்தை நிலைநாட்ட போலீசாக வேலை பார்த்த அவரே, துணைநிலை ஆளுநராக அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டார். இப்படி, தமிழ்நாட்டிலும் ஒரு ஆளுநர் இருக்கிறார். அவரும் ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர்தான். நான் பல நேரங்களில் சொல்வதுண்டு, அவர் தொடர்ந்து இருக்கட்டும். அவர் இருந்தால், தி.மு.க.விற்கு அங்கு பெரிய பிரச்சாரமே நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் இவர்களை எல்லாம் ஆளுநர்களாக்கி, அரசியல்சட்டத்தை மீறி பா.ஜ.க.வின் ஏஜெண்டுகள் போன்று விளம்பரத்திற்காகவே செயல்படுகிறார்கள். இப்படி ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள்! அதிலும் புதுச்சேரி விதிவிலக்கு. இங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி!

பா.ஜ.க.வைப் பொறுத்தவரைக்கும், புதுச்சேரியின் முன்னேற்றம் – மக்களின் வளர்ச்சி இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இதுதான் பா.ஜ.க.வின் கொள்கை! தமிழ்நாடு போன்று மாநிலமாக இருந்தால் அதை முனிசிபாலிட்டியாக மாற்ற வேண்டும்! புதுச்சேரி போன்று யூனியன் பிரதேசமாக இருந்தால் கிராமப் பஞ்சாயத்து போன்று ஆக்கிட வேண்டும்! ஒட்டுமொத்தமாக எல்லோரும் தில்லிக்குக் கீழ் இருக்க வேண்டும்! இதுதான் பா.ஜ.க.வின் அஜெண்டா! அதனால்தான், கூட்டணி அரசு இருந்தாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன்னுடைய கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது பா.ஜ.க. அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கிறார் புதுச்சேரி முதலமைச்சர்!

இந்த அவலங்கள் எல்லாம் தீர, இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயகப் பாதையில் கம்பீரமாக நடைபோட வேண்டும்! மாநில உரிமைகள் மட்டுமல்ல, யூனியன் பிரதேசங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் இந்தியா கூட்டணியை நாடு தழுவிய அளவில் அமைத்திருக்கிறோம்.

புதுச்சேரி முன்னேற வேண்டும் – புதுச்சேரி மக்களின் வாழ்க்கையில் புதிய மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், பா.ஜ.க. ஆட்சி வீட்டுக்குப் போக வேண்டும்! இந்தியா கூட்டணி தில்லியில் ஆட்சியில் அமர வேண்டும்! ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்போது, சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைச் சொல்லியிருக்கிறோம்.

அதில் முக்கியமான வாக்குறுதியான, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. புதுச்சேரி மக்களின் பலநாள் கனவான, மாநில அந்தஸ்து ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும், நிறைவேறப் போகிறது!

சேதுராப்பட்டு கரசூரில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தாமல் பயனற்றுக் கிடக்கும் 800 ஏக்கர் நிலத்தில் பல்வேறு சலுகைகளுடன் கூடிய புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு தொழிற்சாலைகள் நிறுவப்படும்!

1980–83 தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்காகவும் – இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் நிறுவப்பட்ட லிங்கா ரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையும், திருபுவனை கூட்டுறவு நூற்பாலையும் இன்றைய பா.ஜ.க. – என்.ஆர்.காங்கிரஸ் அரசால் மூடப்பட்டு கிடக்கிறது. இது நவீனப்படுத்தித் திறக்கப்படும்!

புதுச்சேரியில் பல்லாயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு வாழ்வளித்து வந்த ஆங்கிலோ பிரெஞ்சு பஞ்சாலை, பாரதி பஞ்சாலை, சுதேசி பஞ்சாலை ஆகியவற்றை பா.ஜ.க. – என்.ஆர்.காங்கிரஸ் அரசு மூடிவைத்துள்ளதை மீண்டும் திறந்து நவீனப்படுத்தி, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும்!

கடந்த காலங்களில் திட்டமிடப்பட்டு, இன்றைய ஒன்றிய அரசால் கைவிடப்பட்ட சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரி இரயில் பாதை திட்டமும், திண்டிவனம் – புதுச்சேரி – கடலூர் வழி இரயில் பாதை திட்டமும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் காரைக்கால் பேரளம் அகல இரயில் பாதை திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு, எர்ணாகுளம், மும்பை போன்ற பெருநகரங்களுக்கு மீண்டும் இரயில் சேவை தொடங்கப்படும்! இவை அனைத்திற்கும் மேலாகப் புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து பொது விநியோகத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்!

கை சின்னத்தில் வாக்களிப்பது மூலமாக இத்திட்டங்களைச் செயல்படுத்தித் தர எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். காங்கிரசும் – தி.மு.க.வும் நாட்டு நலன்களில் அக்கறை கொண்டு வாக்குறுதிகளை அளிக்கிறது. 2006-இல் தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி கதாநாயகனாக இருந்ததோ, அப்படி அன்னை சோனியா – சகோதரர் ராகுல் காந்தி – மதிப்பிற்குரிய மல்லிகார்ஜூன கார்கே – மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் ஆகியோர் அளித்துள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் இன்றைக்கு நாட்டைக் காக்கப் போகும் கதாநாயகன்!

இந்தியா கூட்டணி சார்பில், சமூகநீதியைக் காப்பாற்ற – இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க – மதச்சார்பின்மையை நிலைநாட்ட – இந்தியா ஜனநாயக நாடாகத் தொடர – சபதம் எடுத்துள்ளோம்! ஆனால், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம். ஒரு நாட்டின் பிரதமர் – அதுவும் பத்தாண்டு காலம் ஆட்சிசெய்த பிரதமர் என்ன பேசுகிறார்? மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார்! சாதியின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார்! ஆனால் ஒருமுறைகூட, சமூகநீதியைப் பாதுகாப்பேன் என்றோ, இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவேன் என்றோ எங்கும் மருந்துக்கு கூட சொல்லவில்லை!

ஒன்றிய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்துவேன் என்று எங்கேயாவது வாய் திறந்தாரா? ஆனால், மக்களை ஏமாற்ற நானும் ஓ.பி.சி. என்று சொல்கிறார்! பட்டியலின – பழங்குடியின – மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று சொன்னாரா? அதுவும் இல்லை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும், நாட்டு மக்களுக்குப் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்ததுதான் பா.ஜ.க. அரசு! அதை லாபம் ஈட்டும் தொழிலாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். உலகச் சந்தையில் விலை உயர்ந்தால் இங்கு விலையை அதிகரிப்பவர்கள், அங்கு விலை குறைந்தால் இங்கும் குறைக்க வேண்டுமா, இல்லையா? ஆனால், மோடி அரசு குறைக்கவில்லை.

அது மட்டுமா? உக்ரைன் – ரஷ்யா போரின்போதும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை வாங்கினார்கள். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அதன் பயன் பொதுமக்களுக்குச் சென்று சேரவில்லை. மோடி ஆட்சிக்கு வரும்போது 119 டாலராக இருந்த ஒரு பேரல், ஒரு கட்டத்தில் 29 டாலர் வரை சரிந்தது. ஆனால், அந்த அளவு பெட்ரோல், டீசல் விலை மக்களுக்காகக் குறைக்கப்பட்டதா? ஒரு சில கார்ப்பரேட்டுகள் மட்டும்தான் பெரிய அளவில் பலனடைந்தார்கள். கோடிக்கணக்கான மக்களுக்காக விலையைக் குறைக்காமல், ஒரு சிலர் மட்டும் லாபம் ஈட்டினால் போதும் என்று ஆட்சி நடத்தும் இந்த இரக்கமற்ற பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்!

கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியில் புதுச்சேரி இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம்! மின்சாரத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மின் ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. மின் கட்டணம் கேட்டாலே ஷாக் அடிக்கிறது! புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் துணைநிலை ஆளுநர்களை வைத்து, அரசியல் கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டு இருந்தார்கள். கிரண் பேடி காமெடிகள் முடிந்த பிறகு, சகோதரி தமிழிசை வந்தார்கள். புதுச்சேரியில் உட்கார்ந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசியலைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். தேர்தல் வந்ததும் பா.ஜ.க.விற்கே மீண்டும் சென்றுவிட்டார்கள்! புதுச்சேரி வரலாற்றில் ராஜ் நிவாஸ் வாசலிலே, முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுதான் புதுச்சேரிக்கு பா.ஜ.க. செய்த சாதனை!

இங்கு வாக்கு கேட்டு வந்த பிரதமர் மோடி என்ன கூறினார். “பெஸ்ட் புதுச்சேரி“. தொழில் – சுற்றுலா – கல்வி போன்றவற்றில் புதுச்சேரியை பெஸ்ட் ஆக்குவோம் என்று சொன்னாரே – செய்தாரா? காங்கிரஸ் அரசிடம் ஏதோ ரிப்போர்ட் கார்டெல்லாம் கேட்டாரே – பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சி ரிப்போர்ட் கார்டு எங்கே? வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி ரிப்போர்ட் கார்டு வேண்டாம். நாங்கள் கேட்பது, ஒரிஜினல் ரிப்போர்ட் கார்டு!

நாராயணசாமி அவர்கள் கட்சி மேலிடத்தைக் கேட்டு நடக்கிறார் என்று குறை கூறினார். ஆனால், இப்போது வேறு கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ரங்கசாமியைத் தங்களின் பேச்சைக் கேட்கச் சொல்லி என்ன பாடு படுத்துகிறார்கள்? அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏதோ பெரிதாக ஆதங்கப்பட்டுப் பேசினீர்களே.

இன்றைக்குப் புதுச்சேரியில் முதலமைச்சராக இருப்பது யார்? ரங்கசாமி! உங்கள் கூட்டணியில் எது பெரிய கட்சி? ரங்கசாமியின் கட்சி! புதுச்சேரியில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதி இருக்கிறது? ஒரே ஒரு தொகுதி! அதிலும் பா.ஜ.க.தான் போட்டியிடும் என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்தீர்கள். ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கக் காரணமே நமசிவாயம்தான்! இப்போது அந்த நமசிவாயத்திற்கு ஓட்டு கேட்டு வரும் நிலைமையை ரங்கசாமிக்கு உருவாக்கி, அந்தக் கட்சியையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஜனநாயகமா? உள்துறை அமைச்சராக சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருந்தவரை, தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். நமசிவாயம் எத்தனை கட்சி மாறி இருக்கிறார் என்ற வாங்கிப் பார்த்தப்போது எனக்கே தலைசுற்றியது.

தி.மு.க.வில் இருந்த நமசிவாயம் – ம.தி.மு.க.வுக்குத் தாவினார். ம.தி.மு.க.-இல் இருந்து த.மா.கா.வுக்குத் தாவினார். த.மா.கா.வில் இருந்து புதுவை மாநில காங்கிரசுக்கு தாவினார். புதுவை மாநில காங்கிரசில் இருந்து மீண்டும் த.மா.கா.வுக்குத் தாவினார். த.மா.கா.வில் இருந்து காங்கிரசுக்குத் தாவினார். காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவினார். இன்னும் இரண்டு மாதம் கழித்து நான் வந்தால் அவர் எந்தக் கட்சியில் இருப்பாரோ? யாமறியேன் பராபரமே. அது நமசிவாயத்திற்கே தெரியாது.

பா.ஜ.க.வால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன? “நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார் – கைது செய்யப்பட மாட்டார்” என்று வீரவசனம் பேசினாரே பிரதமர் மோடி. ஆனால், இலங்கைக் கடற்படையினரால் கரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்தாரா? படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க முடிந்ததா? அவர் விஷ்வகுரு இல்லை, மவுனகுரு!

அதுமட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது! அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல்! நாடே அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததே! பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது! இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு பா.ஜ.க. ஆட்சியில் கேள்விக்குறியாக இருக்கிறது! ரங்கசாமி அவர்களை டம்மியாக உட்கார வைத்துவிட்டு, பா.ஜ.க. பம்மாத்து ஆட்சியை இங்கு நடத்திக்கொண்டு இருக்கிறது.

புதுச்சேரிக்கு ஒரு சட்டமன்றம் கட்டும் உரிமைகூட இல்லை. புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இருக்கிறதா? ஏழைகளின் வயிற்றில் அடித்திருக்கிறது, ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி, பட்டியல் இனத்து மக்களுக்கான சிறப்புக் கூறு நிதி அவர்களுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டிருக்கிறதா? பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இங்கே மூடப்பட்டிருக்கிறது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்த ஊழியர்களின் குடும்பங்கள் நடுரோட்டிற்கு வந்துவிட்டார்கள். தேர்தல் வந்தால்தான் ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து என்ற ஞானோதயம் வரும். கடந்த 3 ஆண்டுகளாக அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் இவர்கள்? ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி – ஒரே கூட்டணிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்ளே? புதுச்சேரியில் ஓடியதா?

புதுச்சேரி மக்கள் போராடிப் பெற்ற விடுதலையை, மக்களின் உரிமையை ஒன்றிய மோடி அரசு பறிக்க விட்டு, வேடிக்கை பார்த்த ரங்கசாமி, இப்போது எந்த முகத்துடன் பா.ஜ.க.வுக்காக வாக்குகள் கேட்டு வருகிறார்? இதில் மற்றொரு பக்கம் பாதம்தாங்கி பழனிசாமியின் அ.தி.மு.க. வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை! சிம்ப்ளி வேஸ்ட்! பா.ஜ.க. வேட்பாளரின் நன்மைக்காகதான் அ.தி.மு.க. இங்கு தேர்தலில் நிற்கிறது என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

பல்வேறு பண்பாடுகள் – சாதி, இன, மொழி கடந்த மக்கள் ஒற்றுமையாக வாழும் புதுச்சேரி மக்கள் – ஒன்றிய மோடி அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகக் கூடாது! இந்தியா கூட்டணியின் வேட்பாளராக – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த – முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கும் வாக்கு! புதுச்சேரியைக் காக்கும் வாக்கு!

நிறைவாக, எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் வரிகளில் முடிக்கிறேன். “புதுச்சேரி என்பது படுத்துக் கொண்டிருக்கும் சிங்கம். அந்த சிங்கத்திற்கு சோதனை வந்தால் அது சிலிர்த்து எழும்”. அந்த வரிகளை உண்மையாக்க – புதுவை காக்க – புதுவை மக்களே எழுக! என்று உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் புதுவைத் தொகுதியில் நம்முடைய இந்தியா கூட்டணி கட்சியின் – காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்களுக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவு தர வேண்டும் என்று கேட்கிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.