Mehbooba Mufti: சமூக ஊடகங்களில் வெறுப்பை பரப்பும் பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வகுப்புவாத வெறுப்பை பரப்பும் பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முப்தி தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்கள் இடமிருந்து “தொடர்ந்து ஏற்படும் அமைதியின்மை காரணமாக அச்சத்தில் வாழ்கிறோம்” என்று துயர அழைப்புகள் வருகின்றன. சில கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைத்து, இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளன,

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் தலையிட்டு, அனைத்து காஷ்மீர் மாணவர்களும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மெஹபூபா வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் வகுப்புவாத வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு ஒரு வலுவான செய்தி அனுப்பப்பட வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேண இதுபோன்ற பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை வேண்டும் என மெகபூபா முப்தி தெரிவித்தார்.

சீமான் சாடல்: பஹல்காம் தாக்குதல் பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வியே காரணம்..!

ஜம்மு – காஷ்மீரில் 25 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு! பயங்கரவாதிகளின் கோழைத்தனம், பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடில் யுள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா சென்றிருந்த அப்பாவி பொதுமக்கள் 25 பேர் பயங்கரவாதிகளால் சிறிதும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இத்தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது.

இத்தனை ஆயிரம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தும், 24 மணிநேரமும் உளவுத்துறையால் திறந்தவெளி சிறைபோல காஷ்மீர் முழுவதும் கண்காணிக்கப்பட்டும் இராணுவ சீருடை அணிந்து பயங்கரவாதிகள் பொதுவெளியில் சுதந்திரமாக உலவக்கூடிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றால் இந்தியப் பாதுகாப்புத்துறையும், உளவுத்துத்துறையும் என்ன செய்து கொண்டிருந்தது?

இக்கொடிய நிகழ்வு இந்திய ஒன்றிய பாஜக அரசின் அப்பட்டமான பாதுகாப்புத்துறை தோல்வியாகும். இந்த நாட்டில் உளவுத்துறை என்ற ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? அல்லது தாக்குதல் நடைபெறட்டும் என்று வேடிக்கை பார்த்ததா? என ஐயம் எழும் அளவிற்கு முற்று முழுதாக ஒன்றிய அரசின் உளவுத்துறை செயலிழந்து போயிள்ளது.

இதுபோன்ற இரக்கமற்ற கொடுந்தாக்குதல்கள் இனியும் நடைபெறா வண்ணம் தடுத்து, நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டியதும், காஷ்மீரில் அமைதி, பாதுகாப்பானச் சூழலை உறுதிசெய்து, அங்கு வாழும் மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்திய ஒன்றிய அரசு மற்றும் காஷ்மீர் மாநில அரசின் முழுமுதற் கடமையாகும். இக்கொடியத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன் என சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் நடத்தி 29 அப்பாவிகளை கொன்ற 4 பேர் இவர்கள் தான்..!

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளின் ஸ்கெட்ச் வரைபடம் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக ஒரேயொரு பயங்கரவாதி சம்பவ இடத்தில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது எடுத்த போட்டோ வெளியிடப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இராணி: சிறப்பு அந்தஸ்தை காஷ்மீருக்கு மீண்டும் இனி எந்த காலத்திலும் கொண்டு வர முடியாது..!

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவை இனி எந்த காலத்திலும் மீண்டும் கொண்டு வர முடியாது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மறுநாள் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் காஷ்மீரில் சொத்து வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. சட்டமன்றத்துடன் கூறிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட அங்கு உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைத்தது.

பாஜக MLA களின் கடும் அமளிக்கு நடுவே ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி அதன் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்த தீர்மானத்தின் மூலம் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிரவாதத்தை ஆதரிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என தெரிவித்தார்.

மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் என தெரிவித்துள்ளார். இதனிடையே மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கூர்க்கா சமூகத்தினர், ஜம்முவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என ஸ்மிருதி இராணி வலியுறுத்தி உள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு..!

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு..!

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்கிறார். இன்றைய பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஜம்மு – காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை MLA.க்கள் 4 பேர், ஆம் ஆத்மி கட்சி MLA ஒருவர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்துள்ளனர்.

இந்நிலையில் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்க மறுத்துள்ளதாகத் தெரிகிறது. வெளியில் இருந்து ஆட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இன்றைய பதவியேற்பு விழாவில் உமர் அப்துல்லாவுடன் 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உமர் அப்துல்லா பதவியேற்கும் விழாவில், திமுக சார்பில் கனிமொழி எம்.பி., பங்கேற்க உள்ளார்.

ஹரியானா தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தற்போது ஜார்க்கண்டில் நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாவும், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் கூடுதல் கவனம் காங்கிரஸ் செலுத்தவுள்ளது.

வானதி சீனிவாசன் சாடல்: ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்ப்பு..!

“ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல் முடிவுகளால் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது,” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48-ல் வென்று தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், 99 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, தான் வென்று விட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவராக இல்லாமல் அக்கட்சியை வழிநடத்தி வரும் ராகுல் காந்தியை பெரும் தலைவர் போல ஊடகங்கள் சித்தரித்தன. ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். ராகுல்காந்தி மாயாஜாலம் நிகழ்த்துவார் என, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஊடகங்களில் ராகுல் காந்தி குறித்த செய்திகளே அதிகம் வந்தன. ஆனால், மக்கள் பாஜகவையே தேர்ந்தெடுத்துள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு கட்சி ஆட்சியை தக்க வைப்பது சாதாரணமான விஷயம் அல்ல. தமிழகத்தில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டால், ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றது எவ்வளவு பெரிய சாதனை என்பது புரியும். ஜம்மு – காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின், சட்டப்பேரவை தேர்தல் நடப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 29-ல் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் 25.64 சதவீதம் அதாவது 14 லட்சத்து 62 ஆயிரத்து 225 வாக்குகளைப் பாஜக பெற்று, அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளால் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவின் வெற்றி தொடரும்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது .

ஒமர் அப்துல்லா: முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மாநில அந்தஸ்து வழங்கும் அதிரடியான தீர்மானம்

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்தபடி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அதிரடியான தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் 370 – வது பிரிவு ரத்து, மாநில அந்தஸ்து உள்ளிட்டவை அதிகம் பேசப்பட்டன. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை பாஜக நியாயப்படுத்தியது. ஆனால் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணியோ மீண்டும் 370-வது பிரிவைக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.

ஆனால் மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. பாஜகவோ முதலில் தேர்தல் முடிந்து ஆட்சி அமையட்டும்; மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றது. இந்தியா கூட்டணி கட்சிகளோ மாநில அந்தஸ்து வழங்க மறுத்தால் போராடுவோம் என்றது. தற்போது தேர்தலில் இந்தியா கூட்டணியின் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த கூட்டணியின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா பொறுப்பேற்க உள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் அடுத்தடுது கூட்டப்பட்டு சட்டசபை குழு தலைவர் தேர்வு செய்யப்படுவர். பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவர். இந்நிலையில் ஶ்ரீநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒமர் அப்துல்லா, அரசாங்கத்தை அமைத்த உடன் கூடுகிற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானத்துடனேயே பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்திப்பேன் என்றார்.

மேலும் ஒமர் அப்துல்லா பேசுகையில், டெல்லி யூனியன் பிரதேசத்தையும் ஜம்மு காஷ்மீரையும் ஒப்பீடு செய்யக் கூடாது. டெல்லி எப்போதும் ஒரு மாநிலமாக இருந்ததே இல்லை. டெல்லிக்கு யாரும் மாநில அந்தஸ்து தருவோம் என வாக்குறுதியும் தரவும் இல்லை. ஆனால் 2019-க்கு முன்னர் வரை ஜம்மு காஷ்மீர் ஒரு மாநிலமாகவே இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாக்களித்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் முடிவடைந்த உடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதுதான் மத்திய அரசின் வாக்குறுதி. அதனை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மத்திய பாஜக அரசுடன் நல்லுறவுடன் இருக்கவே விரும்புகிறோம். மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காத முதலமைச்சராகவே இருக்க வேண்டும். அதற்காக பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்பது அர்த்தம் இல்லை. எப்போதும் நாங்கள் பாஜகவை எதிர்ப்போம். ஜம்மு காஷ்மீர் மக்களின் நன்மைக்காக மத்திய பாஜக அரசுடன் நல்லுறவை விரும்புகிறோம்.

மத்திய அரசுடன் மோதுவதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. மக்களுக்கு தேவை வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்கள், மாநில அந்தஸ்து தகுதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்தான். எங்கள் கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சி இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. சூழ்நிலை உருவானால் அமர்ந்து பேசி முடிவெடுப்போம் என ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும்..!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் பவன் கேரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிராந்திய காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா ஆகியோர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பேசிய பவன் கேரா, விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அரசு நிலத்தில் விவசாயம் செய்யும் நிலமற்ற விவசாயிகளுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவிலான நீர் பாசன திட்டங்களை மேம்படுத்த ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் ஜம்மு-காஷ்மீர் விவசாயிகளுக்கு 100% நீர் பாசனம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

ஜம்மு-காஷ்மீரில் வேலையில்லா இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மட்டும் மாதம் ரூ.3,500 நிதியுதவி வழங்கப்படும். தேர்தலில் வென்று காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தால் 1 லட்சம் அரசுப் பணிகளை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை 30 நாள்களில் வெளியிடப்படும். அரசுப் பணிகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

இந்திய ஒற்றுமை நீதிப்பயணத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து, மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கவும் முடிவெடுத்துள்ளோம்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். ஆட்சி அமைத்த 100 நாள்களில் சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டு அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ அமல்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரச்னைகளை அறிந்துகொள்ள 20 மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என பவன் கேரா தெரிவித்தார்.

கடைசியாக ஒரு வாய்ப்பு தாருங்கள் என கண்ணீருடன் கெஞ்சி வாக்கு சேகரித்த உமர் அப்துல்லா..!

ஜம்மு காஷ்மீர் யூனியன் சட்டசபை தேர்தலை அனைத்து கட்சிகளும் வாழ்வா? சாவா? என எதிர்கொண்டு நிற்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 துண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியதுடன் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370- வது பிரிவை ரத்து செய்த பாஜக, தாம் செய்தது நியாயம் என பிரசாரம் செய்கிறது. ஜம்மு காஷ்மீரை பாஜக வேட்டையாடிவிட்டதாக காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பதிலடி தருகிறது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளோ, காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அங்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்த கையோடு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா பிரசாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென தமது தலையில் இருந்த தொப்பியைக் கழற்றினார்.

அதனை இரு கைகளில் ஏந்தியபடி, இந்த தொப்பியின் கவுரவம், என்னுடைய கவுரவம் அனைத்தும் நீங்கள் வாக்களிப்பதில்தான் இருக்கிறது. எனக்காக ஒரே ஒரு முறை கடைசி முறையாக வாக்களியுங்கள். மக்களுக்காக சேவை செய்ய எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தாருங்கள் என கண்ணீரும் கம்பலையுமாக கெஞ்சி வாக்கு உமர் அப்துல்லா சேகரித்தார்.

ராகுல் காந்தி: ஜம்மு-காஷ்மீரில் ‘மன்னராட்சி’ நடக்கிறது..!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனந்தநாக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “கடந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை உளவியல் ரீதியாக தோற்கடித்துள்ளோம். இண்டியா கூட்டணி அவருக்கு முன் நின்றது. அதன் காரணமாக அவரது முழு நம்பிக்கையும் மறைந்துவிட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று பாஜக முதலில் கூறியது. ஆனால், இப்போது சாதிவாரி கணக்கெடுப்புதான் சரியானது என்று ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடி நியமனம் கூடாது என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் எழுப்பியது. நேரடி நியமன முறை இருக்காது என பாஜக தற்போது கூறியுள்ளது. இப்போது நரேந்திர மோடி, இந்திய மக்களைப் பார்த்து பயப்படுகிறார். காங்கிரஸ் கட்சி, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நாட்டில் 3-4 பேர் மட்டுமே அனைத்து வணிக வாய்ப்புகளையும் பெறுகிறார்கள். அமித் ஷாவின் மகன் கிரிக்கெட் மட்டையை எடுத்தில்லை, ஆனால் கிரிக்கெட்டின் பொறுப்பாளராகிவிட்டார். நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். பாஜக அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்கும். வழங்காவிட்டால், இண்டியா கூட்டணி அரசு வந்தவுடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதே அதன் முதல் பணியாக இருக்கும்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் எனக்கும் இருப்பது அரசியல் உறவு அல்ல; ரத்த உறவு. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என இந்த உறவு மிகவும் பழமையானது. உங்களது பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப விரும்புகிறேன். என்னிடமிருந்து நீங்கள் எதை விரும்பினாலும் என் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். எனது காஷ்மீரி பண்டிட் சகோதரர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். பாஜக தனக்கு சாதகமாக உங்களைப் பயன்படுத்திக்கொண்டது. ஆனால், உங்களுக்கு உதவவில்லை. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நமது அரசு வரும்போது அது ​​உங்களை உடன் அழைத்துச் செல்லும்.

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜனநாயகத்தின் மீது தாக்குதல்களை நடத்துகின்றன. ஜம்மு காஷ்மீருக்கு இருந்த மாநில உரிமையைப் பறித்துவிட்டனர். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. துணைநிலை ஆளுநர்தான் ஜம்மு காஷ்மீரை இயக்குகிறார் என்று இங்கே கூறப்படுகிறது. துணைநிலை ஆளுநர் என்ற வார்த்தை தவறானது. அவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் மன்னர்கள் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்கள்.

இன்று ஜம்மு-காஷ்மீர், வெளியில் இருந்து ‘மன்னராட்சி’யால் நடத்தப்படுகிறது. இங்குள்ள செல்வம், வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் காஷ்மீரிகளுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக, வெளியாட்களுக்கே வழங்கப்படுகிறது. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியைப் பிடிக்கும். மாநில அந்தஸ்து கோரிக்கையை அது முழு பலத்துடன் தெருக்களில் இருந்து சட்டமன்றம் வரை, சட்டமன்றத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை எழுப்பும்” என ராகுல் காந்தி உரையாற்றினார்.