கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அப்போது, நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். அதில் பயனடையாத ஒரு மகளிரிடம், ஒருவர் சென்று ஓட்டு கேட்கிறார்! அப்போது அந்த நபர் அந்த அம்மாவிடம், நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்ட உடனே, அந்த அம்மா, “ஸ்டாலினுக்குதான் ஓட்டு போடுவேன்”என்று சொல்கிறார்கள். “நீங்கள் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறுகிறீர்களா?” என்று அந்த நபர் கேட்கிறார்! அதற்கு அவர்கள், “இல்லை” என்று சொல்லிவிட்டு, உடனே, “எனக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன? தேவையான எத்தனையோ மக்களுக்கு உதவுகிறார். நிறைய நல்லது செய்கிறார். அதனால், அவருக்குதான் ஓட்டு போடுவேன்” என்று அந்த அம்மா சொல்கிறார்கள்.
இப்படித்தான் நாங்கள் மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம்! நம்முடைய கூட்டணி சார்பில் பிரச்சாரத்திற்கு போகும்போது, ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள், எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும் தாய்வீட்டுச் சீர் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறோம் என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள்!
அதுமட்டுமல்ல, நான் ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்த நாளில் இருந்து, தமிழ்நாட்டில் மகளிர் சுதந்தரமாக, கட்டணமில்லாமல் விடியல் பேருந்தில் பயணம் மேற்கொள்கிறார்கள்! நான் அடிக்கடி ஒன்று சொல்வேன். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து! அதுவும் ஒரு பெண் குழந்தை படித்தால், ஒரு தலைமுறையே படித்ததற்குச் சமம். அதனால்தான் உயர்கல்விக்கு வர மாணவிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் தரும் புதுமைப்பெண் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்.
இதே போன்று, அடுத்து மாணவர்களுக்கும், தமிழ்ப்புதல்வன் என்ற பெயரில், மாதம் ஆயிரம் ரூபாய் தரப்போகிறோம். இதுமட்டுமல்ல, நம்முடைய எதிர்காலத் தலைமுறையான குழந்தைங்கள் ஆரோக்கியமாக, பசி இல்லாமல் படிக்கவேண்டும் என்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தைத் தொடங்கி, 16 இலட்சம் குழந்தைகளுக்குச் சுவையான காலை உணவு அளிக்கிறோம். இது இப்போது கனடா நாட்டிலும் எதிரொலித்திருக்கிறது!
இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவேண்டும் என்று, தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள, “நான் முதல்வன்” திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், 77 இலட்சத்து 78 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் நம்முடைய இளைஞர்களுக்கு கிடைத்திருக்கிறதாம்! EPFO புள்ளிவிவரம் சொல்கிறது! இது மாநில அரசின் புள்ளிவிவரம் இல்லை, ஒன்றிய அரசுடையது!
”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் ஒரு கோடிப் பேருக்கும் மேல் பயனடைந்திருக்கிறார்கள். இப்படி தி.மு.க. எப்போதும் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று நிரூபித்தது மட்டும் இல்லை, இந்த ஸ்டாலின் ஆட்சியில், சொல்லாததையும் செய்வோம் என்று காட்டி இருக்கிறோம்!
அதுமட்டுமல்ல, உலகத்திற்கே கோவையைத் தெரியும் என்றால், அதற்குக் காரணம் அறிவியல் மேதை, ஜி.டி.நாயுடு அவர்கள்! அவரின் இந்தக் கோவை மண்ணில், உலகத்தரத்தில் பிரம்மாண்ட நூலகத்தை அறிவியல் மையமாக திராவிட மாடல் அரசு கோவையில் அமைக்கப் போகிறது! இப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு குடும்பமும் பயனடையவேண்டும் என்று பார்த்துப் பார்த்துத் திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், இவ்வளவு செய்கிறோம்! என்றால், நம்முடைய இந்தியா கூட்டணி அரசு அமையும்போது, எவ்வளவு செய்ய முடியும்! என்று நினைத்துப் பாருங்கள்! அதற்கு முன்னோட்டமாக, தி.மு.க. சார்பில் என்னவெல்லாம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகளாகக் கொடுத்திருக்கிறோம். அதில் தலைப்புச் செய்திகளை மட்டும் சொல்கிறேன்.
வியாபாரிகளுக்காக இரவு நேரங்களில், கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில் சேவை!
பொள்ளாச்சி இளநீருக்கும் மற்றும் தேங்காய்க்கும் புவிசார் குறியீடு!
பொள்ளாச்சியில் குளிர்பதனக் கிடங்கு!
பொள்ளாச்சி ரயில் நிலையம் புனரமைப்பு!
சேரன் எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு!
கோவை மெட்ரோ திட்டம் திருப்பூர் வரை நீட்டிப்பு!
மேட்டுப்பாளையம் – சத்தியமங்கலம் – கோபிசெட்டிபாளையம் – ஈரோடு அகல ரயில்பாதைத் திட்டம்!
மக்காச்சோளம் – சோயா போன்ற முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க ரயில்வேயில் கட்டணச் சலுகை!
அதுமட்டுமல்ல! பத்தாண்டுகளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து!
தொழிலாளர் விரோதச் சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்!
கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி!
உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்!
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!
100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாட்கள் இனி 150 நாட்களாக உயர்வு! ஒரு நாள் ஊதியமாக 400 ரூபாய்!
மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி!
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது, விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!
இதையெல்லாம் இந்தியா கூட்டணி ஆட்சியில் வலியுறுத்தி நிறைவேற்றி, “தி.மு.க. சொன்னதைச் செய்யும்” என்று மீண்டும் நிரூபிப்போம்! இப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நாங்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தால் தொழில்வளம் மிகுந்த இந்தக் கோவையை கடந்த 10 ஆண்டாக பா.ஜ.க. எப்படியெல்லாம் நாசமாக்கி இருக்கிறது என்று சொல்லட்டுமா?
பா.ஜ.க. ஆட்சியில் இரண்டு பெரிய தாக்குதல் நடத்தியது! கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி, ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்த பணத்தையும் பறித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் முதல் தாக்குதல். இதனால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடங்கிப் போனது! இரண்டாவது தாக்குதல், ஜி.எஸ்.டி என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தக் கோவையில் முதலாளிகளாக இருந்தவர்களை எல்லாம், கடனாளிகளாக மாற்றினார்கள்! பலர் தங்களின் கம்பெனிகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்!
அதுமட்டுமல்ல வங்கதேசம் கூட பா.ஜ.க. அரசு போட்ட ஒப்பந்தத்தால், இங்கு உருவான நூலும்-துணியும் தேங்கிக் கிடக்கிறது. 35 விழுக்காடு மில்களை, மூட வேண்டிய நிலையில் இந்த மேற்கு மண்டலம் இருக்கிறது! இரண்டு முறை கோவைப் பகுதிக்கு வந்து, கொங்குப் பகுதி எனக்கு மிகவும் நெருக்கமான பகுதி என்று பிரதமர் பேசினாரே! தி.மு.க. தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கிறது என்று சொன்னாரே! எப்படிப்பட்ட வடிகட்டிய பொய் இது! இந்தக் கோவை பொதுக்கூட்ட மேடையில் இருந்து, நான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம், 6500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீட்டை மேற்கொள்வதாக முடிவானது. தமிழ்நாடு அரசும் இதற்கான எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, அவர்களை மிரட்டி அந்தத் தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றிவிட்டார்கள்! இதுதான் கோவைக்கான பா.ஜ.க.வின் போலிப் பாசம்! எதிர்காலத்தில், மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும், செமிகண்டக்டர் தொழில் திட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு மிரட்டி மடைமாற்றியது பா.ஜ.க. தான்!
எப்படி கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? கோவையில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? கோவை மக்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்? கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பா.ஜ.க. போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்! தொழில் வளர்ச்சி போய்விடும்! நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது!
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்! அதனால், பிரதமர் இங்கு வந்து, இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும், தமிழ்நாடு பிடிக்கும் என்று பேசும் போலி முகமூடி மொத்தமாகக் கிழிந்து தொங்கிவிட்டது! இப்படி “கோவை வேண்டாம்” – “தமிழ்நாடு வேண்டாம்” என்று புறக்கணித்த மோடிக்கு இப்போது தமிழ்நாடு சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி” சொல்லுங்கள், “வேண்டாம் மோடி” இன்னும் சத்தமாக, “வேண்டாம் மோடி” தெற்கிலிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும்! தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ்ப் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாட்டு மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்கவேண்டும்!
பா.ஜ.க.கூட்டணியையும், பா.ஜ.க.வின் B-டீமான அ.தி.மு.க .கூட்டணியையும் ஒருசேர வீழத்தவேண்டும்! இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு, இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க – உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே! நன்றி! வணக்கம்! என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.