செந்தில் பாலாஜி எச்சரிக்கை: கவுதம் அதானியை முதல்வர் சந்திக்கவில்லை..! அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை..!

கவுதம் அதானியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. கவுதம் அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவோர் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழிலதிபர் கவுதம் அதானி குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, நிலக்கரி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள கவுதம் அதானி, உலக பணக்காரர்களில் பட்டியலில் 17-வது இடத்திலும் இருக்கின்றார்.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு ஆணையம் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட நிலையில் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்து பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது.

இது தொடர்பாக செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலதிபர் அதானியை தமிழக முதல்வர் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பதுபோலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு – தெரிவித்து வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் அதானியை சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. அதிமுக ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தலைநிமிர வைத்துள்ளார் முதல்வர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடிப்படை உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடு அல்ல.

“ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும்” என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI)வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த மின்சார வாரியங்களைப் போல தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) நிறுவனத்துடன் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்து வருகின்றது. குறிப்பாக, திமுக அரசு அமைந்தப் பிறகு, எந்த தனியார் நிறுவனங்களுடனும் மின்சார வாரியம் நேரடியாக எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை.

இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், ஒன்றிய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள மரபுசாரா கொள்முதல் (RPO) இலக்குகளை அடைவதற்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களாகும். இதில், எவ்வித முறைகேடும், விதிமுறை மீறல்களும் இல்லை.

இன்னும் சொல்லப் போனால், ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பெறுவது குறித்த கட்டாய விதி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அதானி லிமிடெட் நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்கள் மூலமாக, 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் 04/07/2015 அன்று, கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 என முடிவு செய்து, 31/03/2016க்கு முன் உற்பத்தி ஆலைகள் இயக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

அதானி நிறுவனம் 31/03/2016 க்கு முன் பல்வேறு தேதிகளில் 313 மெகாவாட் மின்சாரத்தை இயக்கி, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 உரிமை கோரியது. 31/03/2016 தேதிக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து, 18/09/2016 அன்று 288 மெகாவாட் மின்சாரம் வழங்கியது. 31/03/2016 க்குப் பிறகு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 வேண்டுமென அதானி நிறுவனம் கோரியது.. மேலும் 22/03/2016 முதல் மின்சாரம் வழங்கிட தயாராக இருந்ததாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் (TANGEDCO) முழு செயலற்றதன்மையின் காரணமாக மின்சாரம் வழங்க முடியவில்லை எனவும் திரித்து கூறியது.

ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், அதானி நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்து, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.5.10 கட்டணத்தை கொடுக்க முடியுமென தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் அதானி நிறுவனம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முன், MP எண்.25(2020) மற்றும் MP எண். 26(2020) என இரு மனுக்களை தாக்கல் செய்தது. ஆயினும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 20/07/2021 அன்று, அதானி நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அதானி நிறுவனம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முன் (APTEL) மேல்முறையீடு செய்தது (எண்.287 – 2021). மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அந்த மேல்முறையீட்டை அனுமதித்து, யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டண விகிதத்தை 07/10/2022 அன்று அங்கீகரித்தது. மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், அதானி நிறுவனம், ரூ.568 கோடிக்கான பில்களை PRAPTI (Payment Ratification and Analysis in Power Procurement) போர்ட்டலில் சமர்ப்பித்தது.. PRAPTI போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்ட பில்களை 75 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென விதி உள்ளது.

ஆயினும், மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2022-ல், சிவில் மேல்முறையீட்டு முறையில் (எண். 38926), இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரியது. 17/02/2023 அன்று, உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. அதன் காரணமாகவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ரூ.568 கோடி செலுத்தியது. தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீடு, (மேல்முறையீட்டு எண் 1274 மற்றும் 1275 – 2023) இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தமிழ்நாடு அரசின் நலனை- பகிர்மானக் கழகத்தின் நலனைக் காப்பதற்கு எங்களது வலுவான வாதத்தை எடுத்துரைக்க உள்ளோம்.

அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை ரூ.7.01க்கு நீண்ட கால அடிப்படையில் பெற 2014-ல் ஒப்பந்தமிட்ட அரசை விட்டுவிட்டு, 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற உடனே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அதானி நிறுவனத்துக்கு எதிரான வழக்கை திறம்பட நடத்தியை திராவிட முன்னேற்றக் கழக அரசை- மின்சார வாரியத்திற்கு சாதகமாக, அதாவது ரூ.5.10-க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்னும் அளவிற்கு சாதகமான ஆணையைப் பெற்ற அரசை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமாகாது. அதனால்தான் அறிக்கைகள் விட ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதற்கு அடிப்படை புரிதலும் அறிவும் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டு காலமும் மின்சார கொள்முதல் குறித்து எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அதாவது 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நேரடியாகவே தனியார் நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ரூபாய் 7.01 என்ற அளவில் நீண்ட காலம் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டதை விட, கழக ஆட்சியில் மிகக் குறைந்த அளவில், யூனிட் ரூபாய் 2.61 மட்டும் என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுவும் தனியார் நிறுவனத்துடன் அல்ல; ஒன்றிய அரசின் நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மின் உற்பத்தியினைப் பொருத்தவரையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அனைத்து மின் நிலையங்களிலிருந்தும் முழுமையான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையினைப் பொறுத்து, நடுத்தர மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் அடிப்படையில் யூனிட் ஒன்றிற்கு ரூ.3.45 முதல் 5.31 வரை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒளிவு மறைவற்ற ஒப்பதப்புள்ளி வாயிலாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. 1×800 மெகாவாட் திறனுள்ள வடசென்னை அனல்மின் திட்டம், நிலை-3, கடந்த 27.06.2024 அன்று, தனது முழு நிறுவுத்திறனான 800 மெகாவாட் மின் உற்பத்தியை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

இதுவரை சுமார் 750 மில்லியன் யூனிட் மின்சாரம் வடசென்னை அனல் மின் திட்டம், நிலை-3-இல் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு பயன்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படைத் தகவல்களைக்கூட அறியாதவர்கள் போல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது! மின்கட்டண உயர்வு மூலம் 31,500 கோடி ரூபாய் என்று ஒரு அபத்தமான குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள்.

எப்போது மின் கட்டண உயர்வை ஏற்படுத்தினாலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது திராவிட முன்னேற்றக் கழக அரசு மட்டுமே. இலட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு மின் மானியமாக வழங்க ஆணை வெளியிட்டு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வே இல்லாமல் பார்த்துக்கொண்டவர் முதல்வர் மட்டுமே என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஏழை எளிய மின் நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும், தமிழ்நாடு அரசு 17,117 கோடி ரூபாயினை மானியமாகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கி, தமிழ்நாட்டு மக்களை தாய் உள்ளத்துடன் நடத்திச் செல்பவரும் முதல்வர் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதைவிட முக்கியமாக மின்கட்டண வருவாய் அதிகரிப்பு ஒருபுறம் என்றாலும், விலைக்குறைவான மின்கொள்முதல், செலவுகளைப் பெருமளவில் கட்டுப்படுத்தியது, உள்நாட்டு மின் உற்பத்தி என நிர்வாகத் திறன்மிக்க நடவடிக்கைகள் கழக அரசில்தான் எடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் என்பதை, அறியாமையில் உளறிக் கொட்டும் “சில” “அறிக்கை அரசியல்வாதிகள்” புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்!

ஆகவே உண்மை இவ்வாறு இருக்க, 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கட்டாயத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசு நிறுவனமான சூரிய மின்சக்தி கழகத்திடமிருந்து இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைப் போலவே சூரிய ஒளி மின்சாரத்தைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அது சம்பந்தமாக 2024-ஆம் ஆண்டு நிறுவனத்தின் பிரதிநிதியை முதல்வரை சந்தித்ததாகக் கூறுவது முற்றிலும் தவறானது மட்டுமல்லாது, மக்களிடம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைக் கொண்டுச் சென்று தமிழ்நாட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகவே கருத வேண்டி உள்ளது.

அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதையும் மறைத்து- உச்ச நீதிமன்ற உத்தரவையும் அறியாதவர்கள் போல்- அதிமுக அரசின் மின்கொள்முதலை திமுக அரசின் மின் கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ- அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்குள்தான் அதிமுக- பாஜக கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசில், மின்வாரியம் நிர்வாக ரீதியாகவும், நிதிச் சுமையிலிருந்தும் சீரடைந்து, ஏழை எளிய நுகர்வோரின் நலனைப் பிரதானமாக எண்ணி நல்லாட்சிக்கு இலக்கணமாகச் செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள இயலாமல், “அவரைச் சந்தித்தார்” “இந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்” என்றெல்லாம் பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரா.முத்தரசன்: யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும்..!

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என்பதல்ல பிரச்சனை யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும். யார், யாருக்கு லஞ்சம் கொடுத்தனர் என்ற பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்கட்டும் என இரா.முத்தரசன் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு இரா.முத்தரசன் பதிலளித்தார்.

அப்போது, பாஜக ஆட்சியில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இல்லை. அதை பாதுகாக்க வேண்டும் என்று தான் இன்று உறுதிமொழி ஏற்கிறோம். இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக முறையைத் தான் கடைபிடித்துள்ளோம். மற்றொரு முறை ஆயுதம் ஏந்திய முறை இருக்கிறது. அதை நாம் கடைபிடிக்கவில்லை.

இந்நிலையில் பாராளுமன்ற ஜனநாயக முறையை சிதைக்கும் வகையில் தான் பாஜக அரசு செயல்படுகிறது. மகாராஷ்டிரா தேர்தலில் இஸ்லாமிய பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இது எந்த ஜனநாயக முறை? வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதுவும் தற்போது பறிக்கப்படுகிறது. இது பேராபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே தான் இதை பாதுகாக்க வேண்டும்.

அதானி விவகாரத்தில் பாஜக விளக்கெண்ணெய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும். யார், யாருக்கு லஞ்சம் கொடுத்தனர் என்ற பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்கட்டும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என்பதல்ல பிரச்சனை என இரா.முத்தரசன் தெரிவித்தார்.

மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தல்: அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்..!

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “அதானி குழுமம் ஊழல், லஞ்சம் மற்றும் நிதி முறைகேடு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப விரும்பினோம். பிரிவு 267-ன் கீழ் அதானி பிரச்னையை எழுப்பினோம்.

சுமார் ரூ.2030 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணம் லஞ்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டுக்கு சொல்ல விரும்பினோம். இதற்குமுன் அதானி குழுமம் மீது, பங்குச் சந்தை முறைகேடு, நிதி மோசடி, ஷெல் நிறுவன மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மோடி எந்த நாட்டுக்குச் சென்றாலும் அதானிக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது மிக நீண்ட பட்டியல். இந்த விஷயங்களை அபையில் கொண்டு வருவது முக்கியம். இதனால் நாடு இழப்புகளைச் சந்தித்துள்ளது. இதனால் உலகம் நம் மீது நம்பிக்கை இழக்கக்கூடும். நாட்டைக் காப்பாற்றவே இந்தப் பிரச்சினையை எழுப்பினோம். 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி வங்கதேசம் சென்றபோது, ​​அதானி குழுமத்துக்கு அங்கு மின் திட்டம் கிடைத்தது. மலேசியா, இஸ்ரேல், சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், தான்சானியா, வியட்நாம், கிரீஸ் என மோடி எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் அதானிக்கு திட்டங்கள் கிடைத்தன.

மோடியின் ஆசி இல்லாவிட்டால் அதானியை எந்த நாடு தேர்ந்தெடுக்கும்? அனைத்தும் மோடியின் ஆதரவுடன் நடப்பதால், நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையை எழுப்ப விரும்பினோம். இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே விதி 267 உருவாக்கப்பட்டது. உண்மை வெளிவர நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறோம் என்று மோடி கூறுகிறார். ஆனால், இதுபோன்ற ஊழல் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் நற்பெயருக்கு அவர்கள்தான் களங்கம் ஏற்படுத்துகிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக மல்லிகார்ஜுன் கார்கே அறையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர்.

இதில், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே, “உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவதே அரசாங்கம் எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை.

கோடிக்கணக்கான சில்லறை முதலீட்டாளர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த முதலீடுகள் ஆபத்தில் உள்ளன. எனவே, இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதையே இண்டியா கூட்டணிக் கட்சிகள் கோருகின்றன. இந்த நாட்டை ஏகபோகமாக நடத்த அனுமதிக்க முடியாது. இந்தியாவின் தொழில்முனைவோர்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். சம வாய்ப்புகள், செல்வத்தின் சமமான பகிர்வு ஆகியவை கொண்டதாக தனியார் துறை விளங்க வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சந்தை உந்துதல் போட்டியே நாட்டுக்குத் தேவை” என மல்லிகார்ஜுன் கார்கே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான்: அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்கு முறைவாசல் செய்யும் பாஜக..!

மக்களின் வாக்குகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்கு முறைவாசல் செய்திடும் பாஜகவின் ஆட்சியதிகாரம் நாட்டைப் பிடித்த பெருங்கேடு!
என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில்,  பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானி ஒன்றிய அரசின் நிறுவனத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்கு ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய்க்கும் மேலாக இலஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியது அம்பலமாகி, அந்நாட்டு அரசு அதானி உள்ளிட்டோரைக் கைதுசெய்ய உத்தரவிட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கும் பேரவமானமாகும்.

‘மோடியின் பினாமி’ என வர்ணிக்கிற அளவுக்கு கெளதம் அதானிக்கு நிழல்போல எல்லாவுமாக இருக்கிற பிரதமர் நரேந்திரமோடி, நாட்டையே உலுக்கியிருக்கும் இம்மாபெரும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து இப்போதுவரை வாய்திறக்காதிருப்பதேன்? நாட்டின் பெயரையும், புகழையும் சீர்குலைக்கும் வகையில் முறைகேடுசெய்து அமெரிக்க அரசால் கைதுப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அதானியின் மீதும், அவரது குழுமத்தின் மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்காதிருப்பது எதற்காக? இன்னும் அவரைக் காப்பாற்றவும், கரைசேர்க்கவும்தான் முயற்சிக்கிறதா பாஜக அரசு? இழிநிலை! மக்களின் வாக்குகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்கு முறைவாசல் செய்திடும் பாஜகவின் ஆட்சியதிகாரம் நாட்டைப் பிடித்த பெருங்கேடு!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மின்சார வாரியங்களுக்கு அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 2019 – 20 -ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமானது (SECI) அதானியின் நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒப்பந்தமிட்டிருக்கிறது. அதன்படி, அதானி நிறுவனம் 8 ஜிகா வாட் மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துக்கு வழங்கும். விலை அதிகமாக இருந்ததால் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து மின்விநியோக நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்குவதில் சிக்கல் நிலவியது.

இந்நிலையில், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யச் சொல்லி ஆந்திரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்குக்கு 2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 2,000 கோடி ரூபாய்வரை இலஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறதெனக் கூறி, அதானி குழுமத்தின் மாபெரும் முறைகேட்டை ஆதாரங்களோடு வெளிப்படுத்தியிருக்கிறது அமெரிக்க அரசு.

இந்த வழக்கு அமெரிக்க நாட்டின் நியூயார்க் கிழக்கு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தொடுக்கப்பட்டு, கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 2,000 கோடி ரூபாயை இந்தியாவின் பல்வேறு மாநில மின்சார வாரியங்களுக்கு இலஞ்சமாகக் கொடுத்து பெறப்பட்ட ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் முதலீடுகளைப் பெற முயன்றபோது ஒட்டுமொத்தமாகச் சிக்கியிருக்கிறது அதானி குழுமம்.

டிசம்பர் 1, 2021 அன்று இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் 7 ஜிகா வாட் மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது ஆந்திர அரசு. இதற்காக, 1,750 கோடி ரூபாய் அம்மாநில அரசுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசின் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, செப்டம்பர் 21, 2021 அன்று 1000 மெகாவாட் மின்சாரத்தைப் பெற இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் தமிழக மின்சார வாரியம் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இதற்குப் பின்புலத்தில் அதானி குழுமம் தமிழக மின்சார வாரியத்துக்குக் கோடிகளைக் கொட்டியிறைத்திருக்கிறது என்பது அமெரிக்க அரசின் குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

2012- 2016-ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில், முந்தைய அதிமுக ஆட்சியின்போது தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசிய நிறுவனத்திடமிருந்து வாங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (TANGEDCO) அதானி குழுமம் மும்மடங்கு அதிக விலைக்கு விற்று, முறைகேடு செய்து 6,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது குறித்து அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அதற்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை; இச்சமயத்தில், திமுகவின் ஆட்சி நிர்வாகத்துக்கு அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்து, இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து (SECI) அதிக விலைக்கு மின்சாரம் வாங்கச் செய்திருக்கும் செய்தி வெளியாகியிருப்பது திராவிடக்கட்சிகளின் கேடுகெட்ட ஆட்சி நிர்வாகத்துக்கான சமகாலச் சாட்சிகளாகும்.

திராவிட மாடல் ஆட்சியின் இலட்சணம் அமெரிக்காவரை சென்று தமிழ்நாட்டின் மானம் சந்தி சிரித்து நிற்கிறது. இருந்தும், இதுவரை தமிழ்நாட்டின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வாய்திறக்காது கள்ளமௌனம் சாதிக்கிறார். எல்லாவற்றுக்கும் அறிக்கைப்போர் தொடுத்து, லாவணிக்கச்சேரி நடத்துகிற திமுக, இவ்விவகாரத்தில் அடக்கி வாசிப்பது ஏன்? என்பது புரியவில்லை. அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் இடவில்லை என்பதோடு நிறுத்திக் கொண்டுவிட்டாரே மின்சாரத்துறை அமைச்சர் தம்பி செந்தில்பாலாஜி, அதானி குழுமத்தோடு திமுக அரசு ஒப்பந்தம் இட்டதாக யாரும் குற்றஞ்சாட்டவில்லையே! அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்துதான், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து தமிழக மின்சார வாரியம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தமிட்டது என்பதுதானே குற்றச்சாட்டு.

அதுகுறித்து திமுக அரசின் நிலைப்பாடென்ன? என்ன சொல்லப்போகிறார் தம்பி செந்தில் பாலாஜி? அதானி தமிழக மின்சார வாரியத்துக்கு இலஞ்சம் கொடுக்கவில்லை; அப்பழுக்கற்ற அதானி மீது அமெரிக்க அரசு அநியாயமாகக் குற்றஞ்சுமத்துகிறதென்றா? யார் இலஞ்சம் வாங்கியது? அதிகாரிகளா? அமைச்சரா? இல்லை! முதல்வரா? அதிகாரிகள்தானென்றால், அமைச்சருக்குத் தெரியாது அதிகாரிகளுக்கு அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்துவிட முடியுமா? அரசுப்போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்த அடித்தட்டு மக்களிடமே இலஞ்சம் வாங்கிக் கைகளையும், பைகளையும் நிரப்பிய வித்தகரான தம்பி செந்தில்பாலாஜி, அதானி குழுமத்தையா விட்டுவைப்பார்? ஐயா கருணாநிதி கூறிய, தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா எனும் முதுமொழி நினைவுக்கு வருகிறதில்லையா?

ஏற்கனவே, 1.6 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேலான கடனில் தமிழக மின்சார வாரியம் சிக்கித் தவிக்கும் சூழலில், அச்சுமையை மக்களின் தலையில் மின்கட்டண உயர்வாக ஏற்றி வரும் திமுக அரசு, இனியென்ன செய்யப் போகிறது? அதானி குழுமத்திடம் பல கோடிகளை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி ஏழைகளின் வயிற்றிலடிப்பதுதான் சமூக நீதி அரசா? அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதியில் செய்திட்ட 6,000 கோடி ரூபாய் ஊழல் மீது இன்றுவரை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மறுப்பதுதான் திராவிட மாடலா?

கடந்த சூலை 10 அன்று தமிழ்நாட்டுக்கு வந்த கெளதம் அதானி, முதல்வர் ஸ்டாலினை ரகசியமாகச் சந்தித்துச் செல்ல வேண்டிய அவசியமென்ன? சந்திப்பையே வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்னப் பேசி முடிக்கப்பட்டது? முதல்வர் ஸ்டாலின் கெளதம் அதானியைச் சந்திப்பதும், கெளதம் அதானியின் மகன் கரன் அதானி துணை முதல்வரான தம்பி உதயநிதியின் பதவியேற்புக்கு வாழ்த்துச் சொல்வதும் எதன் வெளிப்பாடு? திமுக அரசுக்கும், கெளதம் அதானிக்கும் இடையே என்ன ரகசிய உறவு? அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து திமுகவின் ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கிறது திமுக அரசு. இத்தோடு, மோசடிப் பின்புலம் கொண்ட அதானி குழுமத்தை 42,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர் மாநாட்டின் வாயிலாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. அதானி மீது பாசத்தைப் பொழிவதிலும், அவரைக் காப்பாற்றுவதிலும் பாஜகவோடு திமுக ஏன் போட்டிபோடுகிறது? இதுதான் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கான ஆட்சியா? இதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கான அதிகாரமா? வெட்கக்கேடு! பேரவலம்!

ஆகவே, நாட்டின் மானத்தைக் கப்பலேற்றிய கெளதம் அதானி மீதும், அவரது குழுமத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து, அவரைக் கைதுசெய்யவும், அவரது குழுமத்துடான அரசின் ஒப்பந்தங்களை ரத்து செய்து, அக்குழுமத்தினை மொத்தமாகக் கறுப்புப்பட்டியலில் வைக்கவுமான செயல்பாடுகளை மேற்கொள்ள மறுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டுக்கே செய்திடும் பச்சைத்துரோகமாகும்.

இத்தோடு, பாஜக அரசை எதிர்ப்பதாக வெளிவேடமிட்டுக் கொண்டே, அவர்களோடு கொல்லைப்புற வழியாக உறவாடி, அதானிக்கு வாசல்திறந்துவிடும் திமுக அரசின் நயவஞ்சகப்போக்கு தமிழர்களது நலனை அடகு வைத்திடும் கங்காணித்தனத்தின் உச்சம். மக்களாட்சிக்கு எதிரான இச்செயல்பாடுகளுக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலீட்டாளர்களை ஏமாற்ற கவுதம் அதானி லஞ்சம், முறைகேட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா..!

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்த நிலையில் இந்த அமெரிக்கா குற்றச்சாட்டு தொழில் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, நிலக்கரி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி ஈடுபட்டு வருகிறார்.இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள கவுதம் அதானி, உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். அவர் மீது அமெரிக்க பாதுகாப்பு ஆணையம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த ‘வால் ஸ்ட்ரீட்’ முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தச் செய்தியை அடுத்து அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை ரத்து செய்ததாக அமெரிக்காவில் இருந்து கிடைத்த தகவல் உறுதி செய்துள்ளது.