திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்..!

இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி-ஒன்றிய பாசிச பாஜக அரசுக்கு எதிராக, திருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலை மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் உடுமலை மேற்கு ஒன்றியம் தேவனூர் புதூர் அண்ணா திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 12-ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டு அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் மோடி அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்து கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்பட போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து ‘கூட்டு நடவடிக்கை குழு”வை அமைத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 7 மாநிலங்களை சேர்ந்த 29 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தி.மு.க. சார்பில் வரும் 12-ம் தேதி “தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டங்கள் மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம்மை இரண்டாந்தர குடிமக்களாக்க நினைக்கும் மோடி அரசின் சதியை மக்களிடம் எடுத்து கூறும் விதமாகவும், மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரிய வைக்கும் விதமாகவும், மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெறும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களில் மாவட்டம், மாநகரம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டும் என திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலை மேற்கு ஒன்றியம், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பாக ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசினைவில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து உடுமலை மேற்கு ஒன்றியம் மடத்துக்குளம் தொகுதி மாபெரும் பொதுக்கூட்டம் உடுமலை மேற்கு ஒன்றியம் தேவனூர் புதூர் அண்ணா திடலில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் க. ஈஸ்வரசாமி, ஜெய ராமகிருஷ்ணன், பத்மநாபன், ஜெயக்குமார், செயலாளர்.தி. செழியன், ஆடி வெள்ளி முரளி, கதிர்வேல், கமலக்கண்ணன், S.N. காணியப்பன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டு பொதுக் கூட்டத்தை சிறப்பித்தார்கள்.

 

செந்தில் பாலாஜி: அண்ணாமலை தம்பி இனி பார்த்து சபதம் எடுங்க…!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுக்கும் போது கொஞ்சம் யோசித்து எடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அட்வைஸ் கொடுத்துள்ளார். கரூர் மாவட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையிலான மோதல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின் போதே தொடங்கிவிட்டது.

ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரும் ரஃபேல் வாட்ச் விவகாரம், விமானத்தின் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தை வைத்து அண்ணாமலையை செந்தில் பாலாஜி சாடினார். அதேபோல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் செய்துள்ளார். கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி பேசுகையில், பெரியார் கருத்துகளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் விரைவில் கோயம்புத்தூரில் பெரியார் மாநாடு நடத்தப்படும்.

பாஜகவினர் ஏதோ ஒரேயொரு தொகுதியில் வென்றுவிட்டதால், கோயம்புத்தூரே அவர்களுக்கு சொந்தம் என்பதை போல் ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்து வருகிறார்கள். கோயம்புத்தூர் எப்போதும் பெரியார் மண், திராவிட மண் என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள். கோயம்புத்தூரில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வென்றுவிட்டதால், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெல்லலாம் என்று நினைத்தார்கள்.

ஆனால் சட்டமன்றத் தேர்தலில் உள்ளூரிலேயே விலை போகாத ஒரு ஆடு.. நாடாமன்றத் தேர்தலில் வெளியூர் சந்தைக்கு வந்து விலை போகுமா என்று வந்தார்கள்.. தம்பி.. இந்த ஊரும் பெரியார் மண்தான்.. உனக்கு அங்கேயும் வேலையில்ல.. இங்கேயும் வேலையில்ல. தமிழ்நாட்டில் இனி எங்கேயும் வேலையில்லை என்று கூறிவிட்டனர். உலகத்திலேயே நான்தான் அறிவாளி என்று நினைத்து கொண்டு, தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டு.. ஊர் மக்கள் நாட்டு மக்கள் அடிப்பதற்கு முன் நானே என்னை அடித்து கொள்கிறேன் என்று வீடியோ எடுத்து வெளியிட்டார்.

சாட்டையால் அடித்ததோடு மட்டுமல்லாமல், செருப்பு போட மாட்டேன் என்று புது கதையை சொன்னார். சபதம் எடுப்பதில் அட்வைஸ் தம்பி, தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர், வழியில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இனி வாழ்நாள் முழுக்க உன்னால் செருப்பே போட முடியாது. கொஞ்சம் யோசித்து சபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாநிலத் தலைவர் என்ற பதவியை எடுத்துவிட்டால், அதிக நாட்கள் அங்கு இருக்க மாட்டார் என்று சிலர் கூறினார்கள்.

ஆனால் என்னிடம் கேட்டால், அவர் அங்கேயே இருக்க வேண்டும். அதுதான் நல்லது. அரசியலுக்கு வந்துவிட்டால் சில ஆண்டுகளிலேயே உச்சத்தை எட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த பட்டியலில் செருப்பு போடாமல் சாட்டையடித்து கொண்டவரும் இருக்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று உழைத்து இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு சவால் விட்ட சீமான்: கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா? களத்தில் பார்த்துடலாமா?

கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகன என்பதை 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் பார்த்துவிடலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டதும் அது கிழிக்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையாகிவிட்டது.

இது குறித்து தருமபுரியில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, நான் சென்னையில் இல்லை என்பது காவல்துறைக்கு தெரியும். அப்படி இருந்தும் சம்மன் கொடுக்க என் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு என் மனைவி இருந்தாரே, அவரிடம் கொடுத்திருக்கலாமே, அதை விட்டுவிட்டு கேட்டில் ஏன் சம்மனை ஒட்ட வேண்டும்? அந்த சம்மன் நான் பார்ப்பதற்கா இல்லை ஊரே பார்ப்பதற்கா?

பெங்களூரில் ஒரு நடிகையை தேடி சென்று காவல்துறையினர் சம்மன் கொடுக்க முடியும் போது என்னை தேடி ஓசூருக்கு வந்து சம்மன் கொடுத்திருக்கலாமே! என்ன செய்தாலும் என்னை அடக்க முடியவில்லை. அதனால் அந்த பெண்ணை அழைத்து வந்து திமுக அரசு இது போல் வீண் பழி போடுகிறார்கள். இப்போதும் சொல்கிறேன், ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இத்தனை ஓட்டு வாங்கியிருக்கும் நான்தான் பெரிய தலைவன். 2026 -ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் யார் என பார்த்துவிடலாம்.

கருணாநிதி மகனா, இல்லை பிரபாகரன் மகனா, தமிழா, திராவிடமா என்பதை 2026 -ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் பார்த்துவிடலாம். இது போல் என்னை மிரட்டினால் நான் பயந்துவிடுவேனா, உங்கள் அப்பா என்னை ஒரு ஆண்டுக்கு ஜெயிலில் வைத்திருந்தார். நான் பயந்துட்டேனா என்னை பார்த்தால் பயப்படுற மாதிரியா தெரிகிறது? ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாலே நான் குற்றவாளி ஆகிவிடுவேனா. அந்த காவல் துறை ஆய்வாளர் பிரவீனை எனக்கு நன்றாக தெரியும். அவருடைய தந்தை, ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் இறந்துவிட்டால் அதற்காக என்னை பழிவாங்குவதா?

234 தொகுதிகளிலும் 2026 -ஆம் ஆண்டு திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா, 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், ஆட்சி மாறும் என்பதை காவல் துறையின் மனதில் வைக்க வேண்டும். எங்கள் வீட்டு காவலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவிற்கு என்ன நடந்தது. விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8-ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும். இன்று ஆஜராவேனா என கேட்கிறீர்களா என சீமான் தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ விமர்சனம்: சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக..!

சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை மாகப்பூபாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பொதுமக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ,” அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர்கல்வி நிலையங்கள் அதிகரிப்பால் இடைநிற்றல் இல்லாமல் கல்வியில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கி உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக இஸ்ரோவில் கூட தமிழர்கள் உயர்பதவியில் அலங்கரித்து வந்துள்ளனர் மற்றும் வருகின்றனர். மடிக்கணினி வழங்கி மாணவர்களுக்கு வசதி படைத்து கொடுத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஜெ., பெண் சிசு பாதுகாவலர் என அன்னை தெரசா பாராட்டினார். கைலி கட்டியவர்கள் தீவிரவாதிகள் என்று கருணாநிதி சொன்னார். அத்தகைய திமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். திமுகவினர் சிறுபான்மையினர் நலனுக்கு கொண்டுவந்த திட்டங்கள் என்ன? ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 4 வருடங்களில் நிறைவேற்றாமல் உள்ளார்.

சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்டாலின் எத்தனுக்கு எத்தனாக உள்ளார். கருணாநிதியை விஞ்சிவிட்டார். அதனை பீகார்காரன் சொல்லிக்கொடுத்துள்ளார். பெண் காவல் அதிகாரிக்கு கூட இந்த அரசால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் 200 சீட்டில் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றனர். அரிசி, பருப்பு, பால் உள்ளிட்டவைகளின் விலை உயர்வை புள்ளி விவரங்களோடு பேசினார்.

மின்கட்டணம் இன்றைக்கு 52% உயர்ந்துள்ளது. 16 நாள் வெளிநாடுகளில் முதலீட்டை ஈர்க்க சென்றவர் சைக்கிளை மட்டுமே ஓட்டினார், எந்த முதலீட்டையும் பெற்று வரவில்லை. திமுக அமைச்சர்களில் 10 விழுக்காடு பேர் ஜாமீன் உள்ளவர்கள் தான், காற்றை விற்று ஊழல் செய்து விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து வருகின்றனர். முன்பைவிட இன்றைக்கு தெளிச்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். வேங்கைவயலில் உயர்மட்ட தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை இன்றளவும் கைது செய்யவில்லை, அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார்..? என்பதற்கு விடை தெரியவில்லை. மதகலவரம் செய்து மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றம் செய்கின்றனர்.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜகவும், திமுகவும் கள்ள கூட்டணியில் உள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதனை மலுப்ப உதயநிதியும், அண்ணாமலையும் சண்டையிட்டு கொள்வது போல் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். இன்றைக்கு நம் வீடுகளில் நாய், பூனை வளர்த்தால் வரி, வரி மேல் வரி போட்டு கொண்டு மக்களை வாட்டி வருகின்றனர், வரும் காலங்களில் மக்கள் சாலையில் நடந்தால் வரி என்றும் கூட சொல்லுவார்கள். அதிமுக 10 ஆண்டுகளில் பெற்ற 3.5 லட்சம் கோடி, ஆனால் திமுக கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தொடர்ந்து மக்களை ஏமாற்ற தயாராகி வருகின்றனர்” என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்..! பாஜக, திமுகவை மறைமுகமாக சாடிய விஜய்..!

நம்ம பாசிசமும், பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர் என தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்தார். மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், “2026 தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம். அதற்கு பூத் ஏஜென்டுகள் மிகவும் முக்கியம்.

ஆனால் அது பெரிய கட்சிகளுக்குதான் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். தவெக எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்ததல்ல என்று அன்றைக்கு தெரியவரும். இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு இடிருக்கிறார்கள். இங்கே அதை செயல்படுத்தவில்லையென்றால் நம் மாநில அரசுக்கு நிதி கொடுக்க மாட்டார்களாம். கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இங்கே எவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது. நம்ம பாசிசமும், பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அடித்துக் கொள்வது போல அடித்துக் கொள்வார்களாம். இதை நாம் நம்பவேண்டுமாம். ‘வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ’

இதையெல்லாம் மக்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நம் ஊர் சுயமரியாதை மிக்க ஊர். நாம் எல்லாரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யாரும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். எந்த மொழியை வேண்டுமானாலும் விருப்பத்துடன் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக் குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால், அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி? எனவே தவெக சார்பில் இதனை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம்” என விஜய் தெரிவித்தார்.

பத்ம பிரியா ஆவேசம்: இந்தியாவையே உலுக்கக்கூடிய மிகப்பெரிய ஸ்கேமுக்கு மத்திய அரசு ரெடியாகுது..!

தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை பறிப்பதுடன், இன்னொரு முறை எதிர்த்து பேசினாலும் அந்த குரலுக்கு பவர் கிடையாது என்ற அளவுக்கு மக்களவை தொகுதி மறுவரையறையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது என பத்ம பிரியா வீடியோ வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 என்பதைத் தேர்தல் சீர்திருத்தம் பரிசீலனை என்கிற பெயரால், 39 -ல் இருந்து 31 ஆக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதனால் எட்டு நாடாளுமன்ற தொகுதிகளை தமிழ்நாடு இழக்க வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுபற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த பத்ம பிரியா வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவையே உலுக்கக்கூடிய மிகப்பெரிய ஸ்கேமுக்குரெடியாகுது ஒன்றிய அரசு.. தமிழ்நாடு மாதிரியான தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை பறிப்பதுடன், இன்னொரு முறை எதிர்த்து பேசினாலும் அந்த குரலுக்கு பவர் கிடையாது அப்படீன்ற அளவுக்கு மக்களவை தொகுதி மறுவரையறையை கையில் எடுத்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் எவ்வளவு MP சீட் கிடைக்கும் என்பதை மக்கள் தொகையை அடிப்படையாக முடிவெடுக்க போகிறது.

கொஞ்ச வருடங்களுக்கு முன்பு மக்கள் தொகையை குறையுங்கள் என மத்திய அரசு கூறியது. அதன்படி தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை குறைப்பதை சரியாக செய்தார்கள். முக்கியமாக தமிழ்நாடு மாதிரியான மாநிலங்கள் செய்ததால், இன்றைக்கு நம்முடைய பிறப்பு விகிதம் 1.8 ஆக உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் மாதிரியான மாநிலங்களில் 2.3 ஆக இருக்கிறது.. ஆனால் நீங்கள் சொன்னதை கேட்டு நடந்ததால் என்ன நடந்திருக்கு பாருங்க.

இன்றைக்கு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து MP சீட் என்று சொல்கிறீர்கள்.. MP சீட் எண்ணிக்கை குறைந்துவிடும். பணம் ஒதுக்கீடு குறைந்துவிடும்.. அதிகாரங்களும் குறைந்துவிடும்.. ஏற்கனவே பணத்தை, பவரையும் கையில் வைத்துக் கொண்டு 4 கவர்மெண்ட்டை கையில் வைத்திருக்கும் நீங்கள்.. ஒட்டுமொத்த இந்தியாவையும் உங்கக்கிட்ட இருக்குற மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கிற நீங்க, அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உங்கள் சைடுநீங்கள் அதிகரித்துக் கொண்டால், தென்னிந்தியா எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியுமா? வெறும் பால் கரக்குற மாடு மாதிரி, வெறும் டேக்ஸ் கறக்குற மாடு மாதிரி தானே பயன்படுத்துவீங்க..

மண் சார்ந்து, மக்கள் சார்ந்து, மரபு சார்ந்து, மக்கள் சார்ந்து செயல்படுகிறோம்.. இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான பிரச்சனை மட்டும் கிடையாது. கட்சி, ஆட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை கிடையாது.. மக்களின் எதிர்காலத்தை முன்னெடுக்கும் பிரச்சனை.. ஏற்கனவே மாநில பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கிறது.முக்கியமான பார்த்தீங்கன்னா தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்கிறது. காரணம் வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகம் என்கிறார்கள்.. இப்படி ஒரு நிலைமை வந்தால் என்னாகும்…மக்களாகிய நீங்களும் நானும் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.. ஆனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே குரல் கொடுத்து விட்டார்.. இனிமே பற்றிக்கொள்ளும் காட்டுத்தீ போல்.. ஆனால் இப்படி ஒன்று நடக்கிறது என்பதை மக்களாகிய நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என பத்ம பிரியா தெரிவித்தார்.

நாஞ்சில் சம்பத்: அண்ணாமலை சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது..!

திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது, திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் பேசினார். அப்போது, இச்சை வந்தால் தாய், மகளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் பேசினார். அப்போதே சமூக வலைதளத்தில், தாம் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என பதிவிட்டிருந்தேன்.

தந்தை பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை ஏன் திராவிட மாடல் அரசு கைது செய்யாமல் இருக்கிறது என என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று பதில் தந்தேன். அத்தகைய பைத்தியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை உறவினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சீமான் பேசுவதைப் போல தடித்தனமான, தாறுமாறான விமர்சனங்களை பெரியாரின் சீடர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்; எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலைத் திட்டம் வைத்துள்ளது. அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கான நபர்தான் சீமான். சீமானுக்கு மேடை போட்டுக் கொடுத்த பாவிகள் இருவர்; ஒருவர் கோவை ராமகிருட்டிணன் மற்றொருவர் கொளத்தூர் மணி. விடுதலைப் புலிகளிடமே மதுவை வாங்கி வர சொன்ன சீமான், தன்னையே விற்பனை செய்யக் கூடியவர்தான்; ஆனால் தமிழா! நீ உன்னை விற்காதே என மேடைகளில் பேசுவார் சீமான்.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை? ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் தரவில்லை? எங்கள் தருகிற நிதியில் எங்களுக்கான பங்கை ஏன் தரவில்லை? தேர்தல் வருகிறது என்பதற்காக பீகாருக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறீர்கள்? திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது, திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என நாஞ்சில் சம்பத் பேசினார்.

பி. கே. சேகர்பாபு: அன்புமணி ராமதாஸ் வழக்கிற்கு பயந்து மண்டியிடுவதற்கு பெயர் என்ன..!?

அன்புமணி ராமதாஸ் வழக்கிற்கு பயந்து மத்திய அரசிடம் மண்டியிடுவது கோழையா? உறவுக்கு கைகொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தோடு மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறித்து நம் மாநில வளர்ச்சியை குறைக்கும் போது, நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால்விடும் முதலமைச்சர் கோழை என அமைச்சர் பி. கே. சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

கும்பகோணம் அருகே வன்னியர் சங்கம் சார்பாக சோழ மண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நாங்கள் கேட்பது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி நூறு சதவிகித மக்களுக்கும் இடஒதுக்கீட்டை வழங்குங்கள் என்பதுதான். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. இதனை நடத்த அதிகாரமிருந்தும் உரிமை இல்லை என்று சொல்வது கோழைத்தனம் இல்லையா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அன்புமணி ராமதாஸின் இந்த பேச்சிற்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பி. கே. சேகர்பாபு பேசுகையில், வழக்கிற்கு பயந்து மத்திய அரசிடம் மண்டியிடுவது கோழையா? உறவுக்கு கைகொடுப்போம்.

உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தோடு மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறித்து நம் மாநில வளர்ச்சியை குறைக்கும் போது, நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால்விடும் முதலமைச்சர் கோழை என்று கூறுபவர்கள் கோழை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஒரு காலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதராக சர்தார் வல்லபாய் படேலை போற்றப்பட்டதுண்டு. மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடிய இரும்பு மனிதராக இன்று முதன்மையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை அன்புமணி ராமதாஸுக்கு சொல்ல விரும்புகிறோம் என பி. கே. சேகர்பாபு தெரிவித்தார்.

சீமான் 356-வது பிரிவின் கீழ் ஆட்சியை கலைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது..!

தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்தியில் ஆளும் கட்சிகள், அரசுகள் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்போம் என பூச்சாண்டி காட்டுவார்கள். இந்த பூச்சாண்டிக்குதான் நாம் பயப்படக் கூடாது.

மக்களுக்காக நின்றால் திமுக வெல்லும் 356-வது பிரிவின் கீழ் திமுக ஆட்சியைக் கலைத்துவிடு.. மக்களுக்காக சண்டை போட்டு.. நிதியை தர முடியாதுன்னு மத்திய அரசு சொன்னதால் நாம் நம் வரி வருவாயை தர முடியாது என சொன்னோம்.. ஆட்சியை கலைத்தார்கள்.. சரி மீண்டும் சட்டசபை தேர்தல் வரும்தானே.. அப்போது யார் வெல்வார்கள்? மக்களுக்காக நிற்கிற கட்சி எதுவோ வெல்லும். இந்த இடத்தில்தான் நாம் சமரசம் செய்யக் கூடாது.

பறிபோன உரிமைகள் ஆட்சி கலைப்பு அஞ்சியதால்தான் காவிரி நதிநீர் உரிமை போனது; கச்சத்தீவு பறி போனது; மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? மத்திய அரசு என்னதான் செய்ய முடியும்? ஆட்சியைக் கலைத்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? சொல்லுங்க ஆட்சிக்கு மீண்டும் வர முடியாதா? இப்படித்தான் 2009-ல் தமிழினத்தை கொலை செய்த போது பதவிக்கு பயந்து உட்கார்ந்திருந்தோம்.. சிங்களவன் லட்சக்கணக்கில் ஈழத் தமிழரை கொன்று குவித்தான்.

ஆட்சியை கலைத்தால் திமுகதான் வெல்லும் மத்திய அரசை போய்யா.. என்று சொல்லிவிட்டு ஆட்சியை இழந்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் மக்கள் மறுபடியும் உங்களைத்தான் தேர்வு செய்வான். அப்படி செய்யாமல் இருக்க மானம் கெட்ட, உணர்வு கெட்ட, அறிவு கெட்டவன் தமிழன் அல்ல. தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும்.

யார் பிரிவினைவாதி? தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே பாஜகவும் காங்கிரஸும்தான். இது எங்கள் நிலம். தமிழர் நிலம். நாங்கள் யாருக்கு தேசத்துரோகிகள்? இது என்ன இந்தி பேசுகிறவன் நாடா? எவனை கேட்டு இந்தி திணிப்பை நடத்துகிறீர்கள்? பல மொழி பேசுகிற மக்களின் தேசம் இது.. ஒரு 4 மாநிலத்தில் பேசப்படுகிறதா இந்தி மொழி? என் வரியை வைத்துக் கொண்டு தரவே முடியாது என்பது பிரிவினையை தூண்டுகிறதா? தேசப்பற்றை உருவாக்குகிறதா? யார் பிரிவினையை தூண்டுவது? இந்தியாவின் அதிக வருவாய் தருவதில் 2-வது பெரிய மாநிலம் என் தமிழ்நாடு. என் நிதியை வைத்துக் கொண்டு தர மறுக்கும் நீதிதான் தேச ஒருமைப்பாட்டை சிதைப்பது? என சீமான் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அலிசா அப்துல்லா சவால்..!

என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும். திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ? என்று பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத காரணத்தால் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட நிதியை விடுவிக்க இயலாது என்று அறிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவிற்கும், திமுகவிற்கும் சமூக வலைதளங்களில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் வீட்டில் நாங்கள் பயன்படுத்தும் மொழி உருது.

நான் ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன். என்னுடைய ரேஸிங் துறையில் சிறந்து விளங்கிய இஸ்லாமிய பெண் என்பதால். நான் பாஜகவில் இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் புரிதல் இல்லாமல் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவில் இணைந்தேன். நான் பாஜகவில் இணைந்த ஒரே காரணத்திற்காக திமுக ஊடகங்கள் என்னை போட்டி போட்டுக் கொண்டு நேர்காணல் எடுத்தனர். அதன் சூழ்ச்சியும் திமுகவின் அரசியலும் எனக்கு அப்போது தெரியவில்லை. என்னை பாஜகவில் இருந்து வெளியேற்ற திமுக சார்பில் இருந்து என்னுடைய தொழில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

ஒரு படி மேல் சென்று நீங்கள் திமுகவில் இணையுங்கள் உங்களுக்கு பெரிய பொறுப்பு கொடுக்கிறோம் என்றும் கூறினார்கள். எனக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால் நான் ஒரு இஸ்லாமிய பெண். இஸ்லாமியர்களுடைய வாக்கு ஒன்று கூட பாஜக பக்கம் போக கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறார்கள்.

நான் மறுபடியும் சொல்கிறேன் நான் தமிழ் பாரம்பரிய குடும்பம் கிடையாது தமிழகத்தில் பிறந்து உருது மொழியை பேசும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். பாரம்பரிய தமிழ் குடும்பத்தை சேர்ந்த உதயநிதிக்கு ஒரு சவால். இன்று என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும்.திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ?” என அலிஷா அப்துல்லா எக்ஸ் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.