மு.க.ஸ்டாலின் சூளுரை: I.N.D.I.A. கூட்டணியை வெற்றியை கலைஞர் நூற்றாண்டு பரிசாக வழங்குவோம்…!

திருவண்ணாமலையில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாத்துரை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அதில், தீபஒளி தரும் திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறேன்! நூற்றாண்டைக் கண்ட திருவண்ணாமலை நகராட்சியை “திருவண்ணாமலை மாநகராட்சி”-ஆக மாற்றிய உங்கள் ஸ்டாலின் வந்திருக்கிறேன். பட்டுக்கும், அரிசிக்கும் பெயர் பெற்ற ஆரணிக்கு வந்திருக்கிறேன். இங்கு நடப்பது, எழுச்சிமிகு கூட்டம் என்று சொல்லவா! மாநாடு என்று சொல்லவா! அதையும் தாண்டி மாநில மாநாடு என்று சொல்லவா! திருவண்ணாமலையில் கடல் புகுந்துவிட்டது என்று சொல்லவா… என்பதைப்போல் கூடியிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

என்னையும் – உங்களையும் எப்படி பிரிக்க முடியாதோ! அதேபோன்று, தி.மு.க.வையும் – திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. தி.மு.க.வுக்கு, திருவண்ணாமலை என்றாலே வெற்றிதான். முதன்முதலாக, தி.மு.க. 1957 தேர்தலில் போட்டியிட்டபோது, 15 பேர் வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களில் நூற்றாண்டு காணும், ப.உ.சண்முகம் உள்ளிட்ட ஆற்றல்மிகு உறுப்பினர்களைத் தந்த மண் இது!

நாடாளுமன்றத்திற்குள் நாம் முதன்முதலில் அடியெடுத்து வைத்தபோது, இரண்டு எம்.பி.க்கள் அதில் ஒருவரான, இரா.தர்மலிங்கம் அவர்களைத் தந்த மண் இது! இவர்களை மட்டுமல்ல, பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை தொடங்கி… இன்று எதிலும் வல்லவராக விளங்கும் நம்முடைய எ.வ.வேலு உள்ளிட்ட எண்ணற்ற தளகர்த்தர்களைத் தந்துள்ள மண், இந்தத் திருவண்ணாமலை மண்! அதேபோல், தி.மு.க. வளர்ச்சியில், ஒவ்வொரு கட்டத்திலும் இந்தப் பகுதி மக்கள் உற்றத் துணையாக இருந்திருக்கிறார்கள்.

திமுகவுக்கும் திருவண்ணாமலைக்கான தொடர்பை நான் சொல்ல வேண்டும் என்றால், 1965 மொழிப்போருக்கு வித்திட்ட 1957-ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடந்த இடம்! 1967 தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக இருந்த 1963 இடைத்தேர்தல் வெற்றி கிடைத்த இடம்! 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பயணம் தொடங்கிய இடம் என்று, வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், தி.மு.க.வும் – திருவண்ணாமலையும் சேர்ந்தே இருக்கும்! இப்போது இந்தியா கூட்டணி நாட்டினை ஆளப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் கட்டியம் கூறப்போகிறது!

திருவண்ணாமலை தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் சி.என்.அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இந்தப் பெயரே போதும் வெற்றிக்கு! 1987-ஆம் ஆண்டு முதல் இளைஞரணியில் கட்சிப் பணி தொடங்கி, என்னுடைய தலைமையிலான இளைஞர் அணியில் அமைப்பாளராக இருந்தவர். தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்திருக்கும் இவரை, சென்ற தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில், வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், ஆரணி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக எம்.எஸ்.தரணிவேந்தன் போட்டியிடுகிறார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து – கழகப் பணியையும், உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருந்து – மக்கள் பணியையும் சிறப்பாகச் செய்த இவரின் குரல், ஆரணியின் குரலாக டெல்லியில் ஒலிக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இரண்டு பேரையும் வெற்றி பெற வைக்கத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக – உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் உதயசூரியனுக்கு வாக்கு கேட்க வேண்டும்.

நான் எல்லாக் கூட்டங்களிலும் சொல்வது போன்று, இந்த தேர்தல்களம், இரண்டாவது விடுதலை போராட்டம்! இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், பேரறிஞர் அண்ணா சொன்னதைத்தான் நான் எண்ணிப் பார்க்கிறேன். அண்ணா சொல்லுவார்: “இந்த உலகத்தில் எங்களுக்கு இரண்டு எஜமானர்கள். ஒன்று, எங்கள் மனச்சாட்சி! இரண்டு, இந்த நாட்டு மக்கள்!” இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மக்களுக்காக மனச்சாட்சிப்படி நல்லாட்சி நடத்துபவன்!

தமிழ்நாட்டைப்போலவே, தில்லியிலும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்றுதான் உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்துவிடாமல் தடுக்க – ஜனநாயகச் சக்திகளும் – இந்திய நாட்டு மக்களும் – களம் கண்டுள்ள இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்! இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது!

நம் தமிழ்நாட்டை மதிக்கும் – நம் அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றும் – நம் இனத்தை – இனத்தின் பண்பாட்டை மதிக்கும் – எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் ஒரு பிரதமர் வேண்டும். அப்படிப்பட்ட பிரதமரைத்தான், இந்தியா கூட்டணி நிச்சயம் வழங்கும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் – ஜனநாயகத்தை – தமிழ்நாட்டை – நாட்டின் எதிர்காலத்தை – இளைஞர்களை – மகளிரை – எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாக்கும்!

இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும்! ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்! வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும்! எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும்! அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும்! நம் நாட்டின் பன்முகத்தன்மை தொடர வேண்டும்! அதற்கு முதலில், பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்! ஏன் என்றால், ”பா.ஜ.க. ஆண்டதும் போதும் – மக்கள் மாண்டதும் போதும்” என்று இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தயாராகிவிட்டார்கள்.

இந்த நல்ல செய்தி, திருவண்ணாமலையில் மட்டுமல்ல – தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல – தென்மாநிலங்களில் மட்டுமல்ல – வடமாநிலங்களில் இருந்தும் – ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது! இந்தச் செய்தியை நன்றாக உணர்ந்திருப்பது யார் தெரியுமா? தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும், ஏதாவது பொய்யையும், புரளியையும் கிளப்பி – மக்களைக் குழப்பி வாக்கு வாங்க நினைக்குறாரே பிரதமர் மோடி, அவருக்குத்தான் முதலில் தெரியும்!

அதனால்தான், இப்போது பயத்தில், தன்னுடைய கூட்டணியாக இருக்கும் I.T. துறையை விட்டு, ஜூன் மாதம் வரைக்கும் காங்கிரஸ் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்! அதேபோல், E.D.யை விட்டு, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு பெயில் கொடுக்க சம்மதிக்கிறார்… E.D. – I.T. – C.B.I. – இதெல்லாம் போதாது என்று, நாட்டு மக்களைக் குழப்ப இப்போது R.T.I.யையும் கூட்டணியில் சேர்த்திருக்கிறார். இனிமேல் மோடி சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவருக்கே தெரிந்துவிட்டதால் – R.T.I. பெயரில் புரளிகளைக் கிளப்பி, குறளிவித்தை காண்பிக்கிறார். மோடி குழப்பத்தில் இருக்கிறார் என்பது, உத்தரப் பிரதேசத்தில் சென்று கச்சத்தீவு பற்றி பேசுவதிலேயே தெரிகிறது.

மோடி அவர்களே… இது ஏப்ரல்தான்! இன்னும் மே மாதம் இருக்கிறது… ஜூன் மாதம் இருக்கிறது… உங்கள் குழப்பங்கள் ஜூன் 4-ஆம் தேதி தெளிந்துவிடும்! பா.ஜ.க. எனும் மக்கள் விரோத ஆட்சியிடம் இருந்து, நாட்டிற்கு விடுதலை கிடைத்துவிடும்! ஜூன் 3 – நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு! ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடுதலையின் துவக்க நாள்! நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர், தன் வாழ்நாள் எல்லாம், எந்த ஜனநாயகத்தைக் காக்கப் பாடுபட்டாரோ – எந்த மதச்சார்பின்மையை உறுதியுடன் நிலைநாட்டினாரோ – ”மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!” என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கினாரோ – அவற்றைப் பாதுகாக்கும் இந்தியா கூட்டணியின் வெற்றியை, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக வழங்குவோம்.

மு.க. ஸ்டாலின்: பதில் சொல்லுங்கள் மோடி..!

முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங் 1974ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், “பாக் ஜலசந்தியில் கடல் எல்லையை வரையறுக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் நியாயமானதாகவும், சமமானதாகவும் கருதப்படும் என்று நான் நம்புகிறேன். அதே சமயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம், கடந்த காலங்களில் இரு தரப்பினரும் அனுபவித்து வந்த மீன்பிடித்தல், புனித யாத்திரை மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் உரிமைகள் எதிர்காலத்துக்காக முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன’” என்று தெரிவித்த, இரண்டே ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிப்பதை தடை செய்தனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் கச்சத்தீவு இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டதுடன், ‘இலங்கையின் இந்த பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1,175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையர்களால் இந்த 20 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் பல பாஜகவினர் திமுக – காங்கிரஸ் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
“நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகி, “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே…” எனப் பதிவிட்டுள்ளார்.

“எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை..!!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில், தமிழக பாஜக பூத் தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

அப்போது, “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார்கள் என தமிழக மக்களை நான் பார்க்கும் போது தெரிகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் சென்று சேர விடாமல், திமுக அரசு தடுத்து நிறுத்துகின்றனர். தடுத்து நிறுத்த முடியாத திட்டங்களில், அவர்களது ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள்.” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

“நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?.

ஒரு பக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே… கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

“எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் போராட்டம்: “நிவாரணம் கேட்கவில்லை; உரிமையைத் தாருங்கள்..!”

மத்திய இடைக்கால பட்ஜெட்டை 2024 பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு வஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரித்து அளித்துள்ளார் . இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, இன்று நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிஆர் பாலு, ஆ.ராசா, திருமாவளவன் உட்பட திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு திமுக கூட்டணியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி.,க்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி தராமல் வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகளை சாத்திவிட்டோம்..! அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் நச்சுனு பதிலடி..!

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.

கடந்த முறை பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டியளிக்கையில், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன எனத் தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில் அமித் ஷா பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் தனியார் மண்டபத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை சிறுமைப்படுத்துகின்ற செயலை, எந்தக் கட்சி செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜக என்பது கழட்டிவிடப்பட்ட பெட்டி அதனை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலின் போது அம்பலப்படுத்துவோம் என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஏற்கனவே, பாஜக – அதிமுக இடையே மறைமுகமாக கூட்டணி பேச்சுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டெல்லி பாஜக தலைமை சார்பாக, எடப்பாடி பழனிசாமியுடன் பேசி வருவதாக கூறப்பட்டது.

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜக வேண்டுமானால் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. பாஜக கூட்டணிக்கு வரக்கூடாது என்பதற்காக கதவை சாத்திவிட்டோம். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் 55 -வது நினைவு நாளையொட்டி திமுகவினர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!

பெரியாரின் சீடராக இருந்து பெரியாரின் தளபதியாக மாறிய அண்ணா “திராவிட முனேற்ற கழகம்” என்ற தனி கட்சி தொடங்கி பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார். அண்ணா ஆட்சிக்கு வந்த உடன், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த ‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் மாறியது.

சி.என்.அண்ணாதுரை என்ற பெயர் பின்னாளில் சி.என்.எ என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணா. 1967-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், அப்பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது தியாகத்தையும், பணிகளையும் நினைவுகூரும் விதமாக அவரது நினைவு தினத்தன்று ஆண்டு தோறும் சென்னையில் திமுக அமைதி பேரணியை நடத்தி வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே அண்ணா நினைவிடத்திற்கு மவுன ஊர்வலம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாங்க ஒண்ணு சேர்ந்தா..! திமுக ஒரு சீட் கூட ஜெயிக்காது..! வி.கே.சசிகலா ஆவேசம்..!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவர் எம். ஜி.ஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எம். ஜி.ஆரின் வளர்ச்சி திமுகவில் இருக்கும் ஒருவருக்கு பிடிக்கவில்லை. அதனால் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அவர் வெளியேறினார். எம்ஜிஆர், மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் எந்த முறை கையாளப்பட்டதோ அதே முறையை நானும் கையாளுகிறேன்.

இப்போது தமிழகத்தில் நடக்கக்கூடிய ஆட்சியால் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து வருகின்றனர். முதலமைச்சர் என்றால் 10 வாகனங்களுக்கு மத்தியில் செல்வது அல்ல, அதற்கு பெயர் முதலமைச்சர் அல்ல, மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது அம்மா உணவகம் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தது. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை, எல்லா விரலும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். திமுகவை வீழ்த்த அதிமுக அனைவரும் ஒன்றுபட வேண்டும். இரண்டாகப் பிரிந்து கிடந்த அதிமுக முன்பு எப்படி ஒன்றாகி பலம் பெற்றதோ, அதே போல் தற்போது பிரிந்து கிடக்கும் அதிமுகவை விரைவில் நான் ஒன்று சேர்ப்பேன். நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று போட்டி போட்டுக்கொண்டு கட்சியையும், தொண்டர்களையும் மறந்துவிட்டதாக அதிமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள்.

கட்சி பிளவுபட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல தொடர்ந்து போக முடியாது. பிறகு தொண்டர்கள் கொதித்தெழுவார்கள். நான் என்றைக்கும் தொண்டர்களின் பக்கம் தான் இருப்பேன். எல்லோரும் ஒன்று சேர்வதே நம் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நாம் செலுத்திய பெரிய நன்றிக்கடன். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் திமுக ஒரு சீட் வர முடியாது என்று அத்தனை தொண்டர்களும் சொல்கிறார்கள். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதை செய்து காட்டுவேன்.” என வி.கே.சசிகலா தெரிவித்தார்.

96 மாசமா..? அதாவது 8 வருஷம் … யாரோட ஆட்சி… வார்த்தையை விட்டு.. மாட்டிக்கிட்டோமே..!?

தமிழ்நாடு முழுக்க பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை செய்கின்றன. அதே சமயம் தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் பங்கேற்காது என முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதனால் பெரும்பாலான இடங்களில் 80 சதவிகிதம் வரை பேருந்துகள் இயங்குகின்றன.

தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை. சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக 103% இயக்கம். மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் 100% இயக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக் கொள்ளலாம் என்றும், இதனை இந்த அரசு ஏற்றுக்கொண்டால் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்” என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்த குறைந்தபட்ச இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு தனது வீராப்பைக் காட்டாமல், லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் வைத்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனம் தற்போது அவருக்கே எதிராகவே திரும்பி உள்ளது.

அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில்.. அவர் வைத்த விமர்சனம் அவருக்கு எதிராக மாறி இருக்கிறது. அதன்படி 96 மாசம், அதாவது 8 வருஷம், இதுல கிட்டத்தட்ட 6 வருஷம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிதான்.. அவர்கள் ஆட்சியில கொடுக்கப்படாத டிஏ மற்றும் வருமான பாக்கிக்கு அவர்களே நியாயம் கேப்பது கொடுமையிலும் கொடுமை என்று நெட்டிசன்கள், திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..! “ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு…, 26.90 லட்சம் வேலை வாய்ப்புகள்…”

சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் எல்லோருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி, இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து, என் இதயத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டார் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா. தொழில்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலயச் சாதனையைச் செய்திருக்கும் அவரைப் பாராட்டுகிறேன். இவ்விழாவில் கண்ணும் கருத்துமாய் இருந்த தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, ”முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக, ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தபட்டது. நான் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை பெற்றோம். அதோடு, நான் தொடர்ந்து இந்த முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை கண்காணிப்பேன்.

அந்த வகையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 27 தொழிற்சாலைகள திறந்து வைத்திருக்கிறேன். இது மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையோடு சொல்கிறேன், இந்த மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும். தமிழ்நாட்டின் வரலாற்றில் நிச்சயம் இது நினைவு கூரப்படும். இந்த மாநாட்டினுடைய தனித்துவமும் புதுமைத்துவமும் என்றென்றும் பேசப்படும். நான் அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே ஒரு அன்புக்கட்டளை இட்டேன். உலக அளவில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான முக்கியக் காரணமாக அதுதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

எங்களுடைய அயராத உழைப்பு மற்றும் உங்களுடைய பங்களிப்பு காரணமாக, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது. ஈர்க்கப்பட்டுள்ள மொத்த முதலீடுகளில், உற்பத்தித் துறையில், அதாவது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக, 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் முதலீடுகள், எரிசக்தித் துறை சார்பாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி ரூபாய் முதலீடுகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக 62 ஆயிரத்து 939 கோடி ரூபாய் முதலீடுகள், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக 22 ஆயிரத்து 130 கோடி ரூபாய் முதலீடுகள், பெருந்தொழிற்சாலைகளுக்கு வலுவான விற்பனையாளர் தளத்தை வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக 63 ஆயிரத்து 573 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள், தமிழ்நாடு ஒன் டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கின்ற மாநிலமாகவும் சிறந்திட, பெரும் இலட்சிய இலக்கை நிர்ணயித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த இலக்கை விரைவில் அடைந்திட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொலைநோக்குப் பார்வையோடு தொழில் கொள்கைகளை வடிவமைத்து, அதன்மூலம் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வதுதான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்த பாதை. 20-க்கும் மேற்பட்ட கொள்கைகளை வெளியிட்டு, அந்தத் துறைகளில் உற்பத்தி மட்டுமில்லாமல், ஏற்றுமதியையும் வெகுவாக பெருக்கிடும் வகையில் முதலீடுகளை கணிசமாக ஈர்த்து, அதன்மூலம் வேலைவாய்ப்புகளை வெகுவாக அதிகரித்து வருகிறோம்.இதன் தொடர் நடவடிக்கையாகத்தான், தொடக்க விழா நாளில், மின்னணு உற்பத்தி மற்றும் செமி கண்டக்டர் கொள்கையை வெளியிட்டேன். இது, இந்தத் துறைகளில் முதலீடுகளை ஈர்த்து, வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.

மிகப்பெரும் உட்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது, அதற்கான முதலீடுகள் முழுவதையும் அரசே மேற்கொள்வது கடினம். கூட்டு முயற்சியில், தனியார் துறைகளோடு இணைந்து செயல்படுவதுதான் நடைமுறையில் சாத்தியம். அந்த வகையில், அப்படிப்பட்ட முதலீடுகளை ஈர்க்க, தனியார் மற்றும் அரசுத் துறைகளின் சிறந்த நடைமுறைகளை இணைத்து, பொது-தனியார் கூட்டாண்மைக் கொள்கையையும் (Public – Private Partnership Policy) வெளியிட்டிருக்கிறோம். தமிழக அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க ஊக்குவிப்பு நிறுவனமான STARTUP தமிழ்நாடு உருவாக்கியுள்ள டேன்-ஃபண்ட் மூலம் பன்னாட்டுத் துணிகர முதலீட்டு நிறுவனங்களை (Venture Funds) தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களோடு இணைப்பதற்கான தளம், இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

நமது Startup தமிழ்நாடு, உலகளாவிய புத்தாக்கச் சூழல்களை ஆராயும் தரவு மற்றும் ஆலோசனை நிறுவனமான ஸ்டார்ட்அப் ஜினோம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டிருக்கிறது. புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புத்தொழில் துணிகர முதலீட்டாளர்கள், துறை சார்ந்த நிபுணர்களுடனும் புத்தொழில் நிறுவனங்களுடனும் கலந்துரையாடினார்கள். வாங்குவோர் – விற்பனையாளர் சந்திப்பில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொண்டனர்.

இதன் மூலமாக, ஏற்கெனவே, ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக விளங்குகின்ற தமிழ்நாடு, தன்னுடைய போட்டித்திறனை நன்கு அதிகரிக்க முடியும். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கான விற்பனையாளர் – வாங்குவோர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். வளர்ந்து வரும் இந்தத் துறையை செம்மைப்படுத்தி, இந்தத் துறையை மேலும் வளர்க்க, இப்படியான முயற்சிகள் மிகச் சரியான உத்வேகத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, ஒன்பது பங்காளர் நாடுகள் பன்னாட்டு அரங்கம் அமைத்து, இந்த மாநிலத்தின் மீது தங்களின் ஆழமான மற்றும் நீண்டகால ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்கள். சிறப்பு அரங்குகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வலிமை மற்றும் பன்முகத்தன்மையை பல்வேறு அரசு நிறுவனங்கள் வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த மாபெரும் நிகழ்வின்போது நடைபெற்ற வேறு சில முக்கிய நிகழ்வுகளையும் இங்கே குறிப்பிட விரும்புறேன். திட்டங்களுக்கான தொடக்க விழாக்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா, துறை மற்றும் நாடுகளுக்கான அரங்குகள், புத்தொழில்களுக்கான களங்கள், பல்வேறு தலைப்பிலான கலந்துரையாடல்கள், அனுபவங்கள் பகிரும் சந்திப்புகள், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் – ஆகியவை நடந்திருக்கிறது. இவை எல்லாம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இவை எல்லாம் ஆக்கபூர்வமாக நடந்திருக்கிறது.

மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மூலமும், “நான் முதல்வன்” திட்டம் மூலமும் மாணவர்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பயனடைய வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தது. நாளைய உலகத்துக்கு இன்றே வழிகாட்டுகிற வகையில், அவர்கள் இந்த பெரும் முதலீட்டாளர்களின் ஆழமான அனுபவங்களை கேட்டறிந்தது, தமக்கான பாதையை வகுத்திட அவர்களுக்கு இது பெரிதும் உதவும். சுமார் இருபதாயிரம் பிரதிநிதிகள் மற்றும் 39 லட்சம் மாணவர்கள், இதில் எல்லாம் கலந்துகொண்டு பயனடைந்துள்ளார்கள்.

Our partner countries, have contributed to make the Global Investors Meet a grand success. I also thank the Diplomatic community for their co-operation.முக்கியமாக, நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவது, எங்கள் அரசு மீதும், எங்கள் கொள்கைகளின் மீதும் வைத்திருக்கிற உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவது, எங்களுடைய தலையாய கடமை. எங்களுடைய அரசை பொருத்தவரைக்கும், நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போடுவதில் இருந்து உங்களுடைய எல்லா செயல்களுக்கும், அதாவது நீங்கள் உங்கள் தொழிற்சாலையை முழுமையாக கட்டி முடித்து, உற்பத்தியை தொடங்குவதில் இருந்து, அதற்கு பிறகும்கூட, உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். உங்களுக்கு தேவையான எல்லா க்ளியரன்சும் – சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலமாக, விரைந்து வழங்கப்படும் என்று நான் உறுதிகூற விரும்புறேன்.

அதேபோல இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும். அதில் தொழில்துறை அலுவலர்கள், Guidance அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அதை ஒரு முழுமையான தொழிற்சாலையாக மாற்றுவதற்கு, அவர்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். உங்களுக்கு எந்த தருணத்திலும், என்னிடம் ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், என்னோட அலுவலகத்தை, நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த உறுதிமொழியை நான் தொழிற்துறை அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் வழங்குகிறேன். அதனால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

நிறைவாக, இந்த மாநாட்டில் முதலீடுகள் மேற்கொண்டுள்ள எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவரை, இங்கே முதலீடு செய்யாதவர்களும், எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் தொழில்முனைவோராத மட்டுமில்ல, தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர்களாக பார்க்கிறேன். எனவே, தமிழ்நாட்டை உலகுக்கு அறிமுகம் செய்யுங்கள். உலக நாடுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வாருங்கள்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அக்ஷா பவன் முதியோர் இல்லத்தில் கனிமொழி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜனவரி 5 -ம் தேதி திமுக துணை பொது செயலாளருமான, கழக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி MP அவர்களின் 56 வது பிறந்த நாளை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நீலகிரி கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடலூர் ஒன்றிய செயலாளர் அ.லியாகத் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி தலைமையில் இன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார், மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர்கள் ச.பரிமளா (கூடலூர் நகர மன்ற தலைவர்) சிவகாமி (நெல்லியாளம் நகராட்சி தலைவர்) செல்வி. வள்ளி (தேவர் சோலை பேரூராட்சி தலைவர்), கௌரி (சோலூர் பேரூராட்சி தலைவர்) வெண்ணிலா (நகர மன்ற உறுப்பினர்), மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் சித்ராதேவி (ஓவேலி பேரூராட்சி தலைவர்) மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் அன்ன புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் கீர்த்தனா (ஊராட்சி ஒன்றிய தலைவர்), தனபாக்கியம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்பி கனிமொழி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.