Siddaramaiah: கச்சா எண்ணெய் விலை குறைவு… பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி மக்களுக்கு பாஜக துரோகம் செய்கிறது ..!

கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்துவது என்பது நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் என சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக விலைவாசி உயர்ந்து வருகிறது. சமுதாயத்தை உடைக்கும் வேலையை இந்த பாஜக செய்கிறது. மக்களுக்கு துரோகம் இழைக்கும் பணியை தவிர மத்திய பாஜக அரசு வேறு என்ன செய்கிறது?.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சங்பரிவார் அமைப்பினர் என்ன செய்தனர்?. காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 3 பேர் பலியாயினர். இது மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு இல்லையா? சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒரு ராணுவ வீரர் இல்லை, ஒரு காவல்துறையினர் இல்லை. இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா?.  நாடு சுதந்திரம் அடைந்து 51 ஆண்டுகள் வரை RSS அலுவலகம் மீது தேசிய கொடி ஏற்றப்படவில்லை.

இதனால் பாஜக-வினருக்கு வெட்கம் ஏற்படவில்லையா?. சுதந்திர போராட்டம் முதல் நவீன இந்தியா வரை இதன் வளர்ச்சியில் பாஜக-வின் பங்கு என்ன?. வெட்கம் இல்லாமல் தேசபக்தி குறித்து அவர்கள் பேசுகிறார்கள். இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தியதை தவிர பாஜக வேறு என்ன செய்தது?. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பணக்காரர்களுக்கு 32 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரான மத்திய ஆட்சி நிர்வாகத்தை நாங்கள் எதிர்க்கக்கூடாதா?. இந்தியர்களை நிரந்தர பொய்களில் இன்னும் எத்தனை ஆண்டுகள் மூழ்கடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையை சொல்ல பாஜக-வினர் முன்வர வேண்டும். நாட்டிற்காக காங்கிரஸ் தலைவர்கள் உயிா்த்தியாகம் செய்தனர். அதனால் போராட்டம் என்பது காங்கிரசுக்கு புதிது அல்ல.

ஆங்கிலேயர்களை விரட்டியடித்த எங்களுக்கு உங்களை எதிர்க்கும் சக்தி உள்ளது. நாங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி அதை அப்படியே விவசாயிகளுக்கு வழங்குகிறோம். பஸ் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்டவை மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்தில் குறைவாகத்தான் உள்ளது. பாஜகவின் பொய் பிரசாரத்தை கண்டு நான் பயப்பட மாட்டேன்.

மத்திய அரசு அரிசி, சமையல் எண்ணெய், தங்கம், வெள்ளி, உரம், பருப்புகள், டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்துள்ளது. இந்த மத்திய அரசு எதை விட்டுவைத்து இருக்கிறது?. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்துவது என்பது நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் ஆகும் என சித்தராமையா பேசினார்.

மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது..!

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே எக்ஸ் பக்கத்தில், கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது.

கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே பதிவிட்டுள்ளார்.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க அன்புமணி வலியுறுத்தல்..!

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது, சில காலம் பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பை விட, அதிக லாபத்தை கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஒரளவாவது நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.