ராகுல் காந்தி பதிலடி: நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தை படிக்காததால் அது வெற்று புத்தகமாக தெரிகிறது..!

அரசியலமைப்பு சட்டத்தை படிக்காததால் அது பிரதமர் நரேந்திர மோடிக்கு வெற்று புத்தகமாக தெரிகிறது என ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அரசியல் சாசனத்தின் சிறிய அளவிலான புத்தகத்தைக் காட்டி, அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார்.

ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகத்தின் உள்ளே வெற்றுத் தாள்களே உள்ளதாகவும், போலியான புத்தகத்தைக் காட்டி அவர் பிரச்சாரம் செய்வதாகவும், இதன் மூலம் அவர் நாட்டின் அரசியல் சாசனத்தை அவமதித்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோன்ற ஒரு புத்தகத்தை ஒருவர் வாங்கிப் பார்த்தபோது அதன் உள்ளே வெற்றுத்தாள்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அவர் தனது உரையில், “பொதுக்கூட்டங்களில் நான் காட்டும் அரசியல் சாசன புத்தகத்தில் வெற்றுப் பக்கங்கள் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். நரேந்திர மோடிக்கு அரசியல் சாசனம் காலியாக உள்ளது. ஏனென்றால் அவர் அதைப் படிக்கவில்லை.

அதேபோல், நான் காட்டும் புத்தகத்தின் அட்டை சிவப்பு நிறமாக இருப்பதாகக் கூறி அதிலும் அரசியல் செய்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், அதன் நிறம் எங்களுக்கு முக்கியமில்லை. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். அதைப் பாதுகாக்க நாங்கள் எங்கள் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.

இந்த அரசியலமைப்பு வெற்று இல்லை. இது சுதந்திரப் போராட்ட தலைவர்களான பிர்சா முண்டா, புத்தர், காந்தி, பூலே ஆகியோரின் சிந்தனைகளைக் கொண்டுள்ளது. இந்த அரசியலமைப்பில் இந்தியாவின் ஆன்மா, இந்தியாவின் அறிவு உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை வெறுமையானது என கூறும் நரேந்திர மோடி, அம்பேத்கர், மகாத்மாகாந்தி, பிர்சா முண்டா, புத்தர்,  பூலே ஆகியோரை அவமதிக்கிறார்  என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி: இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது..! பாஜக, RSS அரசியல் அரசியலமைப்பை ஒழிக்க முயல்கிறது..!

இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது. பாஜகவும் RSS அமைப்பும் அரசியல் சட்டத்தை ஒழிக்க விரும்புகின்றன என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்லை முன்னிட்டு சிம்டேகா மற்றும் லெஹெர்டேகா நகரங்களில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, “நாட்டில் இன்று இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. ஒரு பக்கம் – இண்டியா கூட்டணி. மறுபக்கம் பாஜக மற்றும் RSS. இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது. பாஜகவும் RSS அமைப்பும் அரசியல் சட்டத்தை ஒழிக்க விரும்புகின்றன.

அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல. இதில் பிர்சா முண்டா, அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, மகாத்மா காந்தி ஆகியோரின் சிந்தனைகள் உள்ளன. இந்த அரசியலமைப்புச் சட்டம்தான் நாட்டின் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளை பாதுகாக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாட்டை இயக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணி விரும்புகிறது.

நாங்கள் உங்களை ‘பழங்குடியினர்’ என்கிறோம். ஆனால் பாஜக உங்களை ‘வனவாசி’ என்கிறது. ஆங்கிலேயர்கள் உங்களை வனவாசிகள் என்றும் அழைத்தார்கள். உங்கள் தண்ணீர், காடுகள் மற்றும் நிலங்களை பாதுகாக்க பிர்சா முண்டா ஆங்கிலேயர்களுடன் போராடினார். இன்று நாங்களும் உங்கள் உரிமைக்காக போராடுகிறோம். உங்கள் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை பாஜக பறிக்க நினைக்கிறது. அதனால்தான் உங்களை வனவாசி என்று அழைக்கிறது. ஆதிவாசி என்றால் நாட்டின் முதல் உரிமையாளர் என்று பொருள். அதேசமயம் வனவாசியாக இருப்பது உங்களுக்கு நாட்டில் எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தம்.

நீங்கள் பழங்குடியினர். நாட்டின் மீது உங்களுக்கே முதல் உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் ‘வனவாசி’ என்ற வார்த்தையை நீங்கள் காண முடியாது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும் வனவாசி என்பதற்குப் பதிலாக ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள். ஏனென்றால், நீர், காடு, நிலம் ஆகியவற்றின் உண்மையான உரிமையாளர்கள் பழங்குடியினர் என்று அவர்கள் கூற விரும்பினர். பிர்சா முண்டாவும், அதற்காகவே போராடினார். ஆனால், பாஜகவோ பழங்குடியினரிடம் இருந்து நீர், காடு, நிலம் ஆகியவற்றைப் பறிக்க முயற்சிக்கிறது.

நாட்டில் 50% ஓபிசி, 15% தலித், 8% பழங்குடியினர் மற்றும் 15% சிறுபான்மை சமூக மக்கள் உள்ளனர். இந்த மக்கள் தொகை மொத்தத்தில் 90% ஆகும். ஆனால் நாட்டின் பெரிய நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஓபிசி, தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவரைக்கூட நீங்கள் பார்க்க முடியாது. பாஜகவினர் எங்கு சென்றாலும் ஒரு சகோதரரை இன்னொரு சகோதரருடனும், ஒரு மதத்தை இன்னொரு மதத்துடனும், ஒரு மொழியை இன்னொரு மொழியுடனும் சண்டையிட வைக்கிறார்கள்.

மணிப்பூர் இவ்வளவு நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் இன்றுவரை அங்கு செல்லவில்லை. ஏனெனில் அவரது சித்தாந்தத்தால்தான் அங்கு வன்முறை பரவியது. அதனால்தான் நாங்கள் ‘இந்திய விழிப்புணர்வு யாத்திரை’ நடத்தினோம். அதில் ‘வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறப்போம்’ என்ற முழக்கம் இருந்தது. நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு உரிய பங்கேற்பு இல்லை. நாட்டின் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள். உங்களிடம் எந்த குறையும் இல்லை. நீங்கள் எந்த வகையான வேலையையும் செய்யலாம். ஆனால் உங்களுக்கான பாதை தடுக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, ​​நரேந்திர மோடி அமைதியாகி விட்டார். உரிய பங்கேற்பு இல்லாத 90% மக்களுக்கு பங்கேற்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நரேந்திர மோடி, அமித் ஷா, அம்பானி – அதானி போன்ற ஒரு சிலரால் நாட்டை நடத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஒரு சில கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை நரேந்திர மோடி தள்ளுபடி செய்தார்.

ஜார்க்கண்டில் எத்தனை பேருக்கு நரேந்திர மோடி கடன்களை தள்ளுபடி செய்தார்? நமது அரசுகள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகளின் பழக்கத்தை காங்கிரஸ் கெடுப்பதாக பாஜக கூறியது. ஆனால், கோடீஸ்வரர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போது, ​​அவர்களின் பழக்கவழக்கங்கள் கெட்டுப் போகவில்லையா? பணக்காரர்களின் பாக்கெட்டுகளுக்கு பணம் சென்றால், அது விவசாயிகளின் பாக்கெட்டுகளுக்கும் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.