‘கலாம்-சபா’ நூலகத்தை மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைப்பு ..!

சென்னை வியாசர்பாடியில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு நிறுவிய ‘கலாம்-சபா’ நூலகத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை நேற்று திறந்து வைத்தார். சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் பிறந்தவர் ராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு. இவர் தனது இல்லத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிறுவியுள்ளார்.

இந்த திறப்பு விழாவில், மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், டில்லிபாபுவின் இந்த முயற்சி, அவரைப்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும். உச்சம் தொட்ட ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒருவர் இருப்பார். வியாசர்பாடியில் உயர இருப்பவர்களுக்கு பின்னால் கலாம்-சபா நூலகம் இருக்கும். வியாசர்பாடியில் இருந்ததால் தான் உயர முடிந்தது என்ற நிலையை இந்த நூலகமும், டில்லிபாபுவின் முயற்சியும் உருவாக்கும் என மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

மைனர் பணிப்பெண்ணை உணவு கொடுக்காமல் சித்திரவதை கொடூரமான முறையில் கொலை..!

ஒரு மைனர் பெண் பணிக்கு வைத்து உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்து உடலில் சிகரெட் காயங்கள் ஏற்படுத்தி கொடூரமான முறையில் கொலை இது இப்படி சாத்தியமாகும் என தமிழகத்தையே பதைபதைக்க வைத்துள்ளது.

சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டில் பணிபுரிந்து வந்த 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு, அடித்து தாக்கப்பட்டிருந்த காயங்கள் இருந்தது. இந்நிலையில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேர் தான் சிறுமியை அடித்து கொலை செய்தது தெரிவர அவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்.

பழைய வாகனங்களை வாங்கி விற்கும் முகமது நிஷாத் மற்றும் நசியா தம்பதி வீட்டில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 வருடமாக அவர் அங்கே பணியாற்றி வந்துள்ளார். இந்த 1 வருடத்தில் கடந்த 4 மாதங்களாக அவர் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார், அமைந்தகரை பகுதியில் உள்ள மேத்தா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல், இரவு நேரத்தில் தூங்க கூட விடாமல் கடுமையாக வேலை வாங்கி கொடுமை செய்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் வீட்டில் மகனுக்கு வைத்திருந்த உணவில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டதாக அந்த சிறுமியை அடித்தே கொலை செய்துள்ளனர். தீபாவளியன்று சிறுமியை கொன்று குளியலறையில் போட்டுவிட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊதுபத்தி ஏற்றிவைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மைனர் பணிப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. மைனர் பெண் எப்படி பணிக்கு வைக்கப்பட்டார், ஒரு வேலை செய்யும் பெண்ணுக்கு உணவு கூட கொடுக்காமல் சித்திரவதை செய்தது எப்படி?, சிறுமியின் உடலில் சிகரெட் காயங்கள் ஏற்படும் அளவிற்கு எப்படி கொடுமை செய்ய முடியும் என கேள்விகளுடன் தமிழகத்தையே பதைபதைக்க வைத்துள்ளது.

கொகைன் கடத்தலில் முன்னாள் டிஜிபி மகன் கைது..!

வெளிநாடுகளில் இருந்து கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்து நைஜீரியா வாலிபருடன் சென்னையில் விற்பனை செய்து வந்த முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் ரவீந்திரநாத்தின் மகன் அருண் காவல்துறை கைது செய்தனர். குற்றவாளிகளை பொறிவைத்து பிடித்த காவலர்களுக்கு காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் சென்னையில் பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெருநகர காவல்துறையில் இதுவரை இல்லாத வகையில் காவல் உதவி ஆணையர் ஒருவர் தலைமையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தொடங்கப்பட்டு, இந்த நுண்ணறிவு பிரிவு போதை பொருட்களை தடுக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 18-ஆம் தேதி தனிப்படைக்கு கிடைத்த தகவலின் படி அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்து வந்த தீபக், பாலிமேத்தா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், கடந்த 20-ஆம் தேதி அதேபோல் தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அரும்பாக்கம் நடுவாங்கரை பாலம் பகுதியில் மெத்தபெட்டாமைன் விற்பனை செய்த அருண்குமார், சித்தார்த், தீபக்ராஜ் அகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி நைஜீரியா நாட்டை சேர்ந்த கபீர் குளோன்ஸ், சந்தோஷ், ஆண்டனி ரூபன் ஆகியோரை கடந்த 22-ஆம் தேதி கைது செய்தனர்.

பிறகு போதை பொருட்களை ஆந்திராவில் இருந்து மொத்தமாக கொண்டு வந்து கொடுக்கும் முக்கிய குற்றவாளியான ஆந்திரா மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை தனிப்படை காவல்துறை ஏஜென்டுகள் போல் பேசிய போதை பொருள் வேண்டும் என்று கூறி வரவழைத்து மாதவரம் பேருந்து நிலையம் அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து கொகைன் என்ற பயங்கர போதை பொருளை நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளை கூண்டோடு கைது செய்ய காவல் ஆணையர் அருண் தனிப்படைக்கு உத்தரவிட்டார். அதன்படி கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் தனிப்படை காவல்துறை சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த வாலிபர் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது, கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் ரவீந்திரநாத்தின் மகன் அருண் என்பவர் தனது நண்பரான மெகலன் என்பவருடன் இணைந்து சென்னை முழுவதும் தனது ஆட்களை நியமித்து கொகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

தனது தந்தை காவல்துறை தலைமை இயக்குனர் என்பதால் அருண் வெளிநாட்டு போதை பொருள் கும்பலுடன் நேரடியாக தொடர்பு வைத்துகொண்டு தடையின்றி கொகைன் போதைப் பொருளை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே தனிப்படை காவல்துறை முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் மகன் அருண், அவரது நண்பர் மெகலன், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜான் எஸி ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

“பிங்க் ஆட்டோ திட்டம்” சென்னை பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆட்டோக்களை பெண்கள் வாங்க 1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கீதா ஜீவன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ திட்டம் செயல் படுத்தப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

இத்திட்டம் குறித்து, தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய முன்னெடுப்பாக இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில், 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. இந்த ஆட்டோக்கள் பெண் ஓட்டுநர்கள் மூலமாக இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல் துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டுள்ளன.

எமர்ஜென்சி காலங்களின்போது புகார் பெறப்பட்டவுடன் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் GPS பொருத்தப்பட்டுள்ளன. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், சுயதொழில் செய்து பெண்கள் முன்னேறும் வகையில் ஊக்கப்படுத்தவும் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பிங்க் ஆட்டோ ஓட்டுவதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேம்டும். சென்னையில் குடியிருப்போராக இருக்க வேண்டும். CNG மற்றும் ஹைபிரிட் ஆட்டோ வாங்க சென்னையைச் சேர்ந்த 250 பெண்களுக்கு தமிழக அரசு தலா 1 லட்சம் ரூபாயை வழங்க உள்ளது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி தொகைக்கு வங்கிகளுடன் இணைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் தகுதியான பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8 ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நவம்பர் 23 -ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை மாநகராட்சி பகுதிகளில்  36 நிவாரண மையங்களில் 1,360 பேர் தங்கவைப்பு..!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறான கனமழை பெய்யாத நிலையில் ஆங்காங்கே லேசான மழையே பெய்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 131 மி.மீ. மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 67 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1360 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 98 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. நேற்று (அக்.15) காலை உணவு 1000 நபர்களுக்கும், மதிய உணவு 45,250 நபர்களுக்கும், இரவு உணவு 2,71,685 நபர்களுக்கும் வழங்கப்பட்டதோடு, இன்று காலை உணவு 4,16,000 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரி ன் உத்தரவின்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 412 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளததோடு, மீதமுள்ள இடங்களிலும் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6120 அழைப்புகள் வந்துள்ளன. இதன்மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில பேரிடர் மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 8 குழுவினர் தயாநிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மணலி, எழும்பூர், செனாய் நகர் மற்றும் பள்ளிக்கரணையிலும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் செனாய் நகர்-2, வில்லிவாக்கம் மற்றும் ராஜரத்தினம் அரங்கத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 80 வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 100 வீரர்கள், மீட்புப் படகு, இயந்திர ரம்பம், ஸ்டெக்சர் உள்ளிட்ட மீட்பு கருவிகளுடனும், சென்னையில் 103 படகுகளுடனும் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். மழைக்காலத்தினை முன்னிட்டு, பொது சுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் நாள்தோறும் 100 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், மற்ற மாநகராட்சி, நகராட்சி, மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 89 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.என்.நேரு தகவல்: அத்தியாவசியப் பொருட்களை வழங்க 3 ட்ரோன்கள் தயார்..!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்களை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும் இந்த ட்ரோன்களில் பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் இந்த ட்ரோன்களின் செயல்பாடுகள் சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் இன்று பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி,, எம்.பிருதிவிராஜ், வருவாய் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்..!

சென்னை, கவரப்பேட்டை அருகில் நடைபெற்ற ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து பீஹார் மாநிலம் தர்பாங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் மோதியது.

இந்த ரயில் விபத்தில் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் ஒரு பெட்டியில் தீ பற்றிய நிலையில் விபத்தில் 19 பயணம் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி நின்று கொண்டிருந்த சரக்குரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த விபத்து நடந்த இடத்தில் 28 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 3 மருத்துவக் குழுவினர் மீ ட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தங்கள் பயணத்தை தொடர முடியாத பயணிகள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கவரப்பேட்டையில் கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டன.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களில் மூன்று பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்த 4 பயணிகள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

முதலமைச்சர் உத்தரவின்பேரில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமுற்றுள்ள பயணிகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் விவரம் குறித்து, மருத்துவமனை டீனிடம் கேட்டறிந்தோம். சிகிச்சையில் உள்ளோருக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளையும் உடனுக்குடன் அளிக்க ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், விபத்து நடந்த இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் போன்றவை குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டறிந்தார்.

“மௌன சத்தம்” எனும் நூல் வெளியீடு..!

புலனாய்வு பத்திரிகையாளர் ஆ. மோகன் அவர்கள் எழுதிய “மௌன சத்தம்” எனும் நூல் வெளியீட்டு விழா 25.08.2024 மாலை சென்னையில் நடைபெற்றது.

சென்னை வேளச்சேரி டான்சி நகரில் அமைந்துள்ள யூ எஸ் பார்ட்டி ஹாலில் புலனாய்வு பத்திரிகையாளர் ஆ. மோகன் அவர்கள் எழுதிய மௌன சத்தம் நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் R. சிவகுமார் ஐபிஎஸ் மற்றும் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. கருணாநிதி, மூத்த பத்திரிகையாளர் திரு. சேதுராமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் திரு. சம்பத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ – மலர்களைத் தூவி வாழ்த்தி வரவேற்பு ..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தி.நகரில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்.

தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். வழியின் இருபுறங்களிலும் ஏராளமான பாஜக தொண்டர்கள், பிரதமர் மோடிக்கு மலர்களைத் தூவி வாழ்த்தி வரவேற்றனர்.

சென்னைக்கு தயக்கத்துடன் சென்றேன்..! இறுதியில் தமிழ்நாட்டின் மீது காதல் கொண்டேன்..!!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சஞ்சய் கிஷன் கவுல் வருகிற டிசம்பர் 25-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை என்பதால் நேற்று அவரது கடைசி பணி நாளாக அமைந்தது. இதை முன்னிட்டு உச்ச நீதிமன்ற பார் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசுகையில், நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள் என்று நான் எப்போதும் நம்புகிறேன். மேலும் அவை எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டுவதற்கு வழக்குதாரர்களுக்கு திறந்திருக்க வேண்டும். வழக்காடுபவர்கள் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கிறார்கள். கடைசி முயற்சியாக இருக்கும் இந்த உச்ச நீதிமன்றத்தை அவர்கள் அடையும் நேரத்தில் அது திறந்து இருக்க வேண்டும்.

நீதி கிடைப்பது எல்லா நேரங்களிலும் தடையின்றி இருப்பது உச்ச நீதிமன்றத்தின் பெருமையாகும். தங்கள் தகராறுகளைத் தீர்ப்பதற்காக இந்த நீதிமன்றத்தை அணுகிய வழக்குரைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நீதி வழங்கும்போது நம் மனதில் முதன்மையாக இருக்க வேண்டும்.

ஒரு வழக்குரைஞர் தனது வழக்கின் முடிவை அறிய காலவரையின்றி காத்திருக்க வைக்கக்கூடாது என நான் நம்புகிறேன். நீதிபதியாக பெரும்பாலும் சரியான முடிவு கண்டுபிடிக்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சிறந்த முடிவு மட்டுமே உள்ளது. ஒரு முடிவெடுப்பதற்கு உங்களுக்குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் கண்டுபிடிக்க வேண்டும். ஒருமுறை நீங்கள் முடிவு செய்தால், திரும்பிப் பார்க்காதீர்கள். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட செய்தியை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நான் பணியாற்றிய காலம் எனது நீதித்துறை வாழ்க்கையின் மிகவும் நிறைவான காலமாக அமைந்தது,. தமிழ்நாட்டு மக்களின் பொதுவான மனப்பான்மை மிகுந்த பணிவு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது. நான் தயக்கத்துடன் சென்னைக்குச் சென்றேன். ஆனால் இறுதியில் தமிழ்நாட்டின் மீது காதல் கொண்டேன். அங்கு நான் மிகவும் நீடித்த நட்பைக் கண்டேன். அதை இன்றும் நான் தொடர்ந்து போற்றி வருகிறேன். இவ்வாறு சஞ்சய் கிஷன் கவுல் உருக்கமாக பேசினார்.