பாஜக குழுவில் இருந்து மேனகா காந்தி, வருண்காந்தி உள்ளிட்ட பல தலைவர் திடீர் நீக்கம்

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பி. வருண் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், ‘வீடியோ மிகத் தெளிவாக இருக்கிறது. கொலை மூலம் போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமாணவர்களை நீதி முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி, பில்பித் எம்.பி. வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ரஜனி பாட்டீல் மாநிலங்களவை உறுப்பினராக  போட்டியின்றி தேர்வு

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த ராஜீவ் சதவ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். எனவே இந்த காலியிடத்துக்கு வருகிற 4-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மகா விகாஷ் அகாடி கூட்டணிகள் சார்பில் காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ரஜனி பாட்டீலும், பாஜக சார்பில் சஞ்சய் உபாத்யாய் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு இருப்பதால், இவர் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உருவானது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே மற்றும் மந்திரி பாலசாகேப் தோரட் ஆகியோர் சமீபத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக ஏதுவாக பாஜக வேட்பாளரை போட்டியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் என்பதால், பாஜக வேட்பாளர் சஞ்சய் உபாத்யாய் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றார். பாஜக வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால், காங்கிரஸ் வேட்பாளரை தவிர வேறு யாரும் போட்டியில் இல்லை. எனவே அந்த கட்சி வேட்பாளர் ரஜனி பாட்டீல் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.

பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுத்தது

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் தமிழகத்தில் இருந்து காலியான இரண்டு இடத்தை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

இந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரை தி.மு.க. தனது வேட்பாளர்களாக நிறுத்தியது.இதனையடுத்து அதற்கான தேர்தல் நடைபெற்றால் ஒருவர் எம்பியாக தேர்வாக 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தற்போது திமுகவிற்கு 159 எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுகவிற்கு 75 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தி.மு.க.விற்கே வெற்றி வாய்ப்பு என்பதால், மற்ற அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் மாநிலங்களவைகான திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது பாஜக மக்களவை 301, மாநிலங்களவை 94 என்று 395 எம்.பி.க்களுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் மக்களவை 52, மாநிலங்களவை 33 என்று 85 எம்.பி.க்களுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றது. ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ் மக்களவை 22, மாநிலங்களவை 12 என 34 எம்.பி.க்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், திமுக தற்போது மக்களவை 24, மாநிலங்களவை 10 என 34 எம்.பி.க்களுடன் சமமான இடத்தை பிடித்துள்ளது.

அமரீந்தர் சிங்: சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான நவஜோத் சிங் சித்து 2017ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சி தாவினார்.தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இதனையடுத்து, மேலிடம் கொடுத்த அழுத்தம் மற்றும் அவமானத்தின் காரணமாக அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அமரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து. வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன்.

சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன். மூன்று வாரங்களுக்கு முன்பாக நான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது, தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு சோனியா காந்தி என்னை கேட்டுக்கொண்டார். எனக்கு தந்திர வித்தையெல்லாம் தெரியாது. காந்தி குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியும். ராகுல், பிரியங்கா எனது பிள்ளைகளை போன்றவர்கள் அனுபவமற்றவர்கள் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

தமிழிசை: நீட் தேர்வு பணம் படைத்தோர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை மாற்றியுள்ளது

ஏழை- எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருபுவனை எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச நீட் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். மேலும் பேசுகையில், “ஒரு நல்ல முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. கிருஷ்ண பகவான் அவதரித்த நாளில் மக்களைக் காப்பாற்றுவதற்காக அரக்கர்களை அழித்ததைப் போல, தடுப்பூசி மூலம் கரோனா என்ற அரக்கனை அழிக்க மருத்துவராகப் போகும் மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

நான் அடிப்படையில் ஒரு மருத்துவராக இருப்பதனால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். ஏழை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் மருத்துவர் ஆகலாம். நீட் என்பது நல்ல தேர்வு. பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை இப்போது மாறி இருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

 

பா.ஜனதா தீர்மானம் கோயம்புத்தூரை தலைநகரமாக கொண்டு கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகர பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பஜனை கோவில் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 9 மாவட்டங்களையும் இணைத்து  கொங்குநாடு என்கிற புதிய மாநிலத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மேலும் கோவையை தலைநகராக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் நிர்வாக ரீதியாக, கோயம்புத்தூரில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரமுள்ள சென்னைக்கு செல்ல வேண்டிய இடர்பாடுகள் குறையும்.

தனி மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ, கொங்கு மண்டலத்தை அறிவிக்க வேண்டும். இதனால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கொங்கு மண்டலத்தில் எளிதாக கிடைப்பதால் சென்னையை தேடி மக்கள் அலைய வேண்டிய நிலை   வராது. சாலை வசதி, பஸ், ரெயில் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளும் கொங்கு மண்டலமான கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய ஊர்களில் சிறப்பான முறையில் இருக்கிறது.

இதனால் தலைநகர் டெல்லி மற்றும், மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பிற மாநில தலைநகரங்களுக்கு, விமானம் மூலம் நேரடியாக சென்று வரும் வாய்ப்பும், கோயம்புத்தூரில் இயல்பாகவே அமைந்துள்ளது. இதன் மூலம் கொங்கு மண்டலம், “கொங்குநாடு” என்கிற பெயருடன் தனி மாநில அந்தஸ்துடன் உருவானால், இனி வரும் காலங்களில் இந்த மண்டலத்தின் வளர்ச்சி தனிச்சிறப்பு உடையதாக இருக்கும். எனவே, மத்திய அரசு இந்த கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்து, கொங்கு மண்டல வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜே.பி.நட்டா: பா.ஜனதாவை தவிர பிற கட்சிகள் அனைத்தும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளன

பா.ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பா.ஜனதா சார்பில் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எதிர்க்கட்சிகளை கடுமையாக குற்றம் சாட்டினார்.

அப்போது, பா.ஜனதாவை தவிர பிற கட்சிகள் அனைத்தும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளன. சில கட்சிகள் அவசர சிகிச்சை பிரிவில் கூட இருக்கின்றன. இந்த நாட்களில் எதிர்க்கட்சி தலைவர்களை மக்கள் மத்தியில் பார்க்க முடியவில்லை. டுவிட்டர் தளத்திலும், செய்தியாளர் சந்திப்புகளிலும்தான் காண முடிகிறது என தெரிவித்தார்.