ஏ.என்.எஸ்.பிரசாத்: தமிழகத்தில் சாலை, பாலங்களை சரியாக அமைக்காவிட்டால் அரசு அதிகாரிகள் கைது செய்ய சட்டம்..!

தமிழகத்தில் மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் சரியாக அமைக்காவிட்டால், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கைது செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “சாலைகளை தவறாக குண்டும் குழியுமாக அமைப்பது ‘பிணையில்லாத குற்றமாக’ மாற்றப்பட வேண்டும். சாலைகளில் எதாவது விபத்து ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர், பொறியாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.

இது மிகவும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் கண்டிப்பாக செயல்படுத்தபட வேண்டும். நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், அரசின் பல்வேறு கட்டடங்கள் பல நூறு கோடிகள், பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகின்றன. ஆனால், முறையாக அமைக்கப்படாததால், விரைவிலேயே அவை சேதமடைவதும், உடைவது, மழைநீரில் அடித்துச் செல்வதும் நிகழ்கின்றன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த கோரிக்கையை அதிமுக உறுப்பினர் எழுப்பியபோது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேலி செய்து கடந்து இருக்கிறார். தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையில் அணையே அடித்துச் செல்லப்பட்ட அவலம் நடந்தேறியது. தமிழகத்தில் உள்ளாட்சித் துறை சார்பாக தமிழகமெங்கும் மாநகராட்சிகளில், உள்ளாட்சிகளில் அமைக்கப்படும் சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது தரமற்ற சாலைகளை தாண்டி சாலைகளின் ஓரம் மக்கள் நடக்கும் நடைபாதைகள் அதேபோன்று தரமற்று மோசமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள், தவறுகள் நடப்பதை கண்டித்து உரிய நடவடிக்கை எடுப்பதும் இல்லை. தமிழகம் முழுக்க உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தரமற்ற சாலைகள், நடைபாதைகள், தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் அனைத்துமே ஊழல் மயமாகி உள்ளது.

எனவே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியபடி, சாலைகள், மேம்பாலங்கள், அரசு கட்டடங்கள் சரியாக அமைக்கப்படாவிட்டால், ஒப்பந்ததாரர், பொறியாளர், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் பிணையில் வெளியே வர முடியாதபடி கைது செய்யும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ANS.பிரசாத்: முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்லது கேட்டது கற்றுத் தர வேண்டும்..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ANS.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ANS. பிரசாத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி , தரங்கெட்ட முறையில் கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும்.

கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து உதயநிதி ஸ்டாலின் கண்ணியமற்ற முறையில் பேசியதற்கு நடவடிக்கை எடுக்காததன் விளைவு இன்று தமிழகத்தில் மோசமான தனிநபர் தாக்குதலுக்கும், வெறுப்பு அரசியலுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கள் கண்ணியற்றதாக உள்ளன. எனவே உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி கூறிய கருத்துக்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பொது மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் அருவருக்கத் தக்க தனிநபர் தாக்குதல் மறைந்து, கண்ணியமான அரசியல் சூழ்நிலைக்கு வித்திட வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாநிலத்தின் முதல் மகனாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வழிநடத்தக்கூடிய தலைமகனாக விளங்கக்கூடிய ஆளுநர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு? ஆளுநர் யார் மக்களின் பிரதிநிதியா? ஆளுநர் ஒரு போஸ்ட்மேன், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் சமீபத்திய பேச்சை குறிப்பிட்டு, ஆளுநர் தன்னுடைய சித்தாந்தங்களை சொன்னால் தமிழக மக்கள் ஆளுநர் ஆர்.என். ரவியை செருப்பால் அடிப்பார்கள்.

அவர் பெயர் ஆர்.என். ரவி அல்ல. ஆர்எஸ்.எஸ்.ரவி என்று தனிப்பட்ட முறையில் தமிழகத்தின் இளம் தலைவர், மரியாதைக்குரிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுபோன்று கடமை,கண்ணியம் கட்டுப்பாடு, என அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு பொறுப்பற்ற முறையில் பேசுவது நியாயமா?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்திற்கு எதிராக கண்ணியமற்ற கருத்துக்கள், பிரதமர் மோடிக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளில் நாகரீகமற்ற விமர்சனங்கள், இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களிடையே மதவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் என பேசி வருகிறார்.

ஆபத்தான, சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய அவரது பேச்சுக்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய முறையில் விசாரணை செய்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று, தானே நேரடியாக களத்தில் இறங்கி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்று மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து, தமிழக இளைஞர்களுக்கும் தமிழக அரசுத் துறையை அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அதேபோன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, உரிய முறையில் கட்சியிலும் ஆட்சியிலும் அரசியலிலும் சிறப்பாக செயல்பட நேர்மறை அரசியலை கற்றுக் கொடுத்து முன்மாதிரியான தலைவராக, தந்தையாக முதல்வராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.