பேசுப் பொருளாக மாறியுள்ள ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ராமதாஸ் திடீர் பதிவு..!

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே என பாமக நிறுவனர் ராமதாஸின் திடீர் பதிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, திடீரென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாமக அணிக்கு தாவியது. இதற்கு பாமகவில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அன்புமணியின் நிர்பந்தத்தால் இந்த கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதாக அப்போதே கூறப்பட்டது.

தொடர்ந்து பல எதிர்ப்புகளை மீறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிட்ட 10 இடங்களிலும் சவுமியா அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தனர். இந்த படுதோல்வி இன்னும் பாமகவினர் மனதில் நீங்காத நிலையில் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பின் பாமகவை பாஜக கண்டு கொள்ளவில்லை என தெரிகின்றது.

இதனிடையே இரு தினங்களுக்கு முன் பாமக தலைவர் அன்புமணி எம்பிக்கு ரயில்வே வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை மத்திய அரசு அளித்தது. மத்தியில் கேபினட் அமைச்சராக பதவி வகித்த அன்புமணிக்கு சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கி அவரை சிறுமைப்படுத்தி விட்டதாக பாமகவினர் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளன.

மேலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஏதாவது பெரிய பொறுப்பு வரும் என்ற கனவில் இருந்த நிலையில் சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கியிருப்பது பெரும் ஏமாற்றத்தை ராமதாஸ்ஸூக்கு ஏற்படுத்தி இயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த திடீர் பதிவு பாஜக தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் வட மாவட்டத்தில் மட்டும் வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவுக்கு சவாலாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அண்மையில் தவெக மாநாடு அமைந்துள்ளது. மேலும் பாமகவின் கொள்கைகள் சிலவற்றை தவெக பின்பற்றுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று விஜய் பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், ராமதாஸின் இந்த பதிவு பேசுப் பொருளாக மாறியுள்ளது.

தீட்சிதர்களால் VCK நிர்வாகி தாக்கப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்..!

நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம் பிடித்ததால் தாக்கப்பட்டதாக விசிக நிர்வாகி காவல் நிலையில் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து தீட்சிதர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளராக உள்ளார். இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, தீட்சிதர்கள் சிலர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த இளையராஜா அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து, இளையராஜாவிடம் இருந்து தீட்சிதர்கள் செல்போனைப் பறித்து, அவரை திட்டியதுடன் தாக்கியதாவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த இளையராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோயில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனி மைதானத்தை அரசு ஏற்பாடு செய்யலாம். தீட்சிதர்கள் மட்டுமே இங்கு விளையாட முடியும் என்று விளம்பர பலகையை வைக்கலாம். ஆக பல கோவில்களில் இந்த விளையாட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது. கோவில் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறக்கூடிய பேராபத்தும் ஏற்படலாம் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

ராமதாஸ் கண்டனம்: மக்களுக்கு நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது..!

செந்தில் பாலாஜி தியாகி என்றால் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா? மக்களுக்கு நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்று புகழ்ந்துரைத்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது அதற்கு பொழிப்புரை எழுதியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்தது தான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதலமைச்சர் விளக்கமளித்திருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. செந்தில் பாலாஜி பிணையில் விடுதலை செய்யப்பட்டதில் யாருக்கும் வருத்தம் இல்லை. எந்த வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வழக்கு விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பதே கொடூர மனநிலை.

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கும், அதனடிப்படையிலான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கும் முடிவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால், அதுவரை அவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால் தான் அவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன் பொருள் விடுதலை இல்லை. அதனால் செந்தில் பாலாஜியின் சிறை வாசம் தியாகமும் இல்லை.

செந்தில் பாலாஜியின் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்ததை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நன்றாக அறிவார். 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாகத் தான் தமிழகக் காவல்துறை வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் 2016 தேர்தலில் குளித்தலைத் தொகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்த மு.க.ஸ்டாலின், மேலும் சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, செந்தில் பாலாஜி செய்த ஊழல்கள் ‘’ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல” என்று பாடல் பாடியதெல்லாம் வரலாறு.

அந்தக் குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் தான் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடத்தி வருகிறது. அந்த வழக்கில் கையூட்டாக வாங்கப்பட்ட பணம் ரொக்கமாக செந்தில் பாலாஜி கணக்கில் செலுத்தப்பட்டதன் அடிப்படையில் தான் அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு, 471 நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்திருக்கிறார். இதில் என்ன தியாகம் இருக்கிறது.

உண்மையாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்பவராக இருந்தால் மோசடி வழக்கில் தம்மிடம் உள்ள ஆதாரங்களையெல்லாம் கொடுத்து வழக்கை வலுப்படுத்தியிருக்க வேண்டும். மோசடி வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி செந்தில் பாலாஜிக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூட முன்வரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை திமுகவில் சேர்த்து அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். அவருக்கு தியாகி பட்டம் சூட்டி உருகுகிறார்.

திராவிட மாடல் வாஷிங் மெஷின் அந்த அளவுக்கு ஊழல் கரையே தெரியாத அளவுக்கு வெளுத்து எடுத்திருக்கிறது. அரசு வேலை தருவதாக பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணத்தைக் கொடுத்து தங்களின் சொத்துகளையும், வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் என்ன துரோகிகளா? என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரது கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை. எனவே, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் அதிரடி: “மது ஒழிப்பைப்பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான்”

மது ஒழிப்பைப் பற்றி பேசுவதற்கு தகுதியான கட்சி பாமக மட்டும் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “மதவாத கட்சியான பாஜக, சாதியவாத கட்சியான பாமக ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ தமிழக அரசியல் கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான்.

ஆனால், மது ஒழிப்பைப் பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடி வருகிறது. ராஜாஜியும் ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். திமுக அதை ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி கலைஞர் வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும் மது விலக்கை ரத்துசெய்துவிட்டு இன்று திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 35 ஆண்டுகளில் மது ஒழிப்புக்காக 200-க்கும் அதிகமான போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. பாமக மகளிரணி மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. தமிழகத்தில் இருந்த 7,200 டாஸ்மாக் மதுக்கடைகளை 4,800 ஆக குறைத்தது பாமகதான். இதற்கான சட்டப் போராட்டங்களை பாமக தான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டத்கை 10 மணி நேரமாக குறைக்க வைத்தது பாமக.

பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என பாமக அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலிறுத்தத் தொடங்கின. பாமக அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்” என ராமதாஸ் தெரிவித்தார்.

ராமதாஸ் வலியுறுத்தல்: வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்..!

பத்திரப்பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையெல்லாம் பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. எனவே, வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.

வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதற்காக பத்திரப்பதிவுத் துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை. சர்ச்சைக்குரிய சொத்துகள் மீது நீதிமன்றங்கள் எந்த ஆணையையும் பிறப்பிக்காத நிலையில், அதன் விற்பனையை தடுக்கக் கூடாது என்று சில வழக்குகளில் நீதிமன்றங்கள் வழிகாட்டியிருப்பதாகவும், வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளை பத்திரப்பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அதைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ளது. இது அபத்தமானதாகும்.

பத்திரப்பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையெல்லாம் பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகள் மீது எந்த ஆணையும் பிறப்பிக்கப்படாத நிலையில், அதை பதிவு செய்யலாம் என்று நீதிமன்றங்கள் கூறியிருந்தால், அதை அந்த வழக்குடன் தொடர்புடைய சொத்துடன் மட்டும் தான் பொருத்திப் பார்க்க வேண்டுமே தவிர, அனைத்துச் சொத்துகளுக்கும் அந்த வழிகாட்டுதலை பின்பற்ற முடியாது.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப் பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். வருவாயை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு பத்திரப்பதிவுத் துறை செயல்படக்கூடாது.

உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன. அவ்வாறு அபகரித்த சொத்துகளை ஒருவர் இன்னொருவருக்கு விற்க முயலும் போது, அதை எதிர்த்து சொத்தின் உண்மையான உரிமையாளர் வழக்கு தொடரும் நிலையில், அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை சொத்தை பதிவு செய்யாமல் இருப்பது தான் சரியானத் தீர்வு ஆகும். மாறாக, அந்த சொத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவில்லை என்பதற்காக சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டால், மோசடி செய்தவர் பெரும் லாபத்துடன் தப்பி விடுவார். சொத்தின் உரிமையாளரும், அதை வாங்கியவரும், வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் தான் பாதிக்கப்படுவார்கள். இதை பத்திரப்பதிவுத்துறை உணர வேண்டும்.

வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது. எனவே, சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை திரும்பப் பெற வேண்டும்.” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்: அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்..!

சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில், அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார்.

அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று அந்த பேச்சாளர் பேசியுள்ளார். கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிகளில் மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது.

அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுக்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வழக்கமாக பள்ளிக்கு ஆண்டு விழா நடத்துவதற்கே சில ஆயிரம் ரூபாய் மட்டும் தான் செலவிடப்படும். ஆனால், மூடநம்பிக்கை பேச்சாளரின் நிகழ்ச்சிக்கு தாராளமாக செலவிடப்பட்டுள்ளது. தம்மை மகாவிஷ்ணு என்று கூறிக்கொண்ட அந்த நபருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்த நபரின் மூட நம்பிக்கை பேச்சுகளை கண்டித்த ஆசிரியரை அந்த நபர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்; அதை எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்று அந்த நபர் வினா எழுப்பியுள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு தைரியத்தைக் கொடுத்தவர்கள் யார்?

அரசு பள்ளிகளின் மாணவ, மாணவியர் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க நீதிபோதனை வகுப்புகளை நடத்துங்கள் என்று பா.ம.க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்யாத பள்ளிக்கல்வித்துறை மாணவ, மாணவிகளின் மனதில் நஞ்சைக் கலக்கும் மனிதர்களை அழைத்து வந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய நிகழ்ச்சிகள் இனியும் நடப்பதை அனுமதிக்கக்கூடாது.

சென்னை அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு இந்த சிக்கலை மூடி மறைத்து விடக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் எத்தகைய உயர்பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த அந்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்: தமிழகத்தில் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர்…! தனிப்பெரும் சமுதாயத் தொகுப்பு பட்டியலினம் ..!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் எந்தச் சூழலிலும், எந்தக் காலத்திலும் தலித் ஒருவர் முதல்வராக முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் பட்டியலின மக்கள் ஆதரவளித்தால், பாமக சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆக்கப்படுவார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதும், தமிழக அரசியலில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமூகநீதி சார்ந்து இத்தகைய விவாதங்கள் எழுவது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகவே முடியாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மாறாக, அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பட்டியலின மக்களிடமிருந்தே போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. தமிழகத்தில் தனிப்பெரும் சமுதாயம் என்றால் அது வன்னியர்கள் தான். தனிப்பெரும் சமுதாயத் தொகுப்பு என்றால் அது பட்டியலினம் தான்.

இந்த இரு சமுதாயங்களும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். அதேபோல், இந்த இரு சமுதாயங்களின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது இந்த இரு சமுதாயங்களையும் சேர்ந்தவர்கள் முதல்வராக வர முடியாததற்கு காரணம் என்ன? என்பதை இரு பெரும் சமுதாயங்களும், அவற்றின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் தான் சிந்திக்க வேண்டும்; விழிப்புணர்வு பெற வேண்டும்.

தமிழகத்தில் இரு பெரும் பூர்வகுடிமக்கள் வன்னியர்களும், பட்டியலினத்தவரும் தான். அவர்களை ஒதுக்கி விட்டு அமைக்கப்படும் எந்த ஆட்சியும் தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் பயனளிக்காது. இதைக் கருத்தில் கொண்டு தான் 1989-ம் ஆண்டில் பாமக உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற தமிழர்கள், அனைத்து நிலை சிறுபான்மையினர் ஆகியோரின் நலனுக்காகவே பாமக தொடங்கப்பட்டது.

பட்டியலினத்தவரும், வன்னியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. 7 வயது சிறுவனாக இருக்கும் போதே ஒட்டுமொத்த கிராமத்தின் எதிர்ப்பையும் மீறி எங்கள் ஊர் ஆதிதிராவிடர் காலனியில் இருந்த காந்திஜி ஆதாரப் பள்ளியில்தான் தொடக்கக் கல்வி படித்தேன். பின்னர் நான் இடைநிலைக் கல்வி பயின்றதும் சென்னை ராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டையில் பட்டியலின மக்களுக்காகவே நடத்தப்படும் கண்ணப்ப நாயனார் கழக பள்ளியில் தான்.

அதைத் தொடர்ந்தும் இருதரப்பு ஒற்றுமைக்காக ஏராளமான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டிருக்கிறேன். இரு சமுதாயங்களும் இணைந்தால் தான் இரு சமூகங்களுமே வளர முடியும் என்பது தான் எனது அசைக்க முடியாத நிலைப்பாடு. பாமக வெற்றி பெற்றால் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக்கப்படுவார் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தேன். 25 ஆண்டுகளுக்கு முன்பே பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை பாமகவுக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தேன்.

பாமகவின் இரண்டாவது மத்திய அமைச்சர் பதவியும் இன்னொரு தலித்துக்குத் தான் வழங்கப்பட்டது. 2016- ம் ஆண்டில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், இரு துணை முதல்வர் பதவி உருவாக்கப்படும்; அவற்றில் ஒன்று தலித்துக்கும், இன்னொன்று தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தேன். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் பெரியவர் இளையபெருமாள், பி.வி.கரியமால், சக்திதாசன், டாக்டர். சேப்பன், வை.பாலசுந்தரம், பூவை மூர்த்தி, திருமாவளவன் உள்ளிட்ட பட்டியலினத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டேன்.

ஆனால், அந்த முயற்சி சாத்தியமாகவில்லை. அதற்கு காரணம் மக்கள் அல்ல. ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து அனுபவித்து வந்தவர்கள் மேற்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சி தான். அதை இந்த இரு சமூகங்களும் புரிந்து கொள்ளாததன் விளைவு தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவரோ, வன்னியர் இனத்தவரோ இன்று வரை முதல்வராக முடியாதது. தமிழகத்தின் 57 ஆண்டு திராவிட ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த எவராவது துணை முதல்வராக முடிந்திருக்கிறதா? அதிகாரம் மிக்க அமைச்சர் பொறுப்புகளுக்கு வர முடிந்ததா? ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற துறைகளை மட்டுமே ஒதுக்கி அவர்களை அமைச்சரவையின் அடிமட்டத்தில் வைத்து தான் அவமதிக்கின்றன திராவிடக் கட்சிகள். இன்றைய திமுக ஆட்சியிலும் இதே நிலை தான் தொடருகிறது.

எனவே தான் சொல்கிறேன், பட்டியலினத்தவர் தமிழகத்தின் முதல்வராவது சாத்தியமற்றது அல்ல. நம்மால் முடியாது, நம்மால் முடியாது என்று சதிவலையில் மயங்கி கிடப்பதை விடுத்து, நம்மால் முடியும் என்று பட்டியலினத்தவர் நினைத்த வேண்டும். நாம் வீழ்ந்து கிடக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்; நாம் எழுச்சி பெற வேண்டும் என்று நினைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு ஆதரிக்க வேண்டும்.

இந்த விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் ஏற்பட்டால் தமிழகத்தின் முதல்வராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அந்த மாற்றம் நிகழும் நாள் தான் தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்: இரு சமுதாயங்களும் இணைந்தால்..! நான் முதலமைச்சர் ..! நீ துணை முதலமைச்சர் ஓகேவா ..!

வன்னியர்கள், பட்டியலினம் இந்த இரு சமுதாயங்களும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். அதேபோல், இந்த இரு சமுதாயங்களின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது இந்த இரு சமுதாயங்களையும் சேர்ந்தவர்கள் முதல்வராக வர முடியாததற்கு காரணம் என்ன? என்பதை இரு பெரும் சமுதாயங்களும், அவற்றின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் தான் சிந்திக்க வேண்டும்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.