குடிபோதையில் பெண்ணை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற ஆசாமி..!

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த பிரேம் ராம் மெக்வால். குடிபோதைக்கு அடிமையான இவர், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் போதையில் இருந்த பிரேம் ராம் மெக்வால் தனது மனைவியை தாக்கியுள்ளார். அதன் பின்னர் அவரது கால்களை பைக்கில் கட்டி கரடுமுரடான மண் சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோதற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், அப்பெண் வலியால் அலறுவது தெரிகிறது. எனினும் கிராமத்தைச் சேர்ந்த எவரும் தங்கள் வீட்டை விட்டுவெளியே வரவில்லை. சம்பவத்தின்போது மற்றொரு பெண், வீடியோ எடுத்த ஆண் உள்ளிட்ட 3 பேர் அங்கு இருந்ததாக நம்பப்படும் நிலையில் அவர்களும் இதனை தடுக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரேம் ராம் மெக்வாலை கைது செய்துள்ளனர்.

ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 7-ம் தேதி வரை காவல்துறை காவல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்த விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் சேத்தன் சிங் பணியில் இருந்துள்ளார். ரயில் மும்பை சென்ட்ரலை அடைய சுமார் 2 மணி நேரமே இருந்த நிலையில், பி5 பெட்டியில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர் சென்று பார்த்த போது, சேத்தன் சிங் தனது உயர் அதிகாரியான உதவி ஆய்வாளர் திக்கார மீனாவைச் சுட்டுக் கொன்றார்.

பி5 பெட்டியில் பயணி ஒருவரையும் சுட்டுக் கொன்ற சேத்தன் சிங், அங்கிருந்து 4 பெட்டிகள் கடந்துச் சென்று பி1 பெட்டியில் மற்றொரு பயணியையும் சுட்டுக் கொன்றார். அங்கிருந்து மேலும் 3 பெட்டிகளை கடந்து எஸ்6 பெட்டியில் 3வது நபரையும் சுட்டுக் கொன்றார். அங்க அடையாளங்களை கொண்டு யார் யார் சிறுபான்மையினர் என தேடிச் சென்று சேத்தன் சிங் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட அவருக்கு வரும் 7-ம் தேதி வரை ரயில்வே காவல்துறையினரின் காவல் வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணி போட்டி போட்டு போராட்டம்!

மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றம் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர். அத்துடன் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை கொடுத்தும் உள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து அண்மையில் பேசியிருந்த பிரதமர் மோடி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருந்த நிலையில் இன்று காலை திடீரென நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள் ஒன்று கூடினர். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறி கண்டன முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர். இது தொடர்பான பதாகைகளையும் அவர்கள் ஏந்தி போராட்டம் நடத்தி உள்ளனர்.

தலித் பெண் துப்பாக்கி முனையில் ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை..!

இந்தியாவில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளிக்கு தான் வளர்க்கும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் நண்பருடன் அவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அங்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளனர். மேலும் அவரது ஆண் நண்பரை கொடூரமாக தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்ததோடு தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டியது மட்டுமல்லாது அவரது ஆடைகளை அகற்றுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி ஏழு பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த கொடூர செயலை அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அந்த இளம் பெண் கிராமத்திற்குள் வந்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தங்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் இது குறித்து முஸாபஹா நகர் காவல் துறையினர் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணுக்கு துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை கொடுத்த ஏழு பேரை கைது செய்துள்ளதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.