விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்யும் பாஜக அரசுக்கு குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க பணமில்லையா…!?

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் “குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 142 குழந்தைகள் சேர்க்கப்பட்டன. அவர்களில் 42 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் ஆகியவை உள்ளன. இவர்கள் அண்டை மாவட்டங்களான ஹிங்கோலி, பர்பானி, வாஷிம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் 16 பேர் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 31 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசை கடுமையாகக் கண்டித்தது மட்டுமின்றி பாஜக அரசு விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிப்பதாகவும், ஆனால், குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க பணம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி கொதிப்பு இந்திய தாயின் இதயத்தில் அதிர்ச்சி..!

மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினில் இருந்து 15 கிமீ தூரத்தில் இருக்கும் பாத்நகர் என்ற பகுதியில் 12 வயது சிறுமி உடையின்றி உறுப்பில் ரத்தத்தோடு மட்டுமின்றி உடல் முழுக்க ரத்தத்தோடு நடந்து சென்றுள்ளார். அந்த சிறுமி 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவை தட்டி உதவி கேட்டுள்ளார்.

எனக்கு ஆடை இல்லை. உடலில் ரத்தமாக இருக்கிறது. அதனால் என்னை காப்பாற்றுங்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எனக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த சிறுமி உதவி கேட்ட எல்லா வீட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரும் நீ உள்ளே வரக்கூடாது. வெளியே போ என்று துரத்தி அடித்துள்ளனர். மேலும் சிலர் அந்த சிறுமியிடம் பேசாமல் . சூ.. சூ என்று துரத்தி அடித்துள்ளனர்.

சிறுமி எனக்கு உதவி வேண்டாம். எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கதற இரக்கமில்லா மனித மிருகங்கள் விரட்டியடிக்க 8 கிமீ பரிதவித்த சிறுமி கடையில் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆசிரமத்தில் இருந்த சாமியார் சிறுமியை ஒரு துண்டுடன் மூடி, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மாவட்ட மருத்துவமனையில் சிறுமியின் மருத்துவப் பரிசோதனையில் கூட்டு பலாத்காரம் அவர் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் வாய் உடைக்கப்பட்டு பேச முடியவில்லை. இதனால் கஷ்டப்பட்டு பேசி உள்ளார். சிறுமிக்கு ரத்தம் கொடுக்க கூட யாரும் வராத நிலையில் காவல்துறையினர் சிறுமிக்கு ரத்தம் கொடுத்தனர் என்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி ம.பி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். “இந்த சம்பவம் இந்திய தாயின் இதயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியாமல் பாஜக அரசு இருக்கிறது.

இந்த மாநிலத்தில் நீதியும் இல்லை, சட்டம் ஒழுங்கும் இல்லை, அடிப்படை உரிமையும் இல்லை. மத்தியப் பிரதேசத்தின் பெண்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது. ஆனால் மாநில முதலமைச்சருக்கும், நாட்டின் பிரதமருக்கும் வெட்கமே இல்லை. தேர்தல் வாக்குறுதிகளுக்கும், பொய்யான முழக்கங்களுக்கும் மத்தியில் தங்கள் மாநில பெண்களின் அலறலை அடக்கிவிட்டார்கள்” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி: ஆதிவாசிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தகுதி நீக்க அறிவிப்பை திரும்ப பெற்றதால், மீண்டும் எம்பி ஆக பொறுப்பேற்ற ராகுல் காந்தி , முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தடைந்தார். நாளில் ராகுல் காந்தி, வயநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புதிய மின் கட்டமைப்பு சேவையை அவர் தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள். அவர்களைக் குறிக்க ஆதிவாசி என்றொரு வார்த்தை இருக்கிறது. அதன் அர்த்தம் நிலத்தின் அசல் உரிமையாளர்கள் என்பதாகும். அந்த வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஞானத்தின் அடையாளம். அது நாம் வாழும் இந்த பூமியின் மீதான புரிதலின் வெளிப்பாடு, நமது பூமி மீது நாம் கொண்டிருக்கும் உறவினை சுட்டிக்காட்டுவது. ஆதிவாசி எனும் வார்த்தை நமது பழங்குடியின சகோதர, சகோதரிகள் தான் தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை நாம் மதித்து ஏற்றுக் கொள்ள உதவுகிறது.

அதனால் உண்மையான உரிமையாளர்களுக்கு நிலத்தின், வனத்தின் மீதான உரிமையை வழங்க வேண்டும். அவர்கள் விரும்பியதை செய்யும் உரிமையையும் வழங்க வேண்டும். இந்த மண்ணின் அசல் உரிமையாளர்கள் என்ற வகையில் உங்களின் குழந்தைகள் பொறியாளர் ஆக வேண்டுமா? மருத்துவர் அல்லது வழக்கறிஞர் ஆக வேண்டுமா? அல்லது தொழில் முனைவோராக வர வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதேவேளையில் வனத்தின் மீது உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. வனத்திலிருந்து விளைவிக்கும் பொருட்களுக்கான உரிமை உங்களுடையது.

ஆனால் சிலர் உங்களை ‘வனவாசி’ என்று அழைக்கிறார்கள். வனவாசி என்ற சொல், இந்தியாவின் அசல் உரிமையாளர்கள் நீங்கள் என்ற உரிமையை மறுக்கிறது. அது உங்களை கட்டுப்படுத்துகிறது. வனவாசி என்ற சொல்லின் பின்னால் இருக்கும் அர்த்தம், நீங்கள் வனத்தினுள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சுருக்குகிறது. இதை ஏற்பதற்கில்லை. இந்த சொல் உங்களின் வரலாற்றை சிதைக்கிறது. உங்களின் பாரம்பரியம் மற்றும் நாட்டுடன் உங்களது உறவை சிதைக்கிறது.

ஆனால் எங்களுக்கு நீங்கள் ஆதிவாசி தான். உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். உதாரணத்துக்கு இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்பது ஒரு பேஷன் வார்த்தையாகிவிட்டது. ஆனால் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசி நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

ஆதிவாசிகளிடமிருந்து வரலாறு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மட்டுமல்ல ஒருவருக்கொருவர் எப்படி அணுகுவது, எப்படி மதிப்பது என்பதைக் கூட கற்றுக் கொள்ள முடியும். ஆதிவாசிகளின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்” என தெரிவித்தார்.

“தோடர் இன மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி”

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்பி., ஆக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மோடி சமூகத்தினர் குறித்து தவறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், சூரத் நீதிமன்றம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதன் பேரில் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால், அவர் எம்பி பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் வாயநாடு எம்பி. யாக பொறுப்பு ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு சென்றார். மீண்டும் பதவி ஏற்ற பின் அவர் முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக பகல் 12 மணியளவில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் எனும் ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். அங்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து, அவருடன் தேநீர் அருந்தினார். அங்கு, நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு கூடலூர் செல்லும் வழியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்துக்கு மதியம் 1 மணியளவில் சென்றார். அங்கு வந்த அவரை தோடரின மக்கள் தலைவர் மந்தேஷ்குட்டன், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பொன்தோஸ், தமிழ்நாடு காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் ப்ரியா நாஷ்மிகர் மற்றும் தோடரின மக்கள் தங்களது பாரம்பரிய சால்வை அணிவித்து வரவேற்றனர்.

முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த மூன் போ மற்றும் அடையாள் ஓவ் கோயில்களை பார்வையிட்டார். அந்த கோயில்களின் பராம்பரியம் குறித்து ராகுல் காந்திக்கு கோயில் பூசாரி விளக்கினார். பின்னர், தோடர் இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கியதை கண்டுகளித்து, தோடரின மக்களுடன் நடனமாடினார். பெண்களுடன் நடனமாடிய ராகுல் அங்கிருந்த சிறு குழந்தையை தூக்கி முத்தம் கொடுத்து கொஞ்சினார். மேலும் அரவேணு பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த விவசாய பெண்களிடம் நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்தார்.

சுமார் அரை மணி நேரம் அங்கு செலவிட்ட ராகுல் காந்தி, அங்கிருந்து வயநாடு புறப்படும் போது, அவரது பயணம் குறித்து கேட்டதற்கு, ‘நான் பழங்குடியின மக்களை நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம்’ என்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் வயநாடு புறப்ட்டுச் சென்றார். ராகுல் காந்தி வருகையையொட்டி முந்தநாடு மந்தில் பலத்த பாதுகாப்பு பணியில் நீலகிரி காவல்துறையினர் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாரத் ஜோடோ யாத்ராவின் ஒரு பகுதியாக கூடலூரில் நடைபயணம் மேற்கொண்டார். தற்போது இரண்டாம் முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர் கோயம்புத்தூரிலிருந்து கார் மூலம் கோத்தகிரி மார்கமாக வந்தார். அவருக்கு அரவேணு பகுதியில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். மக்களை கண்டதும் வாகனத்திலிருந்து இறங்கி அவர்களுடன் கைக்குலுக்கி பேசினார். உற்சாகமடைந்த பெண்கள் ‘வருங்கால பிரதமர் ராகுல் காந்தி’ என கோஷம் எழுப்பினர். அங்கிருந்து உதகை வந்தவருக்கு சேரிங்கிராஸ் பகுதியில் உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

மக்களவையில் ஸ்மிருதி இராணி: “இந்தியா ஊழல் செய்யாததால் நீங்கள் இந்தியா இல்லை”

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டுவிட்டார்” என கூறி குற்றம் சாட்டினார். அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, “முதல்முறையாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பாரத மாதாவின் மரணம் குறித்துப் பேசுகிறார். அவரது கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் கை தட்டுகிறார்கள்.

நீங்கள் இந்தியா கிடையாது. இந்தியா ஊழல் செய்யாததால் நீங்கள் இந்தியா இல்லை. இந்தியா தகுதியை நம்புகிறது; வாரிசு அரசியலை அல்ல. நாடு சுதந்திரம் அடையும் முன் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை நாடு முழங்கியது. இதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று நாடு, ஊழலே இந்தியாவைவிட்டு வெளியேறு என்கிறது; வாரிசு அரசியலே நாட்டை விட்டு வெளியேறு என்கிறது. தகுதியைத்தான் இந்தியா கோருகிறது.

நாட்டில் அவசரநிலையைப் பிறப்பித்த கட்சி காங்கிரஸ். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட கட்சி காங்கிரஸ். ஜம்மு காஷ்மீரில் கிரிஜா திக்கோ என்ற பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தெரிவித்த திரைப்படத்தை பிரச்சாரம் என்று கூறிய கட்சி காங்கிரஸ். அதே கட்சிதான், தற்போது மணிப்பூர் குறித்துப் பேசுகிறது.

அவையில் பேசிய ராகுல் காந்தி தான் மேற்கொண்ட யாத்திரை குறித்தும், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 சட்டப்பிரிவு அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்ததாகவும் கூறினார். (அவையில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதைச் சுட்டிக்காட்டி) அவையில் இருந்து வெளியேறிய நபரால் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரவும் முடியாது; ஒன்று மதம் மாறுங்கள்; இல்லாவிட்டால் கொல்லப்பட தயாராகுங்கள்; இல்லாவிட்டால் காஷ்மீரைவிட்டு வெளியேறுங்கள் என்று பண்டிட் மக்களை அச்சுறுத்துபவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள். மணிப்பூர் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாங்கள் அவையில் இருக்கிறோம். ஆனால், அவர்கள் அவையில் இல்லை” என பேசினார்.

மக்களவையில் ராகுல் காந்தி: ராமனால் ராவணன் கொல்லப்படவில்லை… ஆணவத்தால் ராவணன் கொல்லப்பட்டார்..!

மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 12 மணிக்கு தனது பேச்சைத் தொடங்கினார். அவையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். “சபாநாயகர் அவர்களே, முதலில் மீண்டும் என்னை மக்களவையில் இணைத்துக் கொண்டதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தொடங்கிய ராகுல் காந்தி, “கடந்த முறை நான் பேசியபோது அதானியை குறித்து பேசியது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கலாம்.

உங்கள் மூத்த தலைவர்கள் வேதனை அடைந்திருக்கலாம். அந்த வேதனை உங்களையும் பாதித்திருக்கலாம். அதற்காக நான் உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நான் உண்மையைப் பேசினேன். இன்று நான் அதானி பற்றி பேசப் போவதில்லை’ மணிப்பூர் பற்றியே பேசப் போகிறேன் என்பதால் எனது பாஜக நண்பர்கள் அச்சப்பட வேண்டிதில்லை. இன்று நான் எனது மனதில் இருந்து பேச விரும்புகிறேன். நான் அரசின் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை. அதனால் நீங்கள் அமைதியாக இருங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான எனது இந்திய ஒற்றுமை யாத்திரை இன்னும் முடியவில்லை.

நான் யாத்திரை சென்றபோது என்ன நோக்கத்துக்காக யாத்திரை செல்கிறீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். நான் அன்பைச் செலுத்துவதற்குத் தான் இந்த நடைபயணத்தை மேற்கொண்டேன் என்று புரிந்துகொண்டேன். இதன் மூலம் நான், என் மனதில் இருந்து வெறுப்பை அகற்றிவிட்டு அன்பை நிறைத்து வைத்துள்ளேன். இந்த நடைபயணத்தின்போது இந்தியாவில் விவசாயிகள் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன்.

நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு மணிப்பூர் மாநிலம் என்பது இந்தியாவின் பகுதியாக இல்லை. மணிப்பூரை இரண்டாக பிரித்து வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நீங்கள் மணிப்பூரில் இந்தியாவைக் கொலை செய்துள்ளீர்கள். இந்தியா என்பது நமது மக்களின் குரல். நீங்கள் மணிப்பூரில் அந்தக் குரலைக் கொலை செய்துள்ளீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் இந்தியாவைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் துரோகிகள்; தேச பக்தர்கள் அல்ல!

என் அம்மா இங்கே அமர்ந்திருக்கிறார். நீங்கள் என்னுடைய இன்னொரு அம்மாவை மணிப்பூரில் கொலை செய்தீர்கள். இந்திய ராணுவத்தால் ஒரேநாளில் மணிப்பூரில் அமைதியை கொண்டுவர முடியும். ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை. இந்தியாவின் குரலைக் கேட்க நரேந்திர மோடி தயாராக இல்லை. இலங்கை அனுமனால் எரிக்கப்படவில்லை; மாறாக ராவணனின் ஆணவத்தால் எரிந்தது. ராமனால் ராவணன் கொல்லப்படவில்லை. ஆணவத்தால் ராவணன் கொல்லப்பட்டார். நீங்கள் மொத்த நாட்டையும் எரிக்க விரும்புகிறீர்கள். முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா. நீங்கள் நாட்டையே எரிக்க முயற்சி செய்கிறீர்கள்” என்று ராகுல் காந்தி பேசினார்.

மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி – குன்னூரில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்..!

கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் நரேந்திர மோடி என பெயர் வந்தது எப்படி’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக, குஜராத் பாஜக எம்.எல்.ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி நிறுத்திவைத்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்க கோரி மக்களவை செயலகத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த மக்களவை செயலகம், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை நேற்று வழங்கியது.

இதையடுத்து, நேற்றைய தினமே மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்க ராகுல் காந்தி முடிவு செய்தார். நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த அவர், அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார், 4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதை அடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவை ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.’ என்று மாற்றி இருந்தார். மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததை தொடர்ந்து, ஏற்கெனவே இருந்ததுபோல, ‘இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்’ என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை நேற்று வழங்கியது. இதனை இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடினர். இதேபோல நீலகிரி மாவட்டம் குன்னூரில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.