ஆளூர் ஷாநவாஸ் சரமாரியான விமர்சனம்: விஜய் பாஜக எதிர்ப்பில் எலி..! திமுக எதிர்ப்பில் புலி..!!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய் பாஜக பாசிசம் என்றால் திமுக என்ன பாயாசமா? என்று பேசி இருந்த நிலையில், பாசிசம் என்றால் என்ன என்றே விஜய் புரியாமல் பேசுகிறார் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தெரித்துள்ளார்.

“நான் முன்பே விஜய் திமுக எதிர்ப்பு என்ற ஒன்றை கையில் எடுத்துவிட்டால், அது அதிமுகவுக்குப் பிரச்சினையாகவே போய் நிற்கும் என்று சொல்லி இருந்தேன். இப்போது அதேநிலைப்பாட்டிற்குத்தான் விஜய் வந்து நிற்கிறார். பலரும் அப்போது என்னை விமர்சித்தார்கள். விஜய் கட்சி தொடங்கினால் அதிமுகவுக்கு எப்படி பாதிப்பு வரும் என்றார்கள். ஞாயிற்றுக் கிழமை மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தெளிவாக திமுக எதிர்ப்பைப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறது.

இனிமேல் விஜய் திமுகவை விமர்சித்தே போராட்டங்களை நடத்துவார். இதை யார் செய்ய வேண்டும்? அதிமுக செய்யவேண்டும். அதை இப்போது விஜய் கையில் எடுத்திருக்கிறார். திமுகவின் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அதிமுக, பாஜக, நாதக ஆகிய கட்சிகளின் அரசியல். எனவே, விஜய் வருகை இந்தக் கட்சிகளுக்குத்தான் பின்னடைவைத் தரும். கடந்த 3 ஆண்டுகளில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை. அதிமுக அலுவலகத்தில் தினம் எடப்பாடி பிரஸ் மீட் நடத்தி இருந்தால், கமலாலயம் பக்கம் ஊடகங்கள் போய் இருக்காது.

எடப்பாடி தவறவிட்ட இடத்தைத்தான் அண்ணாமலை பிடித்துக் கொண்டார். இதைப் புரிந்துகொண்டுதான் விஜய் தெளிவான முடிவுடன் வந்துள்ளார். திமுக சாடிய அவர், அதிமுகவை மறைமுகமாகக் கூட விமர்சிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசி, அந்தத் தொண்டர்களை ஈர்க்கப்பார்க்கிறார். ஜெயலலிதா பற்றி விஜய் ஒரு வார்த்தை பேசவில்லை. ஊழலைப் பற்றிப் பேசுகிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஊழலால் தண்டனைப் பெற்றவர்கள் உள்ள கட்சி அதிமுக. அதை ஏன் விமர்சிக்கவில்லை? திமுக குடும்பத்திலிருந்து யாரும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படவில்லை. யாரும் ஜெயில்லுக்குப் போகவில்லை.

2ஜி வழக்கில் கூட வாதாடி வெளியே வந்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது ஊழல் என்று சொல் நேரடியாக திமுக பக்கம் போகிறார். திமுகவை விமர்சிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அது விமர்சிக்கக் கூடாத கட்சியும் அல்ல. ஆனால், திமுகவைப் பாசிச சித்தாந்தம் உள்ள பாஜகவுடன் ஒப்பிட்டுப் பேசுவதே தவறான புரிதல். பாஜகவைக் காட்டி பூச்சாண்டி காட்டுவதாகச் சொல்கிறார்.

இங்கே சிறுபான்மையினரை வைத்து அரசியல் செய்வது யார்? குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கு எதிரானது? காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கத்தின் பின்னணி என்ன? முத்தலாக் தடைச் சட்டம் யாருக்காகக் கொண்டுவரப்பட்டது? ராமர் கோயில் கட்டப்பட்ட இடத்தில் முன்பு என்ன இருந்தது? ஹிஜாப் எதிர்த்து சட்டம் போடுவது எதற்காக? வக்ஃபு திருத்தச் சட்டம் யாரைப் பாதிக்கும் ? இடஒதுக்கீடு முஸ்லிம் மக்களுக்கு மாநில அரசு கொண்டு வந்தால் மத்திய அரசு அதைத் தடுக்கிறது? தேர்தலில் சீட்டே கிடையாது பாஜக என்கிறது.

அமைச்சரவையில் முஸ்லிம்களையே சேர்க்க மறுக்கிறார்கள்? முஸ்லிம்களிடம் ஓட்டே கேட்க மாட்டேன் என பாஜகவினர் பரப்புரை செய்தார்கள்? இதைத்தான் பாசிசம் என சொல்கிறோம். இப்படி எங்கேயாவது ஒரு தரப்புக்கு எதிராக, மக்களுக்கு எதிராக திமுக செயல்படுகிறதா? திமுகவை எதிர்க்கிறார்? ஆனால், திமுக கொள்கைகளை விஜய் ஏற்றுக் கொள்கிறார். இது ஏன்? பாஜகவை எதிர்த்தால் தமிழ்நாட்டில் விஜய்யின் வண்டி ஓடும். அதே மாதிரி திமுக கொள்கையை ஏற்றால்தான் வண்டி ஓடும். அதைத்தான் விஜய் செய்கிறார். ஆகவே, மதவாத அரசியல் செய்பவர்கள் கொள்கை எதிரி என்கிறார். திமுக அரசியல் எதிரி என்கிறார். பாஜகவை எலி போல் எதிர்க்கிறார், திமுகவுக்குப் புலியாக எதிர்க்கிறார் விஜய் என ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்.

விஜய்: கொள்கை ரீதியாக பாஜக, அரசியல் ரீதியாக திமுக எங்கள் எதிரிகள்…!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர். அதில் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு, திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. மேலும் தவெகவின் கொள்கை வெளியிடப்பட்டது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள். ஒரு முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இனி திரும்பி பார்க்க மாட்டேன். என் கேரியரின் உச்சத்தையும், ஊதியத்தையும் விட்டு, உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன் என விஜய் பேசினார்.

அஸ்வத்தாமன் கேள்வி: வெள்ளியங்கிரி மலை என்ன உங்கள் வீட்டு சொத்தா.. ?

வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு ரூ.5353.95 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் வெள்ளியங்கிரி மலை என்ன உங்கள் வீட்டு சொத்தா ? உதயநிதி ஸ்டாலின் அவர்களே ? என பாஜக நிர்வாகி அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை வனத்துறை திறந்துள்ளது. இதில் வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு ரூ 5353.95 கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களும், இயற்கை ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளியங்கிரி மலை என்ன உங்கள் வீட்டு சொத்தா என பாஜக நிர்வாகியான அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார் . இதுதொடர்பாக அஸ்வத்தாமன் எக்ஸ் பக்கத்தில்,” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருக்கிற ஒரு அறிவிப்பில் தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ரூ. 5099 ரூபாய் தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ‘மலையேற்றத்திட்டம்’ என்ற பெயரில் இந்த அநியாயத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சிவபெருமானை வணங்கி வருகின்றனர்.

வெள்ளியங்கிரி மலைக்கு வருகிறவர்கள் ஆன்மீக பக்தர்களே தவிர மலையேற்றத்திற்கு வருகிற சுற்றுலா பயணிகள் அல்ல. வெள்ளியங்கிரி மலைக்கு சிவராத்திரி தினத்தில் மட்டும் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தன்று சுமார் பத்து லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். சித்ரா பவுர்ணமி அன்று மலை அடிவாரத்தில் சுற்றி இருக்கிற கிராமத்து மக்கள் வில்லு வண்டியில் வந்து வள்ளி கும்மி, காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காவடி ஏந்தி கொண்டு வெள்ளியங்கிரி மலையில் ஏறுவார்கள்.

இனிவரும் காலங்களில் அந்த சுற்றுவட்டார கிராமத்து மக்கள் காவடியுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கு உதயநிதிக்கு 5099 ரூபாய் தண்டம் கட்ட வேண்டுமா !? தாணிகண்டி, முல்லாங்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராம மக்கள் , வெள்ளியங்கிரியில் மீது அமர்ந்திருக்கிற சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். இனிவரும் காலங்களில் அந்த கிராமங்களைச் சார்ந்த மக்கள் தன்னுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்கு திராவிட மாடல் அரசுக்கு கப்பம் கட்ட வேண்டுமா!? வெள்ளியங்கிரிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் வரும் பக்தர்களை தடுப்பதற்கு உதயநிதி அவர்கள் திட்டம் தீட்டுகிறாரா !? என்ற கேள்வி எழுகிறது . சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார்.

அனைவரும் அறிந்ததே . இது உதயநிதி முன்னெடுத்துள்ள சனாதன இந்து தர்ம ஒழிப்பு சதி திட்டத்தின் ஒரு அங்கமா என்பதை உதயநிதி தெளிவுபடுத்த வேண்டும். தென் கைலாயமான வெள்ளியங்கிரியில் தமிழ் பாட்டி அவ்வையார் அவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வெள்ளை விநாயகர் கோவில் ,சீதை வனம் ,பீமன் களி உருண்டை, சித்தர் கூரை உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக மையங்கள் உள்ளன.வெள்ளியங்கிரி மலையின் ஆறாவது மலையான திருநீர் மலையில் உள்ள ஆண்டி சுனையில் இருந்து புனித நீரை எடுத்து வந்து கும்பாபிஷேகம் பண்ண முடியாத நிலையில் இருக்கிற திருக்கோவில்களில் அபிஷேகம் செய்தால் அந்த கோவிலில் உடனடியாக கும்பாபிஷேகம் நடக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கடந்த வாரம் கூட திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு என்கிற பெயரில் மலையை சுற்றி வந்தார்.

வேண்டுதலுக்காக கிரிவலம் வந்திருப்பார் என்று மக்கள் பலரும் நினைத்த நிலையில், இப்பொழுது, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கும் கூட கட்டணம் வசூலிக்கலாம் என்ற மோசமான யோசனையில் உதயநிதி அங்கு வந்து இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஒரு மிகப்பெரிய ஆன்மீக ஆதார ஸ்தலமான வெள்ளியங்கிரி மலையின் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்தோடு இந்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த அறிவிப்பை ரத்து செய்யவில்லை என்று சொன்னால் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்.” என அஸ்வத்தாமன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எச்.ராஜா விமர்சனம் : காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் இலவச இணைப்புகள் ..!

இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக 1963-க்கு முந்தைய காலத்துக்கு செல்வதாக உணர்கிறேன். திமுகவின் அயலக அணி போதைப் பொருள் கடத்த மட்டும் வைத்திருப்பதாக எண்ணினோம். பட்டவர்த்தனமாக தேச விரோதமாக செயல்படும் அமைப்பாக அது இருக்கிறது. அந்நிய நாடுகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதி அல்ல என்று காட்டுவது இல்லை.

ஆனால் திமுக அயலக அணி, இந்திய பகுதியாக இல்லாமல் வரைபடம் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். திமுக மூத்தத் தலைவர்களே சிறுபிள்ளைகள் தலையிடுவதால் சிக்கல்கள் வருவதாக பேசி உள்ளனர். உதயநிதி வந்த பிறகு தரங்கெட்ட கட்சி திமுக என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது தொடர்பாக ஆளுநர் பற்றி உதயநிதி ஸ்டாலின் மிக அநாகரீகமாக பேசி உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகரீகமான அரசியலை விரும்புவதாக இருந்தால் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைத்தது திமுக தான். இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என எச்.ராஜா தெரிவித்தார்.

கவுதமி அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகிறார்..!

அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கவுதமி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்த நடிகை கவுதமி கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு அவருக்கு மாநில நிர்வாகி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நடிகை கவுதமி அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தடா து.பெரியசாமி MGR மன்ற துணைச் செயலாளராகவும், சென்னையை சேர்ந்த ஃபாத்திமா அலி, கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய பிரிவு செயலாளராக இருந்த பி.சன்னாசி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவர், கட்சியின் மாநில விவசாயப் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வத்தாமன்: எல்.முருகன் சட்டம் பயின்றவர்..! திருமாவளவன் மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றவர்..!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு, பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருவதாகவும், மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்கிறது.

மேலும், திருமாவளவனோடு மத்திய அமைச்சர் எல்.முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் சட்டம் பயின்றவர். ஆனால், திருமாவளவனோ மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றார் என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

பாஜக MLA விடம் எனக்கு கல்யாணத்துக்கு ஒரு பெண்ணை பார்த்து தர முடியுமா..!?

பாஜக MLA ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பாஜகவினர், இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வைரலாக்கியும் வருகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள சர்க்காரி தொகுதி MLA வாக இருப்பவர் பிரிஜ்பூஷன் ராஜ்புத்.

இவர் தன்னுடைய காரில் ஹோபா சாலையில் சென்றபோது, அங்கிருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தார். பெட்ரோல் பங்கில் தன்னுடைய காரை நிறுத்தி, அங்கிருந்த ஊழியரிடம் தன்னுடைய பெட்ரோலை நிரப்ப சொன்னார். உடனே அங்கிருந்த ஊழியர் அகிலேந்திர கரே என்பவரும், MLAவின் காருக்கு பெட்ரோல் நிரப்பினார்.

பிறகு, காருக்குள் உட்கார்ந்திருந்த MLAவிடம் சென்ற ஊழியர், எனக்கு கல்யாணத்துக்கு ஒரு பெண்ணை பார்த்து தர முடியுமா? என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை கண்டு திடுக்கிட்ட பாஜக MLA, அந்த ஊழியரிடம் இதுகுறித்து விசாரித்தார்.

இது தொடர்பான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “இந்த சர்க்காரியில் தொகுதியில்தான் நான் வசித்து வருகிறேன். என் பெயர் அகிலேந்திர கரே.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. எனக்கு பெண் பார்க்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். MLA பிரிஜ்பூஷன் ராஜ்புத் உனக்கு இப்போ என்ன வயசாகுது? என கேள்வி கேட்க “44 வயசு சார்” என ஊழியர் பதிலளிக்கிறார்.

“உனக்கு ஒரு பொண்ணு தேடுவதற்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்?” என்றும் பாஜக MLA சிரித்துக்கொண்டே இதுக்கு முன்பு எங்காவது சென்று பெண் கேட்டாயா? சரி, உனக்காக வேண்டிக் கொள்கிறேன்.. உனக்காக பெண்ணையும் தேடுகிறேன்.. அதுவும் நீ எனக்கு வாக்களித்ததால் இதை செய்கிறேன்.. பெண் வீட்டார் கேட்டால், உன்னுடைய வருமானம் எவ்வளவு என்று சொல்லட்டும்?என கேள்வி கேட்க அதற்கு “6 ஆயிரம் ரூபாய் என ஊழியர் பதிலளிக்கிறார். பாஜக MLA “சரி, நான் நிச்சயம் திருமணத்துக்கு உதவுகிறேன்” என்று சொல்லி, அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மு.க. ஸ்டாலின் எப்போது கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டார்..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போது பிரதமரைப் பார்த்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டு அரசை வானளவு உயர்த்தி பேசிக் கொண்டுள்ளார். இன்றைக்கு, திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்,” என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளரான சி.வி.சண்முகம் எம்.பி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் பதிலளித்தார். அப்போது, “அதிமுக சீரும் சிறப்புமாக உள்ளதால் 2026-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போது பிரதமரைப் பார்த்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டு தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசிக் கொண்டுள்ளார். இன்றைக்கு, திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

அதிமுக MLA, பாஜக நிர்வாகி நில மோசடி செய்ததாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றி கதறிய பெண்..!

அதிமுக MLA மற்றும் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் இணைந்து தங்களது நிலங்களை மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களான 30 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அப்போது, பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூர் மாவட்டம், கீரணத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது வாரிசுதாரர்கள் 30 பேர் கோயம்புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், காளிகோனாருக்கு சொந்தமான அந்த இடத்தை சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாஜக முன்னாள் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்று வருவதாக கூறி சில தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இப்பிரச்சனை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அந்த நிலத்தை விற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தங்கள் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காளி கோனாரின் வாரிசுதாரர்கள் திரண்டு புகார் மனு அளிக்க வந்திருந்தனர்.

அப்போது, வாரிசுதாரரான ஒரு பெண் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக விரைந்து சென்ற காவல் துறையினர் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து பேசிய வாரிசுதாரர்கள், காளிக்கோனார் என்பவருக்குச் சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் கீரணத்தத்தில் உள்ளது. இந்த நிலத்தை சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாஜக முன்னாள் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்று வருகின்றனர்.

உடனடியாக அவர்கள் மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நிலம் சம்பந்தமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், நிலம் குறித்து பேசினால் தங்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

ரா.முத்தரசன்: தோல்விக்கு பின்னரும் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக அரசு..!

“தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாஜக தனது பத்தாண்டு கால ஆட்சியில் பாகுபாடு காட்டியது. தனது கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒரு நீதியும், பிற எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அநீதியும் இழைத்து வந்தது. அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பளிக்கவில்லை.

தோல்விக்கு பின்னரும் தனது வெறுப்பு அரசியலை பாஜக கைவிடவில்லை என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியுள்ளது. மாநிலங்களுக்கு வரி பகிர்வு விடுவிப்பில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்குடன் குறைந்த நிதி ஒதுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஒன்றிய அரசு என்பது, அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவிக்கும் பெருந்தன்மை வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்ற கொடிய நடைமுறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்தை நிராகரித்து ஒரு கட்சி ஆட்சி எனும் சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயக பண்புகளை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும். தமிழகத்திற்கு ரூ.7268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டுமாய், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என ரா.முத்தரசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.