பாஜகவுக்கு தைரியம் இருந்தால் நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும்..! நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்…!

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பய் சோரன் பதவியேற்றதை அடுத்து, அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசுக்கு ஆதரவாக மற்றும் எதிராக உள்ளவர்கள் எழுந்து நிற்க சொல்லி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் ஜேஎம்எம் கூட்டணிக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன்மீது விவாதம் நிகழ்த்தப்பட்டது. இதில் பேசிய ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில முதலமைச்சர் கைது செய்யப்பட்டார். எனது கைது சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதாக நான் நினைக்கிறேன்.

நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31-ம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவு கூரப்படும். என் மீதான குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். பாஜகவுக்கு தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும்.., சவால் விடுக்கிறேன்…, அப்படி நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆம், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார். ஜார்கண்டில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்பது தெரியவில்லை” என ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பான பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்குத் தான் இரட்டை இலை சின்னம் !

2024 நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும். அதேநேரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக, அதிமுக கூட்டணிக்கு இடையே தான் நேரடி போட்டி இருக்கும். இந்த இரு கட்சிகளும் கூட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இதில் அதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் பாஜக உடன் கூட்டணி இல்லை எனக் கூறிவிட்டார்கள். அதேநேரம் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தாங்கள் இன்னும் பாஜக கூட்டணியில் தான் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “இந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு படுதோல்வி அடையப் போகிறார். தேர்தலுக்கு முன்பு என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. மக்கள் தீர்ப்பு என்ன என்பது தேர்தலில் தெரியும். அதிமுக கொடி, சின்னத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தான் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. தொண்டர்கள் பயன்படுத்துக கூடாது என்ற உத்தரவு எங்கும் இல்லை. எங்கள் தொண்டர்களின் வேகமும் உணர்வும் எப்படி இருக்கிறது என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரியும். எனக்குள் ஓடுவது அதிமுக ரத்தம்.. இந்த ரத்தத்தை மாற்றத் தீர்ப்பு அளிக்க முடியுமா..?

தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு, “இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரை அது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. அது தற்காலிக தீர்ப்பு மட்டுமே. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் இருப்பதால் எங்களால் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோர முடியும். அந்த உரிமையின் அடிப்படையில் கேட்போம். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத் தான் தருவார்கள். மேலும், இந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்குத் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதால் தனி சின்னம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று நமட்டு சிரிப்புடன் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

உத்தப்பிரதேசத்தில் மெகா மோசடி: வந்ததும் வந்த அந்த பெண்ணுடன் மாலையை மாத்திட்டு பணம் வாங்கிட்டு போங்க..!

உத்தப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்நிலையில் பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேட்கி சிங் முன்னிலையில் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த கூட்டு திருமண நிகழ்வில் திருமணத்தில் ஏழைப் பெண்களுக்கு ரூ35 ஆயிரம் பணம், ரூபாய் 65 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என்று உ.பி உத்தப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்தார்.

ஆனால் இந்த திருமணத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட பெண்களையும், அவர்களது கணவர்களையும் அழைத்து வந்து, அவர்களை மீண்டும் மணமக்களாக நிறுத்தினர். மேலும், ஏராளமான பெண்கள் ஜோடி இன்றி தனியாக நின்றனர். அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மாலையை, தாங்களே அணிந்துகொண்டனர்.

சிலர் திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அந்தப் பெண்களிடமும், இளைஞர்களிடமும் பண ஆசை காட்டி, அவர்களையும் மணமக்களாக நிறுத்தினர். அவர்கள் அங்கு உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளாமல், வெறுமனே மாலையுடன் முன்பின் தெரியாத பெண்ணுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தங்களுக்குத் தாங்களே மாலையை அணிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கிருந்து தனித்தனியாக கலைந்து சென்றனர். 588 ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடந்தது போல புகைப்படத்தைக் காட்டி அரசிடம் பணம் பெற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தப் போலி திருமணத்தை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த மோசடி அம்பலமானது.

இதையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அரசு உதவித்தொகையை அபகரிப்பதற்காக முறைகேட்டில் ஈடுபட்ட 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் போலி ஜோடிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட திருமண விழாவின் மூலம் சுமார் ரூ. 2 கோடி அளவுக்கு பணம் சுருட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியாக மணப்பெண், மணமகனாக படித்தவர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 2000 வரை பணம் கொடுத்தது அம்பலமானது. திருமணம் பார்க்க வந்த சில இளைஞர்களை பணம் கொடுத்து மணமகனாக நடிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

புரட்சி தலைவி ஜெ ஜெ அம்மா ஆரம்பித்த தேசிய ஜனநாயக கூட்டணியில் , மோடி ஜி அவரது என ஸ்டிக்கர் ஒட்டுகிறார்..!

நடன இயக்குநரும் நடிகையுமான காயத்ரி ரகுராமன் அவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் 2015-ல், தமிழ்நாடு பாஜகவின் கலை பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டு 2020-ல் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட காயத்ரி ரகுராம், பாஜவின் கொள்கைகளையும், பிரதமர் மோடியின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து இனி தமிழ்நாட்டின் பாஜக தலைவர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அடுத்த பாஜக மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற ரேஸில் காயத்ரி ரகுராம் பெயரும் அடிபட்ட ஆனால், அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தனது அணியில் இருந்த பெப்சி சிவாவுக்கு எதிராக காயத்ரி ரகுராம் புகார் கூறிய நிலையில், காயத்ரி ரகுராம் பதவியில் பெப்சி சிவா நியமிக்கப்பட்டு, காயத்ரி ரகுராம், அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். இதனால் அண்ணாமலை – காயத்ரி ரகுராம் இடையே உரசல் அதிகரித்தது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை விமர்சித்து வந்தனர். பதிலுக்கு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அவர்களை விமர்சனம் செய்தார். அண்ணாமலையின் வார் ரூம் ஆட்கள் தன்னை குறி வைத்து சமூக வலைதளத்தில் அட்டாக் செய்வதாக கூறினார்.

இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டார். அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார்.  இந்தச் சூழ்நிலையில் காயத்ரி ரகுராம் 10 ஆண்டு கால அரசியல் பயணத்தில் அதிமுக அவரது இரண்டாவது கட்சியாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில், புரட்சி தலைவி ஜெ ஜெ அம்மா தேசிய ஜனநாயக கூட்டணி ஆரம்பித்தால், மோடி ஜி அதை அவரது என ஸ்டிக்கர் ஒட்டுகிறார். அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு அவர்கள் அதை திரும்ப கொடுக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடியார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும், பாஜக அல்ல. பாஜக தனது கூட்டணியை தேசிய சர்வாதிகாரி கை முறுக்கு கூட்டணி என்று பெயர் மாற்ற வேண்டும் என பாஜகவை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மம்தா பானர்ஜி காட்டம்: “ராமர் கோயில் திறப்பு விழாவை வைத்து வித்தை காட்டுகிறது பாஜக”

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ல் நடைபெறவிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் பங்கேற்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

அதே வேளையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்குச் செல்லப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதோடு, ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிக்க மம்தா பானர்ஜி முடிவு செய்திருப்பதாக அண்மையில் செய்திகள் பரவின. ஆனால் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், “யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் ஜனவரி 22 -ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், ராமர் கோயில் விஷயத்தில் பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாய்நகரில் ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன். பாஜக நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் தொடக்க விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது. மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பது கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்தலா 16 தொகுதிகள் என நாடாளுமன்ற தொகுதி பங்கீடு

மகராஷ்டிராவில் நீண்டகாலமாக பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி இருந்தது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதலமைச்சர் போட்டி காரணமாக சிவசேனாவும், பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாவிகாஸ் என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க, உத்தவ் தாக்கரே இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்த நிலையில் கடந்த ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அணி பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. மேலும் சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி கேட்ட தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் மறுத்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ‛இந்தியா’ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகராஷ்டிராவை பொறுத்தமட்டில் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி இடையே நல்ல நட்பு உள்ளது.

இதனால் அங்கு நாடாளுமன்ற தொகுதி பங்கீடு என்பது பிரச்சனையின்றி முடியும் என கூறப்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தலா 16 தொகுதிகளில் களமிறங்கும் என்ற தகவல்கள் வெளியாகின. கடந்த வாரம் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஏஐசிசி பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு..!

இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இலங்கையில் விவசாயம் சார்ந்த தொழில்கள், காபி மற்றும் ரப்பர் தோட்ட வேலைகளுக்காக தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்களை ஆங்கிலேயே அரசு இலங்கைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியது. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கையில் ஏராளமான வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொண்டனர் என்பது நாடறிந்த விஷயமாகும்.

இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் பெற்ற பிறகு குடியுரிமை சிக்கல் எழுந்ததால் இரு நாடுகளும் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன் பெயரில் பல்லாயிரக்கணக்கானோரை இந்தியா திரும்ப அழைத்துக்கொண்ட நிலையில் மலையகத் தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. மேலும் ஆங்கிலேயர்களால் இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையக தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்ததனை நினைவு கூரும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் விழா நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இலங்கையில் மலையக தமிழர்களின் 200-வது ஆண்டை குறிக்கும் வகையில் மத்திய அரசு இன்று தபால் தலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமான், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசியல் ஆசை இருந்தால் அரசியலமைப்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவுக்கு பிரசாரம் செய்யலாம்..!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், புதுச்சேரி புதுடெல்லி போன்ற பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர்களை களத்தில் இறக்கி அரசியல் செய்வதும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதையும் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆளுநருக்கு தனியாக அதிகாரமில்லை என்றும் உச்சநீதிமன்றமே பலமுறை குட்டு வைத்தும் மாறவில்லை.

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ், முதலமைச்சராக இருந்தபோது தமிழிசை சவுந்தரராஜனை குடியரசு தினத்தின்போது அழைக்காததால் கவர்னர் மாளிகையிலேயே கொடியேற்றிவிட்டு புதுவைக்கு வந்து கொடியேற்றினார். பெரும்பாலான நாட்கள் புதுச்சேரியில் தங்கி அரசு நலத்திட்ட விழாக்களில் கலந்து கொண்டு பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ந. ரங்கசாமி அறிவிப்புக்கு முன்பே தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்து விடுவார். அதிகாரிகள் இடமாற்றம் கூட முதல்வருக்கு தெரியாமல் நடந்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

கடந்த வாரம் நடந்த அரசு விழாவில், புதுச்சேரியின் அதிகாரிகள், ஊழியர்கள், மக்களுக்கு திட்டப்பணிகளை செய்வதில்லை. வெளியே வருவது கூட கிடையாது. அடுத்தவர் மீது பழிப்போட்டு அதிகாரிகள் தப்பித்து கொள்கின்றனர்’ என தமிழிசை முன்னிலையிலேயே முதலமைச்சர் ந. ரங்கசாமி கதறினார். தலைமை செயலர் மற்றும் செயலர்களை கையில் வைத்து கொண்டு அரசு நிர்வாகத்தை முடக்கி வருகிறார். முதலமைச்சர் ந. ரங்கசாமியை டம்மி செய்துவிட்டு பாஜகவை வளர்க்க பார்க்கிறார் என எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளும்கட்சியே புகார் சொல்லிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் பணி காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி அல்லது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நின்று வெற்றி பெற்று மத்திய அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். கடந்த மாதம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்டபோது மறுக்காமல் சஸ்பென்ஸ் கூறி முடித்தார்.

தமிழகத்தில் நடைபயணம் செல்லும் அண்ணாமலை, அவ்வப்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பாஜக தலைமைக்கு விசுவாசத்தை காட்டுவார். அதற்கு ஒருபடி மேலாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தென் மாவட்டங்களில் வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய ஒரு வாரத்துக்கு பிறகு ஆறுதல் கூற சென்றுள்ளார். அப்போது தமிழக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. ‘இரண்டு மாநிலத்துக்கு ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் அங்கே இருப்பதில்லை. மாறாக தமிழ்நாட்டில்தான் பெரும்பாலும் முகாமிட்டுள்ளார்.

தான் இன்னும் தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற நினைப்பிலேயே தினம் தினம் அரசியல் விமர்சனம் செய்கிறார். அரசியல் ஆசை இருந்தால் அரசியலமைப்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவுக்கு பிரசாரம் செய்யலாம். பாஜகவின் ஏஜெண்டாகவும், மோடியின் கைக்கூலியாகவும் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்’ என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் எப்போதும் முகாமிட்டு இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது எங்கும் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. தற்போது அவர் மேற்கொண்ட தென் மாவட்ட விசிட் தேர்தல் சீட்டுக்கான விஜயம் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தினார். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்துள்ளது. இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை அவசர நிவாரண நிதியாக மக்களின் வாழ்வாதார உதவிக்காவும், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, மத்திய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சரை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.

அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன், அங்கு வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினர்.

தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வின் போது, தமிழக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமாக மத்திய நிதியமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

கிராம உதவியாளர் வேலை தருவதாக ரூ.2.65 லட்சம் ஆட்டைய போட்ட பாஜக மாவட்ட செயலாளர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை, மேலக்காட்டை சேர்ந்த பாஜக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன். முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம், சேர்ந்த அப்பாதுரை மனைவி சாந்தி என்பவரிடம் அவரது மகன் ராம்குமாருக்கு, கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு பல தவணைகளாக ரூ.2,65,000 பணம் பெற்றுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் ராஜேந்திரன் ஏமாற்றி வந்தார். இதுதொடர்பாக சாந்தி, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவின்பேரில் முத்துப்பேட்டை காவல்துறை வழக்கு பதிந்து ராஜேந்திரனை தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தெரிய வருகின்றனர்.