மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக புகார்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறயுள்ளது.

இதனை முன்னிட்டு நேற்று காசர்கோடு சட்டமன்ற பகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. விவிபாட் இயந்திரத்துடன் நடந்த மாதிரி வாக்குப்பதிவில், ஒருமுறை பொத்தான் அழுத்தினால், பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக, இத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் மற்ற சின்னங்களை விட சிறியதாக இருப்பதாகவும் புகார்கள் தெரிவித்ததுடன், உடனடியாக அதனை மற்ற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதுபோல் இரட்டை வாக்குகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.

அண்ணாமலை குப்புசாமி: “உங்களிடம் வாக்கு சேகரிக்க நான் வரவில்லை..! ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன்..!

தமிழ்நாட்டில் “நாளை மறுநாள் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் சூடுபிடிக்க தொடங்கிய பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், கோயம்புத்தூர் பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கோயம்புத்தூர் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை குப்புசாமி அப்பகுதியில் உள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்தில் கண்கலங்கியபடி பெரியவர்களிடம் ஆசி பெற்றார்.

இதனையடுத்து அண்ணாமலை குப்புசாமி பேசுகையில், “உங்களிடம் வாக்கு சேகரிக்க நான் வரவில்லை. உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன். இங்கு காணப்படும் அன்பை போல நாங்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் வழியில் பெரியவர்கள் பலர் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கால் கடுக்க காத்திருந்து எனக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

இவற்றை பார்க்கும்போது நம் நாட்டின் மீதும் நமது பிரதமர் மீதும் நீங்கள் எல்லாம் கொண்டுள்ள அன்பை வெளிக் காட்டுகிறது. எதிர்வரும் காலங்களில் இந்தியா மிகச்சிறந்த வளர்ச்சியை பெறும். நமது குழந்தைகளுக்கு வளமான இந்தியாவை வழங்க வேண்டியது நம் பொறுப்பு. நம் நாடு 450 ஆண்டுகளுக்கு முன் இருந்த வளமான இடத்திற்கு செல்லத் தான் போகிறது” என அண்ணாமலை குப்புசாமி பேசினார்.

சேலத்தில் “ரோடு ஷோ” உடன் பிரச்சாரத்தை நிறைவு செய்த பழனிசாமி

தமிழ்நாட்டில் “நாளை மறுநாள் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் சூடுபிடிக்க தொடங்கிய பிரச்சாரம், இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.விக்னேஷை ஆதரித்து, சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டாவில் தொடங்கி,சேலம் டவுன் வரை சுமார் 3 கிமீ., தொலைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘ரோடு ஷோ’ நடத்தி நிறைவு செய்தார்.

சுமார் 2 மணி நேரம் கொட்டிய பூ மழையில் நனைந்தபடி வந்த பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, சாலையோரங்களில் நின்ற பொதுமக்களும், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றியவர்களும் கைகளை உயர்த்தி காண்பித்து, ஆதரவு தெரிவித்தனர். அப்போது, “மத்திய, மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறியதால், மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். காவிரி பிரச்சினையில், அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் போராடி தீர்ப்பை பெற்றது. அதை அமல்படுத்த பாஜக அரசு தயங்கியபோது, அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி, காவிரி மீதான தீர்ப்பை அமல்படுத்த வைத்தனர்.

பிரதமரும், ராகுல் காந்தியும் மேகேதாட்டு அணையை கட்ட மாட்டோம் என்று கூறவில்லை. தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் மேகேதாட்டு அணையை கட்ட மாட்டோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை. தமிழகத்தை, தேசியக் கட்சிகள் திட்டமிட்டு புறக்கணிக்கின்றன. எம்பிக்களுக்கான தேர்தல் நிதியை அதிமுக எம்பிக்கள் ரூ.367 கோடியை பெற்றுத் தந்தனர். ஆனால், திமுக எம்பிக்கள் எம்பிக்களுக்கான நிதியை 75 சதவீதம் செலவு செய்யாமல் விட்டனர். மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றன. மத்திய அரசு, மக்களை மதம், சாதியை வைத்து பிரித்துப் பார்க்கிறது.

மக்களை சாதி, மதத்தை வைத்து, பிரித்துப் பார்ப்பதை அதிமுக ஒருபோதும் ஏற்காது. நாடாளுமன்றத்தில், தமிழகத்தின் பிரச்சினைகளை எடுத்துக்கூற, தனித்து நிற்க வேண்டும். எனவே, சுதந்திரமாக செயல்பட்டு தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அதிமுக தனித்து நிற்கிறது” என பழனிசாமி உரையாற்றினார்.

பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை: புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுகவினர்..!!

புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு இளைஞனாக வாக்குக்கு பணம் தரக்கூடாது என்று அதிமுக சார்பில் இந்தத் தேர்தலில் களமிறங்கி களத்தில் உள்ளேன். நாங்கள் வாக்குக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்து சொல்வோம்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் தர தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்குக்கு 500 ரூபாயும், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வாக்குக்கு 200 ரூபாயும் தருகின்றனர். இவர்கள் ஏழை மக்களை பணம் தந்து கொச்சைப்படுத்துகின்றனர்.

நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். அடுத்து வரும் சமூகத்துக்கு வழிவிட வேண்டிய தேர்தல். அவர்கள் மீண்டும் மீண்டும் வாக்குக்கு பணம் கொடுத்துதான் தேர்தலை சந்திப்பதாக இருந்தால், ஏழைகளை ஏமாற்றும் இந்தத் தேர்தலை புறக்கணிக்கத் தயாராக இருக்கிறேன்.

இது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி ஆவணங்களுடன் புகார் தர உள்ளேன். புதுச்சேரியில் உள்ள தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை இல்லை. பறக்கும் படையினரை எங்குமே காண இயலவில்லை. காரில் மட்டுமே அவர்கள் பயணிக்கின்றனர். ஆய்வு செய்வதில்லை. தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். வாக்குக்கு பணம் தருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ் வேந்தன் தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு: பாஜக-வின் தேர்தல் படம் டிரைலர் தான் நல்லாருக்கும்..! ஆனா படம் சொதப்பிடும்…!

2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பாஜக-வின் தேர்தல் படம் டிரைலர் தான் நல்லாருக்கும்; ஆனா படம் சொதப்பிடும் என்றார். இங்கு போட்டி அதிமுக, திமுக-விற்கு மட்டுமே என்றும், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஏன் காமராஜர் ஆட்சியை கொடுக்கவில்லை என்று செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். சொன்னதையே மோடி செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை கொச்சைப்படுத்திய அண்ணாமலை உடன் கைகோர்த்து வாக்கு சேகரிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம் என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

தொல். திருமாவளவன்: மு.க. ஸ்டாலின் பாஜகவோடு கைகோத்திருந்தால் செந்தில்பாலாஜி சிறையில் இருந்திருக்கமாட்டார்..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், கடலூர் மாவட்டம், வேப்பூரில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணி கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஷ்ணுபிரசாத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, “தேசிய அளவில் வியூகம் அமைத்து, எடப்பாடியையோ, அதிமுகவையோ எதிராகக் கருதாமல், தேசிய அளவில் பாஜகவை, மோடியை வீழ்த்தவேண்டும் என்ற முயற்சியில் 28 கட்சிகள் அடங்கிய கூட்டணி தான் இண்டியா கூட்டணி. அந்தக் கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் ஒன்று. திமுக தலைமையிலான கூட்டணி அமைந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்ட்டது.

எதிரணியில் 5 சீட் கிடைக்கும், திமுகவோடு இருந்தால் 2 தான் கிடைக்கும். எனவே அணி மாறுவார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை எனக்கு நம்பர் முக்கியமல்ல. நான் ஏற்றுகொண்டிருக்கிற கொள்கை தான் முக்கியம். அதனால் தான் அண்ணன் ஸ்டாலினோடு கைகோத்திருக்கிறேன்.

இன்று இருக்கும் சூழலில் அவர் பாஜகவோடு கைகோத்திருந்தால், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை நெருக்கடி ஏற்பட்டிருக்காது. செந்தில்பாலாஜி சிறையில் இருந்திருக்கமாட்டார். அண்ணன் பொன்முடி வழக்கும் திசைமாறியிருக்கும். ஆனால் பாஜக என்ன நெருக்கடி தந்தாலும் பாஜகவை தமிழ்நாட்டில் வளர விடமாட்டேன் என்ற உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். என்ன செய்தாலும் பாஜக மீண்டும் வெற்றி பெறக்கூடாது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என துடிக்கிறேன். அப்படியானால் கடலூர் தொகுதியில் விஷ்ணு பிரசாத்தும் வெற்றிபெறவேண்டும். இந்தத் தொகுதியில் பொறுப்பாளரான அமைச்சர் சி.வெ.கணேசன், எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர். அதனால் தான் அவர் அமைச்சர் பதவியோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் சேர்த்து கவனித்து வருகிறார்” என தொல். திருமாவளவன் பேசினார்.

மு.க.ஸ்டாலின்: “திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ‘ஹீரோ…!’ பாஜக தேர்தல் அறிக்கை நாட்டிற்கே வில்லன்…!

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான தொண்டை மண்டலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கடந்துள்ள ஒரே மாநிலக் கட்சி என்ற வரலாற்றுக்குச் சொந்தமான – இனமான எழுச்சி இயக்கமாம், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய, வடசென்னை தொகுதிப் பரப்புரைக்கும் சேர்த்தே வந்திருக்கிறேன்.

பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த மண், திருவள்ளூர்! அந்த மண்ணில், இரண்டாம் விடுதலைப் போராக நடைபெறவுள்ள இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்காக உங்களை நாடி வந்திருக்கிறேன். வெற்றி என்றால், சாதாரண வெற்றியல்ல! கடந்த 2021-இல் திருவள்ளூர் மாவட்டத்தில் நூறு சதவீத வெற்றியைத் தந்தீர்கள். அது போன்று இருக்கவேண்டும். வரிசை எண்ணில் தமிழ்நாட்டில் முதல் தொகுதி திருவள்ளூர் அதேபோல், வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்திலும் முதல் தொகுதியாக இருக்கவேண்டும்.

கழகக் கோட்டையான திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில், வேட்பாளராகப் போட்டியிடுகிறார் சசிகாந்த் செந்தில் அவர்கள். அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்தவர். தனது அறிவாற்றலால் காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றிக்காக உழைப்பவர். சமூகநீதி – சமூக நல்லிணக்கத்திலும் அக்கறை கொண்ட இவரை திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கை சின்னத்தில் வாக்களித்து, தங்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வடசென்னை தொகுதியைப் பொறுத்தவரை, தி.மு.க. தொடங்க ஆலோசனை நடைபெற்ற மண்ணடி, பவளக்காரத்தெரு, கொட்டும் மழையில் தி.மு.க. தொடங்கப்பட்ட ராபின்சன் பூங்கா, இன்று கழகத்தின் இதயமாக இயங்கும் அறிவாலயத்திற்கு முன்பு, கழகத்தின் உயிர்த்துடிப்பாக இயங்கும் அறிவகம், அன்னைத் தமிழுக்காக இன்னுயிர் ஈந்த தியாக மறவர்களான நடராசன் தாளமுத்துவைப் போற்றும் நினைவிடம் அமைந்துள்ள மூலக்கொத்தளம் எனத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும் சேய்க்குமான உறவு!

இன்னும் கூடுதலாக சொல்லவேண்டும் என்றால், பெருமையோடு பூரிப்போடு சொல்லவேண்டும் என்றால், நான் முதலமைச்சர் ஆக, என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூரை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதி! அப்படிப்பட்ட வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் கலாநிதி வீராசாமி அவர்கள், தலைவர் கலைஞரின் நிழலாக இருந்த அண்ணன் ஆர்க்காட்டாரின், அருமை மகன்! மக்கள் பிணியை போக்கும் புகழ்பெற்ற மருத்துவரான இவர், சமூகப்பிணியை போக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார்.

அவரின் குரல் தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும்! அதற்கு வடசென்னை மக்கள், உதயசூரியன் சின்னத்தில் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு, வாக்களித்து வெற்றிபெற வைக்கவேண்டும். இந்த இரண்டு வேட்பாளர்களையும் நாடாளுமன்றம் அனுப்பத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் மட்டும் இல்லை. இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காரலாம்!

இதுவரை நீங்கள் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கலாம்! பல இளைஞர்களுக்கு இது முதல் தேர்தலாக இருக்கலாம்! ஆனால், இது சற்றே மாறுபட்ட தேர்தல்! மிக மிக முக்கியமான தேர்தல்! ஏன் என்றால், இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான் இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்கவேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்கவேண்டுமா? அதுபோன்று, இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்கவேண்டுமா அல்லது R.S.S. எழுதும் சட்டம் இருக்கவேண்டுமா? இடஒதுக்கீடுமுறை இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா? எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டுமா – வாழக்கூடாதா? இதையெல்லாம் முடிவு செய்யப்போகும் தேர்தல். உங்கள் வாக்குதான் அந்த முடிவை தீர்மானிக்கப் போகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் ஏன் “வேண்டாம் மோடி”என்று சொல்கிறோம் என்றால், அவர் இரவுகளில் கொண்டுவரும் சட்டங்களால்! தீடீர் என்று ஒரு இரவில்தான், ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டி.வி. முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார்! இரவில் பல மக்களை ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார்! அதேபோன்று ஒரு இரவில்தான், பெரிய பொருளாதாரப் புலி போன்று, G.S.T. சட்டத்தை அமல்படுத்தி, தொழில் முனைவோரையும் நடுத்தர வர்க்க மக்களையும் கொடுமைப் படுத்தினார். எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டனர்!

கொரோனா வந்தப்போது என்ன செய்தார்? “இரவெல்லாம் எல்லாரும் மணி அடியுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கொரோனா ஒழிந்துவிடும்”என்று பெரிய ‘சயிண்டிஸ்ட்’ போன்று பேசினார். இன்னும் நிறைய இருக்கிறது! அதனால்தான், நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு! நாட்டுக்கும் கேடு!

பிரதமர் மோடி இரவுகளில் அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் மாற்றி, இந்தியாவில் விடியலை ஏற்படுத்தத்தான், இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்! அதனால்தான், எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தி கோவை வந்தபோது, “ராகுல் அவர்களே… வருக! புதிய இந்தியாவிற்கு விடியல் தருக!”என்று கூறினேன். மக்களைச் சந்தித்து, மக்களோடு மக்களாக இருந்து, அவர்கள் பிரச்சினைகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு தி.மு.க.வும் – காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம்!

தெற்கிலிருந்த நம்முடைய குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக எதிரொலித்திருக்கிறது! முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய்!

நீட் தேர்வு ரத்து!

ஒன்றிய அரசுப் பணிகளில் பெண்களுக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீடு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பை 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தச் சட்டத்திருத்தம்!

SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்வு!

பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம்!

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை!

இத்துடன், நம்முடைய தேர்தல் அறிக்கையில் சில முக்கிய அறிவிப்புகளையும் தலைப்புச் செய்தியாக சொல்கிறேன்.

சென்னையில் மூன்றாவது ரயில் முனையம்!

கோயம்பேடு முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை விரைவில் மெட்ரோ ரயில்!

விம்கோ நகரில் இருந்து எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு!

வடக்கில் இருந்து வரும் ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை!

வில்லிவாக்கம் ரயில்நிலையத்தில் இருந்து, தெற்குப் பக்கமாகச் செல்ல சுரங்க நடைபாதை!

மணலியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை!

செங்குன்றத்தை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க, உயர்மட்ட மேம்பாலம்!

பழவேற்காடு முதல் கடப்பாக்கம் இடையே மேம்பாலம் அமைத்துப் புதிய சாலை!

இதுமட்டுமல்ல, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாகத் தள்ளுபடி!

சிறுபான்மையினர் விரோத சட்டங்கள் ரத்து!

விவசாயக் கடன்கள் தள்ளுபடி!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

நூறுநாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்வு! நாளொன்றுக்கு 400 ரூபாய் ஊதியம்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

முதியோர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்களுக்கு இரயிலில் மீண்டும் கட்டணச்சலுகை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு!

மீனவ மக்கள் நிறைந்த பகுதி இது! அவர்களுக்காக அறிவிக்கப்பட்டவை, உலர்மீன் முற்றங்கள் கட்டுதல் போன்ற மீனவர்களுக்குத் தேவையான தொழில் கட்டமைப்புப் பணிகள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்!

பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை!

தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்!

மீன்பிடி தடைக்காலங்களில் மாற்றுப் பொருளாதார வேலைவாய்ப்புகளை உருவாக்க மீன்கள் பதப்படுத்துதல், மீன்வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள்!

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்., இப்படி, தி.மு.க. – காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள் இந்தத் தேர்தலின் “ஹீரோ”என்றால், பா.ஜ.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ‘வில்லன்! பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வில்லன் என்று ஏன் சொல்கிறோம் என்றால், மத அடிப்படையில் இந்த நாட்டுமக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கிறார்கள்! என முக ஸ்டாலின் உரையாற்றினார்.

Narendra Modi: பாஜக தொண்டர்கள் பக்கம் மொத்தம் தமிழ்நாடும் உள்ளது..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார் . திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறும் பிரச்சாரத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டார்.

அப்போது, “இந்தக் கூட்டத்தின் உற்சாகத்தையும் வரவேற்பையும் பார்த்து திமுக மற்றும் காங்கிரஸின் இண்டியா கூட்டணிக்கு தூக்கமே தொலைந்திருக்கும். உங்கள் ஆதரவுக்கு தலை வணங்குகிறேன். நேற்றுதான் நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடியிருப்பீர்கள். தமிழ் புத்தாண்டில்தான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் தமிழகத்துக்கான பல திட்டங்கள் உள்ளன. மோடியின் உத்தரவாதம் என்று அதனை படிப்பவர்கள் பலரும் பாராட்டுகிறார்கள். ஒவ்வொரு பிரிவினரையும் யோசித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த தமிழகம்தான் வளர்ந்த பாரதமாக மாறும் என்ற நம்பிக்கையோடு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம்.

கடந்த 10 வருடங்களாக பாஜக மிகக் கடுமையாக உழைத்து நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. அதில் ஒன்று நெல்லைக்கான வந்தே பாரத் ரயில். அதனால் பலர் நன்மையை பெற்றுவருகின்றனர். தற்போது தெற்கிலும் புல்லட் ரயில் சேவை தொடங்க திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். புதிய அரசு அமைந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் தாய்மார்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.

அரசியல் வித்தகர்களுக்கு இதற்கான காரணம் தெரியவில்லை. காரணம் என்னவென்றால், தாய்மார்கள் படும் துன்பத்தை உணர்ந்து வைத்துள்ளேன். அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றேன். தாய்மார்களுக்கு தொண்டு செய்ததால் எனக்கு இந்த அன்பு கிடைத்து வருகிறது. தமிழ் மொழியை, கலாச்சாரத்தை நேசிப்பவர்கள் பாஜகவையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரத்தை பெற்றுவருவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புராதன சின்னங்கள் உலகப் புகழ் பெறும். உலகம் முழுவதும் திருவள்ளூவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.

தமிழகம் இன்றைக்கு போதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. குடும்ப அரசியலில் இருப்பவர்கள் போதையை ஊக்குவிக்கிறார்கள். அதிகாரம் மிக்கவர்களின் அனுமதியுடன் போதைப்பொருள் தலைவிரித்தாடுகிறது. போதைப்பொருள் என்கிற விஷம் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. போதைப்பொருள் மாஃபியா யாருடைய பாதுகாப்பில் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன். போதைப்பொருளை இந்த தேசத்தை விட்டு ஒழிப்பேன்.

இந்தக் கூட்டம்தான் தமிழகத்தில் இந்தத் தேர்தலுக்காக நான் கலந்துகொள்ளும் கடைசி கூட்டம். இன்னொரு முறை உங்களை வந்து சந்திக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இத்தனை முறை தமிழகம் வந்து உங்களை பார்த்ததில் பாஜக மட்டும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமோக ஆதரவு தருகிறீர்கள். பாஜக தமிழகத்தில் எங்கு இருக்கிறது என்று திமுகவும், இண்டியா கூட்டணி கேட்டார்கள். அவர்கள் வியக்கும் அளவுக்கு நீங்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவு தருவீர்கள். பாஜக வந்துவிடும் என்று அவர்கள் ஒரு பழைய பல்லவியை பாடுகிறார்கள். அவர்கள் சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

ஆனால், 24X7 மணி நேரமும் 2047 பற்றி தான் எனது சிந்தனை இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய திமுகவுக்கு பயமும், பதற்றமும் வந்துவிட்டது. பேரலை போன்ற மக்களின் ஆதரவால் பயப்படுகிறார்கள். பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் அளவுக்கு பயப்படுகிறார்கள். பாஜக தொண்டர்கள் பக்கம் மொத்தம் தமிழ்நாடும் உள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மு.க.ஸ்டாலின்: வங்கதேசத்தோடு மோடி செய்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூருக்கு பேரிடி..!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும் நிறுவனங்களை நடத்த முடியும். பா.ஜ.க. போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்! தொழில் வளர்ச்சி போய்விடும்! நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது! இப்படி நாட்டைப் பாழ்படுத்தி – அதலபாதாளத்தில் தள்ளிய பா.ஜ.க.வையும் – மோடியையும் வீட்டிற்கு அனுப்ப இந்திய மக்களின் ஆதரவுடன் உருவாகி இருப்பதுதான் இந்தியா கூட்டணி!

இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை நாடாளுமன்றத் தேர்தல்கள் மூலமாக நாம் இத்தனை நாளாகக் காப்பாற்றி வந்திருக்கிறோம். இந்தியாவின் பன்முகத்தன்மையை அனைத்துத் தரப்பினருக்கும் உரிமைகள் வழங்குவதன் மூலமாக காப்பாற்றி வந்திருக்கிறோம். வேற்றுமைகள் கொண்ட நாட்டில் ஒற்றுமையை உருவாக்கிக் காப்பாற்றி வந்திருக்கிறோம். மொழியும், மதமும் வேறு வேறாக இருந்தாலும் இந்திய நாடு நமக்கானது என்ற எண்ணத்தை எல்லோரும் பெறுவதற்கு ஒரு நம்பிக்கையான ஆட்சிமுறையை வைத்துக் காப்பாற்றி வந்திருக்கிறோம்.

இப்படி நாம் காப்பாற்றிய இந்தியாவை, சிதைக்கப் பார்க்கிறார் மோடி அவர்கள். ஒற்றுமைச் சிந்தனை குலைந்துவிட்டால், மிக மோசமான ஆபத்துகள் நம்மைச்சூழும். அதனால்தான் இந்தியா முழுமைக்கும், இருக்கும் ஜனநாயக சக்திகள் இந்தியாவைக் காக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம். பாசிசத்தை வீழ்த்த ஒன்று சேர்ந்திருக்கிறோம்.

இந்தியா கூட்டணி அரசு ஒன்றியத்தில் அமைந்ததும் ஒன்றிய அரசை வலியுறுத்தி நாம் செய்யவுள்ள திட்டங்களை வாக்குறுதிகளாகத் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். அது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும், எதிரொலித்திருக்கிறது! நம்முடைய வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொல்ல விரும்புகிறேன்.

மக்காச்சோளம் – சோயா போன்ற முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க ரயில்வேயில் கட்டணச் சலுகை!

சிறு தேயிலை விவசாயிகளின் பச்சைத் தேயிலைக்குக் குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு 35 ரூபாய்!

நீலகிரி மாவட்ட சுற்றுலாத்தலங்கள் மற்றும் அதற்கான வழித்தடங்கள் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக மேம்பாடு!

இதுமட்டுமல்ல, மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!

தொழிலாளர் விரோத சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்!

விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!

உழவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது, விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோர் மற்றும் மாணவர்களுக்கு இரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்!

அதுமட்டுமல்ல, சகோதரர் ராகுல் காந்தி கூறினாரே! ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்! நீட் தேர்வு ரத்து! ஒன்றிய அரசுப்பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு, 50 விழுக்காடு என்பதை உயர்த்த சட்டத்திருத்தம்!

மேற்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம்!

விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது!

– உள்ளிட்ட மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மாநிலங்களுக்கும் – நாட்டிற்கும் நம்பிக்கையளிக்கும் தேர்தல் அறிக்கையாகக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருக்கிறது!

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, புதிய இந்தியாவை உருவாக்குவேன் என்று கூறினார்! ஆனால், அவரின் பத்தாண்டுகால ஆட்சியில் என்ன மாதிரியான இந்தியாவை உருவாக்கியிருக்கிறார்? ஒரு புள்ளிவிவரம் சொல்கிறேன்! பட்டினியால் தவிக்கும் நாடுகள் பட்டியலில் 125 நாடுகளில், இந்தியா 111-ஆவது இடத்தில் இருக்கிறது என்று உலகளாவிய பட்டினிக்குறியீட்டுப் புள்ளிவிவரம் சொல்கிறது! இது எவ்வளவு பெரிய அவலம்!

அடுத்து, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் கடன் 58 இலட்சம் கோடி ரூபாய்! இப்போது எவ்வளவு தெரியுமா? 155 இலட்சம் கோடி ரூபாய்! இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் நிதி மேலாண்மை லட்சணம்! மோடி ஆட்சிக்கு வந்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59 ரூபாய்! இன்று 84 ரூபாயாகி நம்முடைய நாட்டு பணத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது! இந்த வீழ்ச்சிதான் மோடியின் சாதனை!

மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நிம்மதியாக நடமாட முடிகிறதா? ஊடக நிறுவனங்களால் நிம்மதியாகச் செயல்பட முடிகிறதா? தங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால், ஒட்டுமொத்தமாக அந்த நிறுவனங்களை விலைக்கு வாங்கிப் பத்திரிக்கையாளர்கள் மேல் அடக்குமுறையை ஏவுகிறார்கள். உண்மையை எழுதும் பத்திரிக்கையாளர்களைச் சிறையில் அடைப்பது! அவர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது என்று பத்திரிக்கைச் சுதந்திரமே பறிக்கப்பட்டிருக்கிறது! அதன் விளைவுதான் இன்றைக்கு, ஊடக சுதந்திரத்தில் 180 நாடுகளில் 161-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது! நம்முடைய பழம்பெரும் ஜனநாயகத்திற்கு எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

மோடி சொன்ன புதிய இந்தியா, இவரின் ஆட்சியில் இந்தியாவில் 32 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார்கள். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தவில்லை. 30 விழுக்காடு மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதியே இல்லை. 41 விழுக்காடு மக்களுக்கு வீடுகள் இல்லை. இப்படித்தான் இருக்கிறது! மோடி சொன்ன புதிய இந்தியா!

விலைவாசி எந்த அளவுக்குப் போய் இருக்கிறது? மோடி ஆட்சியில் தானியங்கள் விலை 54 விழுக்காடு அதிகமாகிவிட்டது. பால் பொருட்கள் விலை 53 விழுக்காடு அதிகம். எண்ணெய் விலை 48 விழுக்காடு அதிகம். காய்கறி விலை 48 விழுக்காடு அதிகம். மருத்துவச் செலவுகள் 71 விழுக்காடு அதிகம். கல்விச் செலவுகள் 60 விழுக்காடு அதிகம். இதெல்லாம்தான் மோடி கூறிய வளர்ச்சியா?

பத்து ஆண்டுகளாகப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தும் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை! அதனால்தான் எந்த மேடையிலும் அவரால் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல முடியவில்லை! ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியைப் பொருத்தவரைக்கும் ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் கஜானாவைத் தூர்வாரிய அ.தி.மு.க.வால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமை, நாங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே திருப்பித் தந்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு தரும் நிதி நெருக்கடி என்று எல்லாவற்றையும் மீறி, ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம்.

நேற்று நம்முடைய கூட்டணிச் சின்னத்தைக் காட்டி, ஒரு தாய்மாரிடம் நம்முடைய கழகத் தோழர்கள் வாக்கு கேட்கிறார்கள். அதற்கு அவர்கள், “சின்னம் எல்லாம் முக்கியம் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் முகத்திற்காகவே நாங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டு போடுவோம். அவர்தானே, நாங்கள் செல்லும் பஸ் எல்லாம் இப்போது Free ஆக்கியிருக்கிறார்” என்று நன்றிப்பெருக்குடன் அவர்கள் சொல்கிறார்கள்.

அதே போல், ஒரு தொலைக்காட்சி நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தோட்டத்தொழிலாளர்களான பெண்களிடம் நம்முடைய அரசின் திட்டங்களைப் பற்றி கேட்கிறார்கள். அந்தச் சகோதரிகள் “நாங்கள் தேயிலைப் பறிக்க அதிகாலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பிவிடுவோம்! அதனால், எங்கள் குழந்தைங்கள் சரியாக சாப்பிட்டார்களா! இல்லையா! என்று கவனிக்க முடியாது.

ஆனால், இப்போது முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தில் பள்ளிக்கூடத்திலேயே சாப்பாடு கொடுக்கிறார்கள். காலையும், மதியமும் எங்கள் குழந்தைங்கள் ஸ்கூல்லயே சாப்பிட்டுக்கொள்கிறார்கள். அதனால், எங்களுக்கு கவலை இல்லாமல் இருக்கிறது. அதேபோல், உரிமைத்தொகையும் ஒவ்வொரு மாதமும் சரியாக 15-ஆம் தேதி வந்துவிடுகிறது. அவசரத் தேவைக்கு நாங்கள் மருந்து, மாத்திரை வாங்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது!” – என்று மனநிறைவுடன் சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, “எங்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தி.மு.க. அரசு தான் எங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்து 16 ஆயிரம் ரூபாய் போனஸ் கொடுத்திருக்கிறது”- என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள். நம்முடைய ஆட்சி மக்களுக்கு எந்த அளவுக்கு உதவி இருக்கிறது? உதாரணத்திற்கு ஒரு ஏழைக் குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் குடும்பத்தில் முதியோர் இருந்தால், அவர்களுக்கு மாதம் 1200 ரூபாய் உதவித்தொகை கொடுக்கிறோம்.

அந்த வீட்டின் குடும்பத் தலைவிக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை. அவர்கள் வீட்டில் கல்லூரிக்கு செல்லும் ஒரு மகள் இருந்தால், புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய். அதே வீட்டில் ஒரு இளைஞர் இருந்தால், அவருக்கு நான் முதல்வன் திட்டத்தில், இலவசமாக ‘திறன் பயிற்சி; கொடுத்து நல்ல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வாங்கித்தருகிறோம். அந்த வீட்டில் இருக்கும் மூன்று பெண்களும் விடியல் பயணம் திட்டத்தில் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்வதால், மாதம் எப்படியும் 2000 ரூபாய் மிச்சம் ஆகிறது. அதாவது, நம்முடைய திட்டங்களால் நேரடியாவே ஒரு குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய் சென்று சேருகிறது.

மக்களைத் தேடி மருத்துவம் என்று ஒரு முன்னோடித் திட்டம்! இதில் ஒரு கோடிப் பேருக்கு நேரடியாக அவர்கள் வீட்டிற்கே சென்று, மருத்துவம் பார்த்து, டெஸ்ட் எடுத்து, மருந்துகளைக் கொடுத்திருக்கிறோம். பல இலட்சம் பேருக்கு நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, தீர்வு கண்டிருக்கிறோம்.

தமிழ்ப்புதல்வன் என்று ஒரு திட்டத்தை அடுத்து அறிவித்திருக்கிறோம். அதாவது, மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் தரப்போகிறோம். இப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகப் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறோம். அதனால்தான், தமிழ்நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் எல்லாம், அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினைப் பார்க்கிறார்கள்.

இப்போது நான் பட்டியலிட்டது சிறு துளிதான். இதே போன்று ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மூன்று ஆண்டுக்குள் நாங்கள் செய்திருக்கிறோம். முழுவதுமாக சொன்னால், இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டம், சாதனை விளக்கப் பொதுக்கூட்டமாக மாறிவிடும்.

இந்த திருப்பூரும், கோவையும் எப்படிப்பட்ட ஊராக இருந்தது? தமிழ்நாட்டின் எந்த மாவட்ட மக்களும், எப்படிப்பட்ட கஷ்டத்தில் இருந்தாலும் – திருப்பூருக்கும் கோவைக்கும் வந்தால் – ஏதாவது வேலை கிடைத்துவிடும் என்று பலருக்கும் நம்பிக்கை தருகிற நகரங்களாக இந்த இரண்டு ஊர்களும் இருந்தது!

அப்படிப்பட்ட இந்த மேற்கு மண்டலத்தின்மேல் மோடி நடத்திய இரட்டைத்தாக்குதல்தான், பண மதிப்பிழப்பு! ஜி.எஸ்.டி! தொழில் நிறுவனங்களில் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்று நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்த காலம் போய் – மோடி ஆட்சியில் ”ஏல அறிவிப்பு” நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருக்கும் நிலைமைக்கு நிறுவனங்கள் வந்துவிட்டது!

மோடியை நம்பி ஏமாந்துவிட்டதாக, பல தொழிலதிபர்கள் வேதனையோடு புலம்புகிறார்கள்! இந்தப் பகுதியில் இருக்கிற சிறு குறுதொழில்களை நடத்தக்கூடியவர்கள் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்தேன். அதில் பேசியவர்கள், “5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் என்று மேற்கு மண்டலம் வளர மன்மோகன்சிங் ஆட்சிதான் காரணம். ஆனால், பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு – GST -என்று கோவை, திருப்பூர் தொழில்கள் தங்களுடைய அடையாளத்தையே இழந்துவிட்டது என்று தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள்.

அதுமட்டுமா, பஞ்சு, நூல் விலையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எத்தனை முறை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தார்கள்? வங்கதேசத்தோடு மோடி செய்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூருக்கும் மேற்கு மண்டலத்துக்கும் பேரிடியாக அமைந்துவிட்டது! தவணை தவறிய கடனைச் செலுத்த 6 மாதம் வரை இருந்த அவகாசத்தை, சர்பாஸி (SARFAESI) சட்டத்தில் 3 மாதமாகக் குறைத்துத் தொழிலதிபர்களின் சொத்துக்களை ஏலம் விட்டதுதான் அவர் தந்த பரிசு.

டெக்ஸ்டைல் மட்டுமல்ல, வாகன உற்பத்தி, வெட்கிரைண்டர் உற்பத்தி, சிறு, குறு பவுண்டரிகள், இன்ஜினியரிங் மோட்டார் பம்புகள் உற்பத்தி, விசைத்தறிகள் என்று இந்தப் பகுதியுடைய எல்லாத் துறைகளிலும் மிகப்பெரிய மந்தமான சூழலை மோடியின் பாஜக ஆட்சி உருவாக்கியிருக்கிறது.

நேற்று கோவையில் சொன்ன பகிரங்கமான குற்றச்சாட்டை திருப்பூரிலும் மக்கள் மன்றத்தில் வைக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்த நிறுவனத்தை மிரட்டி, குஜராத்தில் தொழில் தொடங்கச் செய்திருக்கிறார்கள் என்று நேற்று சொன்னேன். அதில் கூடுதலாக இன்னொரு செய்தியை இன்று சொல்கிறேன். பி.எல்.ஐ. திட்டம் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களிடம் வரியை வசூலித்துவிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் குஜராத்தில் தொழில் தொடங்கிட வேண்டும் என்று சலுகை தருகிறார்கள். இவர்கள்தான் இப்போது கோவைக்கும் திருப்பூருக்கும் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

நம்மைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு அரசு சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் எப்படியெல்லாம் வளர்த்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியும். இந்த நிறுவனங்களுக்கு என இந்தியாவுலேயே முதன்முதலில் தனியாகக் கொள்கையை கொண்டுவந்ததே தலைவர் கலைஞர் அவர்கள்தான். 1970-ஆம் ஆண்டிலேயே சிட்கோ எனக் கூறப்படும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி, இன்றைக்குத் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 127 தொழிற்பேட்டைகள் இருக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிற வகையில், “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்ற மகத்தான திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடங்கி இருக்கிறது. 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் கடன் வாங்கிட வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-ஆவது இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில், சுமார் 50 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது நாட்டிலுள்ள மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 7.8 விழுக்காடு!

தமிழ்நாட்டில் இருக்கிற MSME நிறுவனங்களில் குறு நிறுவனங்கள் 99 விழுக்காடு! வளர்ந்து வரும் துறைகளுக்கான மையமாவும் தமிழ்நாடு உருவாகி வருகிறது. இதன் மூலமாகத்தான் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்காக அனைத்துத் திட்டங்களையும் தீட்டிக் கொடுத்து வருகிறோம்.

நாட்டில் எளிமையாக தொழில் புரிய உகந்த பட்டியலில் தமிழ்நாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 14-ஆவது இடத்தில் இருந்தது. பெருமையாகச் சொல்கிறேன். இப்போது 3-ஆவது இடத்திற்கு வந்திருக்கிறோம். அடுத்து முதல் இடத்தைப் பிடிப்பதுதான் நம்முடைய இலக்கு.தமிழ்நாடு அரசால் இதுவரை 6 புதிய தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 6 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்குகிற பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் வட்டாரத் தொழில் மையங்கள் நிறுவப்பட இருக்கிறது. சேலம், ஓசூர், கடலூர், தஞ்சாவூர் நகரங்களிலும் – வட்டாரப் புத்தொழில் மையங்கள நிறுவுகிற பணிகள் நடைபெற்று வருகிறது.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக மட்டும் இந்த ஆண்டு 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நம்முடைய எண்ணமானது சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ந்தால்தான் தமிழ்நாடு வளரும்! தொழில் முதலீட்டாளர்கள் பயன் பெறுவார்கள்! ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்!

அதனால்தான், இன்றைக்குக் கூட பல்வேறு சிறு, குறு, நடுத்தரத் தொழில் கூட்டமைப்புகளைச் சந்தித்தபோது, ”நீங்கள் நிறைய எங்களுக்குச் செய்து கொடுக்கிறீர்கள்” என்று சொன்னார்கள். இன்னும் ஒருசில பிரச்சினைகளைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்! அந்த பிரச்சினைகளும் தேர்தல் முடிந்தவுடன், உறுதியாகச் சொல்கிறேன், உங்களை அழைத்துப்பேசி தீர்த்து வைக்க வழிவகை காணப்படும்” என்று உறுதி கொடுத்திருக்கிறேன். சொன்னதைச் செய்வான் இந்த ஸ்டாலின். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் மகன் எனத் தெரிவித்தார்.

ஜி.ராமகிருஷ்ணன்: பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்துக்கு வேலை தேடி வருகின்றனர்..!

சேலம் மாவட்டம், சாமிநாதபுரத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் ஜி.ராமகிருஷ்ணன் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது, , நாட்டில் அதிகரித்துவிட்ட விலைவாசி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு, ஜிஎஸ்டி விதிப்பு ஆகியவற்றின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட்டது. கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவே மோடி அரசு இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, சிறுபான்மை மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் அரசாக, பாஜக இருக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் போக்கையே, பாஜக கடைப்பிடித்து வருகிறது. தேர்தல் நாடகத்தின் ஒரு பகுதியாக சமையல் எரிவாயு விலையை குறைத்துவிட்டு, மகளிர் தினத்தை முன்னிட்டே, விலை குறைக்கப்பட்டதாக பொய்யான பிரச்சாரத்தில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக தெரிவித்து, இன்று இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் இருக்க காரணமும் பாஜக அரசு தான். பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தான், அதிக எண்ணிக்கையில் தமிழகத்துக்கு வேலை தேடி வருகின்றனர் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.