நிர்மலா சீதாராமன்: திராவிட முன்னேற்ற கழகம் இல்லை… டிரக்ஸ் முன்னேற்ற கழகத்தை விரட்டுவோம்”

அவிநாசியில் மங்கலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்தும், மகளிர் சுய உதவிக்குழுவினருடான கலந்துரையாடல் கூட்டத்தில் இன்று பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் நலத்திட்டங்கள் வருமா என்று சந்தேகம் இருந்த நிலையில், இன்றைக்கு நமக்கும் வரும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.

நீங்கள் எம்.பி, கொடுக்காவிட்டாலும், எம்.எல்.ஏ. கொடுக்காவிட்டாலும் வீட்டுக்கு தேவையான கழிவறை, குடிநீர் குழாய், கான்கிரீட் வீடு என ஏழை மக்களுக்கான திட்டங்களை தீட்டி வருகிறார் பிரதமர் மோடி. சுய உதவிக்குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், அந்தப் பெண்களுக்கு ஏதோவொரு வகையில் உதவுகிறார் பிரதமர் மோடி.

‘என் குடும்பம் எப்படியாவது வாழ வேண்டும். குடும்ப அரசியல் என்று என்னை திட்ட வேண்டாம். ஆனால், மக்கள் ஆதரவு தருகிறார்கள். மக்களை அவமானப்படுத்த வேண்டாம்’ என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், இந்த நாட்டு மக்கள்தான் என் குடும்பம் என்கிறார் மோடி. பின் தங்கிய வகுப்பை மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் நிற்கிறார். நாடாளுமன்றத்தை மட்டும் மோடி கட்டவில்லை. ஒவ்வொருவருக்கும் வீடு கட்டித் தருகிறார். மின்சாரம், கேஸ் இணைப்பு இருக்கிறதா என மோடி பார்க்கிறார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் படுகர்கள் ஏராளமானோர் உள்ளனர். திமுகவில் எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருக்கும் ஒத்துப்போவதில்லை. காரணம், அங்கிருக்கும் சாதி தான். ஆனால், எல்.முருகனின் டெல்லி வீட்டுக்கு சென்று பிரதமர் மோடி பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

பெண்களை முன் நிறுத்தி திட்டம் வகுக்கிறார் பிரதமர் மோடி. பூச்சி மருந்தை டிரோன் மூலம் பயிர்களுக்கு இன்று வயலில் தெளிக்க முடியும். மகளிர் சுய உதவிக்குழு பெண்களை அழைத்து வந்து பயிற்சி அளித்து, அவர்களுக்கு தேவையான ஊக்கத் தொகை, டிரோன் வாங்க கடனும் வந்துவிடும் என விவசாயத்தில் புரட்சி செய்யக்கூடிய அளவுக்கு, பெண்கள் கையில் தந்தவர் பிரதமர் மோடி. இன்றைக்கு கிராமங்களில் டிரோனை இயக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கிடைக்கிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணை இன்றைக்கு பிரதமர் மோடி மூலம் பார்க்கிறோம்.

ஒவ்வொரு கிராமத்திலும் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் இன்றைக்கு சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். தன்மானத்தோடு லட்சங்களில் பெண்கள் கிராமங்களில் சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாடு அரசு பெண்களை எப்படி நடத்துகிறது என்பதையும் சொல்ல வேண்டும். தகுதி உள்ள பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குகிறது மாநில அரசு. சென்னை மாநகராட்சி பெண் மேயர் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாகிறார் என்பதை நாம் வீடியோ பதிவுகளில் பார்க்கிறோம்.

அந்தக் கட்சியால் திராவிட சொந்தங்கள் கட்டுக்குள் வைக்கச் சொல்ல முடியுமா? போதையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது. வசூல் அரசியல் தமிழ்நாட்டில் வேரூன்றி இருப்பது கவலை அளிக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் இல்லை… டிரக்ஸ் முன்னேற்ற கழகத்தை விரட்டுவோம்” என நிர்மலா சீதாராமன் பேசினார்.

Nirmala Sitharaman: தமிழகத்துக்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் வரும்போது பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், ஓசூர் ராம்நகரில் பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவைச் சேர்ந்தமக்களவை உறுப்பினர்கள், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை பற்றிய எந்த விஷயத்தையும் நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. ஆட்சியில் இருக்கும் பாஜக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதுபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி மழை, குளிர் காலங்களில் வந்து செல்லும் பறவைபோல தமிழகம் வருகிறார் என முதல்வர் விமர்சிக்கிறார். தமிழகத்துக்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் வரும்போது பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன்: போதைப் பொருட்கள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை, ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும்..!

தஞ்சாவூர் மேல வீதியில் பாஜக சார்பில் 1 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “தஞ்சாவூர் பல எழுத்தாளர்களையும், இசைக் கலைஞர்களையும் உருவாக்கிய மண். இங்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் வீசி விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டபோது, நானும், இங்கு போட்டியிடும் கருப்பு முருகானந்தமும் பல உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டுள்ளோம்.

கச்சத்தீவு விவகாரத்தை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறார்கள். கச்சத்தீவை திமுக தாரைவார்த்து கொடுத்ததால்தான், இன்று வரை மீனவர்கள் பிரச்சினை தீராமல் உள்ளது என்ற உண்மையை அனைவரும் பேச வேண்டும். ‘டிஎம்கே’ என்றழைக்கப்படும் திமுக, ‘டிரக்’ முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. போதைப் பொருட்கள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை, ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும். திமுகவை நாம் ஓட ஓட விரட்ட தேர்தலில் மக்கள் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரிக்க வேண்டும்” என நிர்மலா சீதாராமன் பேசினார்.

நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், அமித்ஷா மீது ரூ.6,986 கோடி தேர்தல் பத்திர நிதி ஊழல் குறித்து புகார்..!

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ வழக்குகளை எதிர் கொள்ளும் 41 நிறுவனங்கள் பாஜவுக்கு ரூ. 2,471 கோடி நிதியினை அளித்துள்ளன. ரூ.1,698 கோடி தேர்தல் பத்திர நிதி அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறையினரின் ரெய்டுகளுக்குப் பின் பாஜவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாஜவின் முறைகேடான தேர்தல் நிதிக்காக மத்திய அரசின் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இவர்களின் செயலானது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் கூட்டுச்சதி (120(பி)) மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் மட்டுமின்றி நாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட பொருளாதார பயங்கரவாதமாகும். எனவே, இவர்கள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமனின் கணவர்: ”மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடுமுழுவதும் ஏற்படும்”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திப்பதால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கிய தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் வாங்கும் சத்தி குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக பா.ஜ.க அரசின் பொருளாதார திட்டங்களைப் பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் குரலை மத்திய அரசு காது கொடுத்துக் கேட்பதே இல்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகலா பிரபாகர் கூட பா.ஜ.கவின் பொருளாதார கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரகலா பிரபாகர் கொடுத்த பேட்டியில் , ” பா.ஜ.கவும் பிரதமர் மோடியும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை முழுமையாக மாற்றிவிடுவார்கள். இந்தியாவின் வரைபடத்தையே இவர்கள் மாற்றி விடுவார்கள். மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடுமுழுவதும் ஏற்படும். மேலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தலே நடைபெறாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கிண்டலான பதில்..!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அங்கு நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர் முதலமைச்சர் சித்தராமையா 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்ப்பாசன பணிகளை செயல்படுத்த விடாமல் தடுப்பதாவும், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பை உறுதி செய்யும் ஜல் ஜீவன் திட்ட பணிகளையும் அவர் நிறுத்தி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

அப்போது மத்திய பாஜக அரசு மாநிலங்களை வஞ்சிப்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாமா என கேட்ட போது கிண்டல் செய்யும் வகையில் ஒலி எழுப்பி நிர்மலா சீதாராமன் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் போராட்டம்: “நிவாரணம் கேட்கவில்லை; உரிமையைத் தாருங்கள்..!”

மத்திய இடைக்கால பட்ஜெட்டை 2024 பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு வஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரித்து அளித்துள்ளார் . இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, இன்று நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிஆர் பாலு, ஆ.ராசா, திருமாவளவன் உட்பட திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு திமுக கூட்டணியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி.,க்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி தராமல் வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

வங்கிகளில் ஆடு, மாடுகளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்குறாங்க..!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பக்தர்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். குறிப்பாக கோயிலுக்கு பின் பகுதியில் சுவாமி வீதியுலா வரும் இடம் கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தில் இருந்த பழமையான மாமரம் முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த கோயில் செயல் அலுவலர் கோபால மணிகண்டன், அப்பகுதியில் வேலி அமைத்துக் கொடுப்பதாக தெரிவித்தார்.

அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘செயல் அலுவலர் அப்பிரச்னையை சரி செய்துள்ளாரா? என்பதை 10 நாட்களில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பார்வையிடுவார். அதன் பிறகும் பணி நடைபெறவில்லை எனில் நானே அங்கு வந்து அது சரி செய்யப்படும் வரை அங்கிருந்து நகர மாட்டேன்,’ என்றார். இதற்கு அறநிலையத்துறை இணை ஆணையர் நிச்சயம் அந்த பணிகளை செய்து முடிப்போம், என்றார்.

இதற்கிடையே, நிர்மலா சீதாராமனிடம் ஒருவர், அதில், மழை வெள்ளத்தால் உயிரிழந்த கால்நடைகளால் ஏற்பட்ட இழப்புக்கு லோன் கேட்டு வங்கி சென்றால் ஆடு, மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்களிடம் இறப்பு சான்றிதழ் வாங்கி வர சொல்கிறார்கள். நாங்கள் யாரை போய் கேட்பது என்று வேதனை தெரிவித்தனர். இதை கேட்ட நிர்மலா சீதாராமன், நான் சொல்கிறேன் என கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தினார். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்துள்ளது. இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை அவசர நிவாரண நிதியாக மக்களின் வாழ்வாதார உதவிக்காவும், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, மத்திய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சரை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.

அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன், அங்கு வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினர்.

தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வின் போது, தமிழக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமாக மத்திய நிதியமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

முதலில் ஆலோசனை கூட்டம்.. அடுத்து பாதயாத்திரை..! அண்ணாமலைக்கு ஆப்பா..!?

தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையேயான மோதல் உக்கிரமடைந்தது. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது. ஆனால் டெல்லி மேலிடம் அதிமுகவை சமாதானப்படுத்த முயற்சித்ததாக கூறப்பட்டது. இதனை அதிமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. பாஜகவுடனான கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். இஸ்லாமியர்கள் அதிமுகவை நம்பலாம்.

இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கூட தொடங்கிவிட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. வலிமையான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவின் இடத்தை எந்த கட்சியை வைத்து நிரப்புவது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் அண்ணாமலை சந்தித்தார்.  இதனிடையே அதிமுக கூட்டணி முறிவைத் தொடர்ந்து விவாதிக்க இன்று சென்னையில் தமிழ்நாடு பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அண்ணாமலை அறிவித்திருந்தார். தற்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் அண்ணாமலையின் 3-ம் கட்ட பாதயாத்திரை நாளை முதல் தொடங்க இருந்தது. இதுவும் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அக்டோபர் 6-ந் தேதி அண்ணாமலையின் 3-வது கட்ட பாதயாத்திரை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து பாஜகவின் நிகழ்ச்சிகள் ரத்து, ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டு வருவது தமிழ்நாடு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.