3-வது முறையாக வாரணாசியில் களமிறங்கும் நரேந்திர மோடி..! 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக..!

2024 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்பட உள்ள நிலையில், இதற்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை வலுப்படுத்த பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த 29-ம் தேதி டெல்லி கட்சி தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய 5 மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, 195 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். இதில், கடந்த 2014ல் குஜராத்தின் வதோதரா, உபியின் வாரணாசியில் போட்டியிட்டு இரு தொகுதியிலும் வென்ற நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார். 2வது முறையாக 2019 தேர்தலிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் தற்போது 3வது முறையாக வாரணாசியில் களமிறங்குகிறார்.

கருப்பு அறிக்கை எங்களுக்கு திருஷ்டி பொட்டு..!

பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று காலை கருப்பு அறிக்கை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கையை வெளிட்ட சிறிது நேரத்தில் மாநிலங்களவைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஒய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “கார்கே ஜி இங்கே இருக்கிறார்.

ஒரு குழந்தை சிறப்பாக ஏதாவது செய்யும் போதும், சிறப்பு விழாக்களுக்கு குழந்தை புத்தாடை உடுத்தி தயாராகும் போதும், தீய விஷயங்கள் மற்றும் கண் திருஷ்டிகளில் இருந்து குழந்தையை பாதுகாக்க பெரியவர்கள் அதற்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் புதிய பாதையில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தீமையின் கண்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நமக்கு திருஷ்டி பொட்டு வைக்கும் முயற்சி ஒன்று நடந்துள்ளது. அதற்காக கார்கேவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு..!

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த சட்டப்போராட்டங்கள் அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று, அதிமுகவை தற்போது தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்பட சில மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், வருகிற மே மாதம் நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவை கழட்டி விட்டுவிட்டு, அதிமுக தனியாக நிற்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனால் டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வந்துள்ளாார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. கடந்த முறை தமிழகம் வந்த நரேந்திர மோடி ஓபிஎஸ்சை சந்திக்க நேரம் ஒதுக்காத இன்று பிற்பகல் திருச்சியில் ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. தற்போது பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கிய சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மனைவியை கைவிட்ட மோடி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பூஜை செய்வதா..!?

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி… இந்தியாவின் புனித நகரில் ஒன்று. இங்கு இருந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990-ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991-ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணிக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறை ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். கருவறையில் வைக்கப்படும் ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வந்து பூஜை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்ய பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் சாமி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ராமர் ஏறக்குறைய 15 ஆண்டுகள் போராடி தனது மனைவி சீதையை மீட்டார். இப்படியான சூழலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடியை பிரதிஷ்டை பூஜை செய்ய ராமர் பக்தர்களான நாம் எப்படி அனுமதிக்க முடியும்? ஏனென்றால் மோடி தனது மனைவியை கைவிட்டவராக அறியப்படுகிறார். இப்படி இருக்கும்போது அவர் தான் பூஜை செய்வாரா?” எனக்கேட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

அந்த பக்கம் சு.வெங்கடேசனுக்கு ராம.சீனிவாசன் … இந்த பக்கம் பிடிஆருக்கு தமிழிசை..

சென்னை – திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் 7 மணி 50 நிமிடங்களில் 652 கி.மீ தூரத்தை கடந்து சென்னையை மதியம் 1:50 மணிக்கு சென்றடையும்.

இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயிலை மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்து அந்த ரயிலேயே பயணம் செய்தனர். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் மதுரை ரயில் நிலைய சந்திப்பை வந்தடைந்தது.

மதுரையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வந்தே பாரத் ரயிலை போன்று உருவாக்கப்பட்ட கேக்கை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்து வெட்டினர்.

திடீரென கேக் துண்டை எடுத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டினார். திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அமைச்சருக்கு கேக் ஊட்டியது அங்கிருந்தோரை புருவம் உயர்த்தச் செய்தது.

இதுமட்டுமின்றி தொலைக்காட்சி விவாதங்களில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் பாஜகவின் ராம.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் இந்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் நடந்த வந்தே பாரத் நிகழ்ச்சியில் எதிரெதிர் தரப்பினர் கேக் ஊட்டிக்கொண்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.

அண்ணாமலை: ‘வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்ற பிரதமர் திமுககாரர் அல்ல’

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சி பாசறையில் வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் ஒப்பித்துவிட்டு போயிருக்கிறார்.

கடந்த 1964-ம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரை சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடிதான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதை மு.க. ஸ்டாலின் தெளிவாக ஒப்புக்கொள்கிறார். 1964-க்கு பிறகு பலமுறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகன், பேரன், மகளுக்கு மத்திய அமைச்சர் பதவியும், எம்.பி. பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்து பேசவோ, செயல்படவோ நேரம் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புபுயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்துவிட கூடாது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் நரேந்திர மோடிதான். மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவியை கேட்டுப் பெறத் தெரிந்த திமுகவுக்கு, 1964-ல்புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.

மத்திய அரசில் மீனவர்களுக்காக தனித்துறை அமைத்து, பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். காசிபோல ராமேசுவரமும் விரை வில் உலகப் புகழை பெறும். வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்ற, பிரதமர் நரேந்திர மோடி ஒன்றும் திமுககாரர் அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயிலில் மண் எடுக்க முயன்ற பாஜகவினர் கைது..!

கடந்த மாதம் 30-ம் தேதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக ‘என் மண் என் தேசம்’ என்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது என்றும், இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும் என்றும், அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச்சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில், அகத்தீஸ்வரர் கோயிலில் பாஜகவினர் தரிசனம் செய்துவிட்டு, கோயிலில் இருந்து ஒரு பிடி மண்எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற இருந்தது. ‘என் மண் என் தேசம்’ இயக்கத்துக்கு தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம்,இதில் கலந்துகொள்ள வந்தார்.

அப்போது பாஜகவினரை கோயிலுக்குசெல்ல விடாமல் தடுப்புகள் அமைத்து காவல்துறை தடுத்தனர். இதனால், காவல்துறையினருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

மக்களவையில் அமித் ஷா ஆவேசம்: “மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்”

மணிப்பூர் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி மீது, இந்த அரசு மீது நம்பிக்கை போய்விடவில்லை. மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் உண்மையான குணம் என்ன என்பதை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அம்பலப்படுத்தும்.

அரசைப் பாதுகாக்க ஊழல் செய்வது என்பதுதான் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம். சுதந்திரத்துக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமர் என்றால், அவர் நரேந்திர மோடிதான். மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய புகழ் இருக்கிறது. நாட்டு மக்களுக்காக அவர் ஓய்வின்றி உழைக்கிறார். நாள்தோறும் 17 மணி நேரம் தொடர்ச்சியாக அவர் உழைக்கிறார். ஒருநாள்கூட அவர் விடுப்பு எடுத்துக்கொண்டது கிடையாது. மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த அரசு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை நான் இப்போது கூறுகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று கூறுவதையே வழக்கமாகக் கொண்ட கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. வெறும் கடனை தள்ளுபடி செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாறாக, கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படாத நிலையை உருவாக்குவதற்கான அமைப்பு முறையை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் விவசாயிகளுக்குக் கொடுத்திருப்பது இலவசங்கள் அல்ல. மாறாக, அவர்கள் தங்களை தற்சார்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கை. நரேந்திர மோடி அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க சில முடிவுகளை எடுத்து, வாரிசு அரசியலுக்கும் ஊழலுக்கும் முடிவு கட்டி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம் என்பது அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கொள்கைகளைப் பாதுகாக்க போராடுகிறது.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளுக்காக மத்திய அரசு ஒரு ரூபாய் வழங்கினால் அதில் 15 பைசாதான் அவர்களைச் சென்றடைகிறது என பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சொன்னார். ஆனால், இன்று முழு தொகையும் ஏழைகளைச் சென்றடைகிறது” என்று அமித் ஷா உரையாற்றினார்.

மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி – குன்னூரில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்..!

கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் நரேந்திர மோடி என பெயர் வந்தது எப்படி’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக, குஜராத் பாஜக எம்.எல்.ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி நிறுத்திவைத்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்க கோரி மக்களவை செயலகத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த மக்களவை செயலகம், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை நேற்று வழங்கியது.

இதையடுத்து, நேற்றைய தினமே மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்க ராகுல் காந்தி முடிவு செய்தார். நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த அவர், அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார், 4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதை அடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவை ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.’ என்று மாற்றி இருந்தார். மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததை தொடர்ந்து, ஏற்கெனவே இருந்ததுபோல, ‘இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்’ என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை நேற்று வழங்கியது. இதனை இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடினர். இதேபோல நீலகிரி மாவட்டம் குன்னூரில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.

சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சி கட்டிலில் ஏறமுடியும்…!

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மங்களகிரியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கலாமா? அல்லது எதிராக வாக்களிக்கலாமா? என விவாதிக்கப்பட்டது. அப்போது, சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘கடந்த 2019-ம் ஆண்டு நரேந்திர மோடி அரசு மீது முதன்முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த கட்சி தெலுங்கு தேசம் கட்சிதான்.

ஆனால், தற்போது அவர்களுக்கு வலிய ஆதரவு கொடுத்தாலும் அவர்கள் நம்மை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். அவர்களது நிலைப்பாடு தெளிவாக தெரியவில்லை. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. எனவே, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சி கட்டிலில் ஏறமுடியும். வரும் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதன்பிறகு வரும் எந்த தேர்தலிலும் நிற்க மாட்டேன். 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கட்சி அரியணை ஏறாவிட்டால் இனி, எந்த தேர்தலிலும் தான் போட்டியிட போவதில்லை’ என்றார்.2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தனது கட்சி அரியணை ஏறாவிட்டால் இனி, எந்த தேர்தலிலும் தான்போட்டியிட போவதில்லை என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.