கருப்பு அறிக்கை எங்களுக்கு திருஷ்டி பொட்டு..!

பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று காலை கருப்பு அறிக்கை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கையை வெளிட்ட சிறிது நேரத்தில் மாநிலங்களவைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஒய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “கார்கே ஜி இங்கே இருக்கிறார்.

ஒரு குழந்தை சிறப்பாக ஏதாவது செய்யும் போதும், சிறப்பு விழாக்களுக்கு குழந்தை புத்தாடை உடுத்தி தயாராகும் போதும், தீய விஷயங்கள் மற்றும் கண் திருஷ்டிகளில் இருந்து குழந்தையை பாதுகாக்க பெரியவர்கள் அதற்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் புதிய பாதையில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தீமையின் கண்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நமக்கு திருஷ்டி பொட்டு வைக்கும் முயற்சி ஒன்று நடந்துள்ளது. அதற்காக கார்கேவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மல்லிகார்ச்சுன் கார்கே: “மோடி அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டவே கருப்பு அறிக்கை ..!”

பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கருப்பு அறிக்கையை வெளிட்ட மல்லிகார்ஜுன கார்கே, “இன்று நாங்கள் அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்தர மோடி பேசும் போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதேநேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு நரேந்தர மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம். நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் 411 எம்எல்ஏகள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல காங்கிரஸ் அரசுகளை கவிழ்த்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.