கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகன என்பதை 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் பார்த்துவிடலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டதும் அது கிழிக்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையாகிவிட்டது.
இது குறித்து தருமபுரியில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, நான் சென்னையில் இல்லை என்பது காவல்துறைக்கு தெரியும். அப்படி இருந்தும் சம்மன் கொடுக்க என் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு என் மனைவி இருந்தாரே, அவரிடம் கொடுத்திருக்கலாமே, அதை விட்டுவிட்டு கேட்டில் ஏன் சம்மனை ஒட்ட வேண்டும்? அந்த சம்மன் நான் பார்ப்பதற்கா இல்லை ஊரே பார்ப்பதற்கா?
பெங்களூரில் ஒரு நடிகையை தேடி சென்று காவல்துறையினர் சம்மன் கொடுக்க முடியும் போது என்னை தேடி ஓசூருக்கு வந்து சம்மன் கொடுத்திருக்கலாமே! என்ன செய்தாலும் என்னை அடக்க முடியவில்லை. அதனால் அந்த பெண்ணை அழைத்து வந்து திமுக அரசு இது போல் வீண் பழி போடுகிறார்கள். இப்போதும் சொல்கிறேன், ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இத்தனை ஓட்டு வாங்கியிருக்கும் நான்தான் பெரிய தலைவன். 2026 -ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் யார் என பார்த்துவிடலாம்.
கருணாநிதி மகனா, இல்லை பிரபாகரன் மகனா, தமிழா, திராவிடமா என்பதை 2026 -ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் பார்த்துவிடலாம். இது போல் என்னை மிரட்டினால் நான் பயந்துவிடுவேனா, உங்கள் அப்பா என்னை ஒரு ஆண்டுக்கு ஜெயிலில் வைத்திருந்தார். நான் பயந்துட்டேனா என்னை பார்த்தால் பயப்படுற மாதிரியா தெரிகிறது? ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாலே நான் குற்றவாளி ஆகிவிடுவேனா. அந்த காவல் துறை ஆய்வாளர் பிரவீனை எனக்கு நன்றாக தெரியும். அவருடைய தந்தை, ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் இறந்துவிட்டால் அதற்காக என்னை பழிவாங்குவதா?
234 தொகுதிகளிலும் 2026 -ஆம் ஆண்டு திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா, 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், ஆட்சி மாறும் என்பதை காவல் துறையின் மனதில் வைக்க வேண்டும். எங்கள் வீட்டு காவலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவிற்கு என்ன நடந்தது. விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8-ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும். இன்று ஆஜராவேனா என கேட்கிறீர்களா என சீமான் தெரிவித்தார்.