உதயநிதி ஸ்டாலின் கேள்வி: கலைஞர் பெயரை வைக்காமல் கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயர் வைக்கலாமா..!?

தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது? கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகரில் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், ‘எளியோர் எழுச்சி நாள்’ என்ற பெயரில் இன்று 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில், 48 ஜோடிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மொய், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் மிக்சி என 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகளும் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக அரசின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. வரத்தான் செய்யும். மக்கள் நமது திட்டங்களை கொண்டாடுவதைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வருகிறது. முதலமைச்சரை மக்கள் வாழ்த்துவதால் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல். அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது?

கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? இல்லை மறைந்த தலைவர்கள் பெயர்களையோ வைக்கலாமா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது அமித்ஷா, மோடி பெயரை வைக்க வேண்டும்.

எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 3 மாதங்களுக்கு முன்பு கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அண்மையில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். அந்தளவுக்குத்தான் இன்றைக்கு அதிமுக நிலைமை இருக்கிறது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

துணைக்கு துணையாகும் M. ஆர்த்தி IAS..! முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்..!

தமிழ்நாடு அரசு முக்கிய IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலராக சத்யபிரதா சாஹு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்த்தி IAS, துணை முதலமைச்சரின் துணைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ஊரக திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய சுகாதார திட்ட இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறு, குறு தொழில் துறை செயலராக அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். திட்ட இயக்குநர் ஆர்த்தி IAS, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலக துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி உடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்..!

எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார், என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் ரூ.15 கோடி மதிப்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மாவட்ட விளையாட்டு வளாகம்’ அமைத்திடவும், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் ‘ஒலிம்பிக் அகாடமி’ தொடங்கவும் சென்னையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் காணொளி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலினிடம் அவரிடம் யாருடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வருக்கு கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “என்னை கூப்பிட்டால் நான் செல்வேன்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து பல திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “வேறு யார் பெயரை வைக்கலாம்? விமர்சனம் வரத்தான் செய்யும். யார் பெயரை வைக்க வேண்டுமோ, அவர் பெயரைத்தான் வைக்க வேண்டும்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: மதவாத – பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்..!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. திமுக தலைவரின் அன்பு நண்பராக – திமுகவோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதவாத – பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் அவரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!” உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..! எந்த திசையில் யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி..!

தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் விஜயின் முதல் மாநில மாநாட்டில் வைத்து தன் கட்சி கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் யார் யார் என்பதை தெளிவாக எடுத்து உரைத்து தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய் நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின் தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்தார்.

“எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, திமுகவுக்கே வெற்றி. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி அமைந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும்,” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்: பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் திராவிட இயக்கம்தான் வளர்த்து வருகிறது..!

திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் இந்திய ஊடகத்துறையின் மூத்த செய்தித்துறை நிறுவனமான மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாச்சார நிகழ்ச்சி யில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டின் திராவிட அரசியல் முன்னெடுப்புகள் என்பது மொழி உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் மையப்படுத்தியது. தமிழ்நாட்டின் ஆழமிக்க மொழி மற்றும் பண்பாடு அடிப்படையிலான வரலாறு, அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது.

மொழி, இலக்கியம் மற்றும் அரசியலின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இணக்கமான வரலாறு உண்டு. 1924-ஆம் ஆண்டு கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டத்தை முன்நின்று நடத்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றார். அதே போல, கேரளாவில் பிறந்த டி.எம்.நாயர், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த தென் இந்திய நல உரிமை சங்கத்தை தொடங்கினார். அது தமிழ்நாட்டில் புது அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்தியாவின் வளர்ச்சி பெறும் மாநிலங்களில் முன்னணி இடத்தை தமிழ்நாடும், கேரளமும் பெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் வெற்றிகரமான முறையில், பாசிச – வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, தமிழ் இலக்கிய பெருமை என்பது பக்தி, புராணம் சார்ந்ததாக தான் இருந்தது. ஆனால், எங்கள் தலைவர்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோரின் முன்னெடுப்புகளால், பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனை சார்ந்த தமிழ் இலக்கியங்களின் புகழ் மேலோங்க தொடங்கின.

தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்கள், தமிழ் மொழியை அடிப்படை அடையாளமாக வைத்து செயல்படத் தொடங்கியதற்கு, தமிழ் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டுமல்லாமல், பெருமை மிகுந்த தனித்துவத்தை நிலைநாட்டும் வகையிலும் அமைந்துள்ளதே காரணம். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்தி திணிப்புக்கு எதிரான நடவடிக்கையாகவும் உள்ளது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்தி எனும் மொழியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.

மாநில மொழிகளின் உரிமையை காப்பதில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது. முற்போக்கு மற்றும் அறிவியல் கருத்துகளை திராவிட இலக்கியம் வளர்த்தது. மூட நம்பிக்கைகளை களைவதற்கான பணிகளை திராவிட இயக்கம் வளர்த்தெடுத்தது. சமத்துவத்துக்கு எதிராகவும் ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சிதான்.

சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக சமஸ்கிருதம் இருந்தது; சம உரிமையை மறுத்தது. முற்போக்கு கருத்துகளை வளர்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீர்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திரை வசனங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜக அரசின் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து முறியடிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரளாவும்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்தது இல்லை. பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..!

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் தவெக முதல் மாநாட்டுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உதயமாகியுள்ளன. ஆனால் மக்கள் ஆதரவைப் பெறுவது தான் முக்கியம். பல கட்சிகள் காணாமல் போயும் உள்ளன. ஒரு தயாரிப்பாளராக நான் முதலில் தயாரித்ததே விஜய் படம் தான். அந்த வகையில் நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

எல்.முருகன் கேள்வி: உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா..!? மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை பதவி நீக்கம் செய்வாரா..!?

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா..!? அல்லது உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா..!?” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அங்கிருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர். அப்போது கண்டமிதில் என்பதை கண்டமதில் என்றும், புகழ் மணக்க என்பதை ‘திகழ்’ மணக்க என்றும் பாடினர். மேலும் மைக் சரியாக வேலை செய்யாததால் , திராவிட நல் திருநாடும் என்ற வரியில் ‘ திருநாடும் ‘ என்ற வார்த்தை ஒலிபெருக்கியில் ஒலிப்பதில் இடைவெளி ஏற்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையுடனும் , தடுமாற்றத்துடனும் அரசு ஊழியர்கள் பாடியதைக் கண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது அருகில் அமர்ந்திருந்த சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமதுவிடம் நிகழ்ச்சியின் நிறைவில் பிழையின்றி ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் செல்லுமாறு கூறினார் . துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்படி இரண்டாம் முறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய அரசு ஊழியர் குழுவினர் மீண்டும் அதே பிழையுடன் பாடினர். இம்முறை மைக் சரியாக வேலை செய்ததால், பிழைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.

டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தற்போது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா? தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீதே பழி சொல்லும் தந்தையும் மகனும், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?

இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா? நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, “இந்த விவகாரத்தை பெரிய பிரச்சினையாக்கி விடாதீர்கள்” என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சினையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும் மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆளுநர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? ஆளுநருக்கு ஒரு அளவுகோல்- உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அளவுகோலா? சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வது தான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி: “முதிர்ச்சி இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்கிறார்..!”

வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்” என எடப்பாடி பழனிசாமி சாடினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் 53-ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொன்விழா கண்ட கட்சி அதிமுக. இக்கட்சி பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்தது. ஆனால், மழை அதிகளவில் பெய்யவில்லை. வெயில்தான் அடிக்கிறது.

இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது. 20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறினர். தற்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் மழைநீர் எங்கும் தேங்கவில்லை என பொய் கூறிவருகிறார்கள்.

தமிழகத்தில் மழை மட்டும்தான் பெய்துள்ளது. அதற்கே இந்த அரசு மிகவும் அலறுகிறது. அதிமுக பல புயல்களை கண்டது, தானே புயல், ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல் என பல புயல்களை கண்டுள்ளது. அதேவேளையில் புயல் வேகத்தில் மக்களுக்காக பணியாற்றி, அவர்களின் பிரச்சினையை தீர்த்ததுள்ளது. அதிமுகவை குறை சொல்வதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.

தூய்மைப் பணியாளர்களுக்கு டீ வாங்கி கொடுத்தால் எல்லாம் முடிந்து விடுமா? தூய்மை பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய அரசாங்கம் இந்த அரசாங்கம். அதிமுக ஆட்சியில்தான் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை கிடைத்தது. மழைக் காலத்திலும், வெள்ளம் ஏற்பட்ட போதிலும் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு இழப்பு ஏற்படும்போது உரிய நிவாரணமும் கொடுக்கப்பட்டது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அரசைப் பாராட்டியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,  அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வடிகால் பணிகளை முடிக்காததால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முழுமையாக செய்திருந்தால் சென்னையில் இப்பிரச்சினை இருந்திருக்காது. அதிமுக பணிகளை திமுக தொடர்ந்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பெரிதாக மழை பெய்யாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கவில்லை, ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியேகூட சென்றிருக்க முடியாது. பல்வேறு அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை துணை முதல்வர் ஒருவரே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதில் துணை முதல்வர் மட்டுமே வேலை செய்கிறார். நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை என அனைத்து துறைகளையும் உதயநிதி ஸ்டாலினே கவனிக்கிறார்.

அனுபவம் பெற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே திமுக முயல்கிறது. குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. முதல்வர் ஸ்டானின் தொகுதியில் தேங்கியுள்ள நீரே வடியாமல் கிடக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் சென்னையில் உள்ள நீரை எப்படி இவர்கள் வடிய வைக்கப் போகிறார்கள்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

சென்னை கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17-ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிகனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் சென்னை மேயர் பிரியா, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.