எச்.ராஜா: மது ஒழிப்பு மாநாட்டில் திமுக -விசிகவின் கூட்டணி நாடகம்..!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மாவட்ட பாஜக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் திருநெல்வேலி பாஜக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக வழிகாட்டு குழு தலைவர் எச். ராஜா கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன்பின்னர் எச். ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது, சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி நிதியை வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழக முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர், பிரதமருக்கு இந்த நிதியை தருவதற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் மத்திய மந்திரி சபை அந்த நிதியை வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழக பாஜக இதனை வரவேற்கிறது. தமிழகத்தில் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கதக்கது.

அக்டோபர் 2-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் திமுக -விசிகவின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு. மதுக்கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மதுவிலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நிறைவேற்றியது. மத்திய அரசு மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என சொல்வது போலி நாடகம். மக்கள் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது அரசு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் செயல் இழந்து கிடக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முழுமையாக பொய்யை மட்டுமே சொல்பவர். 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் கோவில் நிலங்கள் இருப்பதாக கூறிவரும் அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை மூலம் அதனை மக்களிடம் காட்ட வேண்டும். தவறான தகவல்களை அமைச்சர் சேகர் பாபு பரப்பி வருகிறார். 2021 தேர்தலை விட 2024 தேர்தலில் திமுக 6 சதவீத வாக்கை இழந்துள்ளது. 2026-ம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது திமுகவின் ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும் என எச். ராஜா தெரிவித்தார்.

ஹெச்.ராஜா விமர்சனம்: திமுக நினைக்கிற மாதிரி விசிக அவ்வளவு பெரிய கட்சி இல்லைங்க..!

பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, திமுக நினைப்பதுபோலவே, விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி இல்லை என தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜன சங்கம் கட்சி தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 108-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களள் சந்திப்பில் ஹெச்.ராஜா பேசுகையில், நாடு முழுவதும் 24-ம் தேதி வரை 5 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பழநி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜியை கைது செய்தது முறையற்றது. நீதிமன்றமும் அதையே சொல்லி, தமிழக அரசு, காவல் துறைக்கு பலத்த அடி கொடுத்துள்ளது. அதேநேரம், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை முதலமைச்சர் இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை.

விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விஜயகாந்துடன் மக்கள்நல கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால், அந்த கூட்டணிக்கு வெறும் 6 சதவீத வாக்குகள்தான் கிடைத்தன. அதனால், திமுக நினைப்பதுபோலவே, விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி இல்லை.

மேலும் பேசிய ஹெச்.ராஜா, மகாவிஷ்ணு விவகாரத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், திருச்சியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், அமைச்சர் அன்பில் மகேஸ்அதுபற்றி பேசவில்லை. கிறிஸ்தவர்கள் தொடர்பு இருப்பதால்தான் பேசவில்லையா? என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

தொல். திருமாவளவன்: எங்களுக்குள் எந்த விரிசலும், நெருடலும் இல்லை…!”

“திமுக – விசிக இடையில் விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம். ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எனது பேச்சு பற்றி முதலமைச்சர் எதுவும் கேட்கவில்லை” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் விசிக நிர்வாகிகளுடன் இன்று காலை 11.30 மணியளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கே அவர் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சரை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தொல். திருமாவளவன் பதிலளித்தார். அப்போது, அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கும் நிலையில் விசிக சார்பில் முதலமைச்சரை சந்தித்து எங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தோம். ரூ.9000 கோடி அளவிலான 19 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதலமைச்சரின் இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காகப் பாராட்டுகளைத் தெரிவித்தோம்.

அத்துடன், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி விசிக சார்பில் நடைபெறும் ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ நிமித்தமாக இரண்டு முக்கியமான கோரிக்கைகள் கொண்ட மனுவை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். அதில் இடம்பெற்றுள்ள முதலாவது கோரிக்கை, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை தேசிய அளவிலானது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-ன் படி படிப்படியாக மதுவிலக்கை இந்திய அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும்.

முதலமைச்சர் எங்களின் கோரிக்கை மனுவை படித்துப் பார்த்தார். பின்னர் அவர், “திமுகவின் கொள்கைதான் மதுவிலக்குக் கொள்கை. மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு அதைப் படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம்.

தேசிய அளவில் மதுவிலக்கு என்ற உங்கள் கோரிக்கையை உங்களோடு சேர்ந்து நாங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். எனவே அக்டோபர் 2 மாநாட்டில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பர்” என்ற உறுதியை வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் மதுவிலக்கு கருத்தில் உடன்படுவோர் எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும், தடையும், தயக்கமும் இல்லை என தொல். திருமாவளவன் கூறினார்.

தேசிய அளவில் மதுவிலக்கு என்ற உங்கள் கோரிக்கையை உங்களோடு சேர்ந்து நாங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். எனவே அக்டோபர் 2 மாநாட்டில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பர்” என்ற உறுதியை வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் மதுவிலக்கு கருத்தில் உடன்படுவோர் எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும், தடையும், தயக்கமும் இல்லை என தொல். திருமாவளவன் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது: ‘ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்க’ என நான் பேசியது பற்றி முதல்வர் எதுவும் பேசவில்லை. ஏனெனில், அது 1999-ல் இருந்து நான் பேசி வரும் கருத்து. அது இப்போது சமூக ஊடகங்களில் பெரிதாகப் பேசப்படுகிறது. அந்தக் கருத்தை நாங்கள் இப்போதும், எப்போதும் பேசுவோம். எப்போது வலுவாகப் பேச வேண்டுமோ அப்போது அதை வலுவாகப் பேசுவோம்.

தேர்தலுக்கும் இப்போதைய மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயிரக்கணக்கான கைம்பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்தியே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். இதை திசைதிருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்துப் பார்க்க வேண்டும்.

மாநாட்டில் பங்கேற்கும்படி முதல்வரிடம் நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. அந்த கோரிக்கை மனுவில் இடம்பெற்றிருந்த தகவலின்படி, ‘உங்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றுதான். அதனால் இருவர் எங்கள் தரப்பில் இருந்து பங்கேற்பார்கள்’ என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்.

மற்றபடி திமுக – விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதை நாங்கள் முன்னிறுத்துகிறோம் தொல். திருமாவளவன் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுவிலக்கு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்; பூரண மதுவிலக்கில் உடன்பாடு உள்ள அதிமுக உட்பட அரசியல் கட்சியினர் யாரும் விசிகவின் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, மதுவிலக்கு குறித்து துறைரீதியாக ஆலோசித்த பிறகே கருத்து கூற இயலும். மக்களிடம் தங்கள் கட்சியின் கோரிக்கையை கொண்டு செல்வதற்காக விசிக மாநாடு நடத்துகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டால் அரசுக்கு பின்னடைவு அல்ல. மது விற்பனையை இந்த அரசு தொடங்கி அதற்காக மாநாடு நடந்தால்தான் பின்னடைவு. எந்த கட்சி வேண்டுமானாலும் கோரிக்கையை வைக்க மாநாடு நடத்தலாம்; அவை திமுகவை எதிர்ப்பதற்கு அல்ல.

கோரிக்கைக்காக மாநாட்டை நடத்தினால் அரசியலுடன் தொடர்புபடுத்தி கூறுவது தவறு. விசிகவின் மதுவிலக்கு மாநாடு, அரசுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என அமைச்சர் முத்துசாமி பேசினார்.

விசிக கொடிக் கம்பத்தை அகற்றல்..! ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் ..!

நாகப்பட்டினம் அருகேயுள்ள காமேஸ்வரம் என்னுமிடத்தில் அண்மையில் விசிக கொடியேற்று விழா நடைபெற்றது. அனுமதியின்றி ஏற்றப்பட்டதென வருவாய்த்துறை அதிகாரி வட்டாட்சியர் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு அக்கொடிக்கம்பத்தை அகற்றியுள்ளனர்.

அங்கே பிற கட்சிக் கொடிக்கம்பங்கள் எப்படி நிறுவப்பட்டுள்ளனவோ அப்படியே விசிக கொடிக்கம்பமும் நிறுவப்பட்டது. ஆனால், ஒரு சில அதிகாரிகள் வன்மத்துடன் விசிக கொடிக்கம்பத்தை மட்டும் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இச்செயலைக் கண்டித்து இன்று சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

வீரமணி பேச்சு: “திருமாவளவன் மீது சிலருக்கு காதல் வந்திருக்கிறது..!

ஆகஸ்ட் 17 திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை முதலே திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவரது தாயார் பெரியம்மாள் திருமாவளவனுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார்.

மேலும் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி நேற்று தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் மாலை 4 மணியளவில் புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் விழா நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றுகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் நிகழ்வில், `வி.சி.க நடத்தும் மாநாடு` குறித்தான அறிவிப்பை வெளியிட்டதோடு, கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் திருமாவளவன். அதோடு தி.க தலைவர் கி.வீரமணி, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நாஞ்சில் சம்பத் ஆகியோரின் உரைகளும் கவனம்பெற்றிருக்கின்றன.

சென்னை காமராஜர் அரங்கத்தில் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை தொடங்கி ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலை வரை நடைபெற்ற நிகழ்வில் கவியரங்கம், வாழ்த்தரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. நாஞ்சில் சம்பத் தலைமையிலான பட்டிமன்றமும், கவிஞர் அப்துல் காதர் தலைமையிலான கவியரங்கமும் கவனம் ஈர்த்தன. நடிகர் ராஜ்கிரண், இசையமைப்பாளர் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில் “திருமாவளவன் மீது சிலருக்குத் தற்போது திடீர் அரசியல் காதல் வந்திருக்கிறது. ஆனால், எங்களுக்கும் திருமாவுக்கும் இடையேயானது கொள்கைப் பாசம். திருமாவுக்குக் கொள்கைப் பாலூட்டியது பெரியார் திடல்” என்றவர், தொடர்ந்து “தி.மு.க கூட்டணியைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. பல கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் திருமாவளவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கி.வீரமணி தெரிவித்தார்.

திருமாவளவன்: “தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது..!”

பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்தும், கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்ட உடனே, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, வேறெந்த சமூகத்தினரைப் பற்றியும் கவலைப்படாமல், யாருடனும் கலந்து பேசாமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், அவருடைய அரசியல் லாபத்துக்காக, அவருடைய கையில் அதிகாரம் இருந்ததால், உடனடியாக அறிவித்தார். பின்னர், அந்த உள்ஒதுக்கீடு சட்டப்படியான சிக்கலை சந்தித்து இன்று தேங்கி நிற்கிறது.

மாநில அரசுகளின் கைகளில் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை ஒப்படைக்கக் கூடாது என்ற கவலையும் அச்சமும் அம்பேத்கருக்கு இருந்தது. எனவே, பட்டியல் சாதிகளை எல்லாம், ஒரு பின் இணைப்பாக அரசியலமைப்புச் சட்டத்துக்குள் ஒரு பட்டியலாக இணைத்தவர் அம்பேத்கர்தான். பின்னர், அது பொருத்தமாக இல்லை என்று தெரிந்ததால், அதற்காக சட்டப்பிரிவு 341 மற்றும் 342 ஆகிய இரு உறுப்புகளை இணைத்தார்.

341 – பட்டியல் சமூகத்தைப் பற்றியது. 342 பழங்குடியின சமூகத்தைப் பற்றியது. இவர்களைப் பற்றி எந்த முடிவுகளை எடுத்தாலும், நாடாளுமன்றத்தில் விவாதித்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தவர் அம்பேத்கர்.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், நாடாளுமன்றத்துடன் ஏன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். நமக்கு திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது சரி. ஆனால், திமுக அரசு என்பது நிலையானது அல்ல. மாநில அரசுதான் நிலையானது. கட்சிகள் வரும், போகும். அது வேறு. சமூக நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், வருவார்கள் போவார்கள், அது வேறு. மாநில அரசு எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கே இல்லை, வர முடியாது.

இந்தியாவிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட பட்டியல் சமூகம் பஞ்சாப்பில்தான் இருக்கிறது. அங்கு எஸ்சி, எஸ்டியின் மொத்த மக்கள் தொகை 32 சதவீதம். 32 சதவீதம் உள்ள ஒரு சமூகம் தனித்து ஓர் அரசியல் சக்தியாக எழுச்சி பெற்றால், அவர்கள்தான் நிரந்தர முதல்வர்களாக இருக்க முடியும். ஆனால், முன்கூட்டியே 1975-களிலேயே வகைப்படுத்துதல் என்ற பெயரில், உடைத்துவிட்டார்கள்,” என திருமாவளவன் பேசினார்.

ஏன் இந்த பாகுபாடு: பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கேட்ட உடனே சின்னம்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முந்தய தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள், இடங்களைப் பெற்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக, சின்னங்களை இழக்காத கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் மாநில அந்தஸ்து, தேசிய அந்தஸ்துகளை இழக்கும் கட்சிகள் பட்டியலை வெளியிட்டது.

இதில் புதுச்சேரியில் பாமக மாநில கட்சி அந்தஸ்தை பறிகொடுத்தது. இதனால் பாமக தமது மாம்பழ சின்னத்தையும் இழந்து இனி தேர்தல்களில் மாம்பழம் என்ற பொதுச் சின்னத்தில் போட்டியிடாத சூழ்நிலை உருவானது. அதேபோல டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமாகா மிக மிக சொற்பமான வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்தன. இதனால் இந்த கட்சிகளுக்கும் குக்கர் மற்றும் சைக்கிள் சின்னங்கள் கிடைக்காத நிலை ஏற்படாது. அதுபோல நாம் தமிழர் கட்சி, விசிக மற்றும் மதிமுகவிற்கும் சின்னங்கள் கிடைக்காத நிலை ஏற்படாது.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் உரிய காலத்தில் விண்ணப்பித்து தங்களுக்கான சின்னங்களைப் பெறுவதில் முனைப்பு காட்டி வந்தன. பாமகவும் மாம்பழம் சின்னத்துக்கு விண்ணப்பித்திருந்தது. அமமுக குக்கர் சின்னத்துக்கும் ஜிகே வாசன் கட்சி சைக்கிள் சின்னத்துக்கும் மதிமுக பம்பரம் சின்னத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்துக்கும் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்துக்கும் விண்ணப்பித்தன.

ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்த உடனேயே அக்கட்சிக்கு மாம்பழ சின்னம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஜிகே வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இடம் பெறாத மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தைத் தர முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனால் இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் நீதிமன்றங்களை நாடி தீர்ப்புக்கு காத்திருக்கிறது.

பாஜக கூட்டணியில் சேராத ஒரே காரணத்துக்காகவே ஒவ்வொரு தேர்தலிலும் பயன்படுத்திய சின்னங்களை தங்களுக்கு ஒதுக்க மறுப்பது என்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என மதிமுக, நாம் தமிழர் கட்சித் தலைவர்களான துரை வைகோ, சீமான் தெரிவிக்கின்றனர்.