கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கோயம்புத்தூர் பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி, நீலகிரி பாஜக வேட்பாளர் முருகன், பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் கே.வசந்த ராஜன் ஆகியோரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, “எனது அன்பான தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். மேட்டுப்பாளையத்தின் இந்த புண்ணிய பூமியில் இருந்து உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். இப்பகுதியில் உள்ள மருதமலை முருகன், கோணியம்மனை வணங்குகிறேன். மேட்டுப்பாளையத்துக்கு கோவையின் ஆற்றலும், நீலகிரியின் அழகும் பொருந்தியிருக்கிறது. இவ்வளவு தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிக்கு வந்தால், ஒரு டீக்கடைக்காரருக்கு மகிழ்ச்சியாக இருக்காதா என்ன? விரைவில், தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.
கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி எப்போதுமே பாஜகவுக்கு முக்கியமான இடங்களாகும். காரணம், வாஜ்பாய் காலத்தில் நீங்கள்தான் பாஜகவுக்கு எம்.பியை தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பினீர்கள். தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவின் அலை வீசுகிறது. மக்கள் அனைவரும் பேசத் தொடங்கிவிட்டனர். திமுகவுக்கு விடை கொடுக்க தயாராகி விட்டனர். அதனால்தான், நாம் கூறுகிறோம் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்று.
திமுக – காங்கிரஸ் உள்ளிட்ட குடும்ப கட்சிகளுக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்கிறது. ஏதாவது பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஒரே குறிக்கோள். இப்படி பல தலைமுறைகளாக ஆட்சியில் இருக்கும் இவர்கள் கூறும் ஒரே பொய் வறுமையை ஒழிப்பதாக கூறுவதுதான். ஆனால், அவர்கள் இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் நாட்டில் வறுமையை ஒழிக்கவில்லை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த உடனே வந்த செய்த வேலை 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம்.
காங்கிரஸ் – திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி பல தலைமுறைகளாக ஆட்சியில் இருந்து வருகின்றனர். இவர்களுடைய ஆட்சியில், கோடிக்கணக்கான பட்டியல், பழங்குடியின மக்களை வீடுகள் இல்லாமல், மின்சாரம் இல்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கவிட்டு வந்தனர். காரணம், காங்கிரஸ் – திமுகவின் அடிப்படை எண்ணமே, அந்த மக்களுக்கு இந்த அடிப்படை வசதிகள் கிடைத்துவிடக் கூடாது, அவர்கள் அப்படியேத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள்.
ஆனால், பாஜக அரசு பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகளை வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கியிருக்கிறது. 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கியிருக்கிறது. இதைப் பெற்றவர்களில் பலர், பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள்தான்.
குடும்ப கட்சிகளைச் சேர்ந்தவர்கள், எப்போதும் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பதவிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏழை, பட்டியலின, பழங்குடியின மக்கள் உயர் பதவிகளுக்கு வருவதை அவர்கள் விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை. ஆனால், இந்தியாவில் முதன்முறையாக ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தது பாஜக அரசு. அதற்கும் இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆதரவு அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் இந்தியாவின் திறமையை நம்புவதில்லை. உதாரணமாக, கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில், இந்தியாவிலேயே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மருந்து தயாரிப்பதாக கூறினோம். இண்டியா கூட்டணியினர் அதை எள்ளி நகையாடினா். ஆனால், அந்த தடுப்பூசியை நாங்கள் இந்தியாவிலேயே தயாரித்து இண்டியா கூட்டணிக்கு சவால் விடுத்தோம். அந்த மருந்து மூலம் இந்தியா மட்டுமின்றி, பல உலக நாடுகளைச் சேர்ந்த மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
கரோனா காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரமும் சீர்குலைந்துவிடும் என்று அன்று இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆரூடம் கூறினார்கள். அந்த கடுமையான காலக்கட்டத்தில், நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதற்காக, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி நிதி உதவியை பாஜக அரசு வழங்கியது. அதனால்தான், தொழில் நகரமான இந்த கோவையில் ஆயிரக்கணக்கான எம்எஸ்எம்இ நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என பிரதமர் மோடி பேசினார்.