தமிழிசை சௌந்தரராஜன்: விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா..!?

1993-இல் தமிழ் வெளிவந்த அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அஜித்குமார் அறிமுகமாகிய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து ‘அஜித் குமார் ரேசிங்’-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு துறை (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது திராவிடமாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார் என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்கள் கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார். அப்போது, “துணை முதலமைச்சர் உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். ஒருவேளை விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா என்பது தெரியவில்லை” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

இறுதிச் சடங்கு உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் உட்பட இருவருக்கு 3 ஆண்டு சிறை..!

இறுதிச் சடங்குக்கான உதவித்தொகையை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா தங்காடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் உதகமண்டலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருடைய தந்தை ஆலுகுட்டி இயற்கை மரணம் அடைந்தார். இதனால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும் இறுதி சடங்கு செலவு உதவித்தொகை வாங்குவதற்காக, குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில், நாராயணன் விண்ணப்பம் கொடுத்தார் .

இந்த மனுவுக்கு தீர்வு சொல்லாமல் பல நாட்களாக இழுத்தடிக்கப்பட்டது. இதுகுறித்து பலமுறை நாராயணன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. முடிவில் அப்போது அங்கு வட்டாட்சியராக பணியாற்றிய கனகம், தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி ஆகியோர், பணம் கொடுத்தால் தான் பணி விரைவில் முடிக்கப்படும் என்று கூறி உள்ளனர்.ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பாத நாராயணன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் கடந்த 01-11-2010-ஆம் தேதி ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை வட்டாட்சியர் கனகத்துக்கும் ரூ.500 பணத்தை சாஸ்திரி ஆகியோருக்கும் நாராயணன் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இதன்பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, வட்டாட்சியர் கனகம் மற்றும் தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கு விஜய பிரபாகரன் ஆதரவு..!

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியிருப்பதற்கு தேமுதிகவின் விஜய பிரபாகரன் வரவேற்றுள்ளார். மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பதிலளித்தார்.

அப்போது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் நான் முதல் முறையாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் விஜயகாந்துடன் வந்துள்ளேன். தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கு இணங்க நான் வந்துள்ளேன்.விருதுநகர் லோக்சபா தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட போது ஒவ்வொரு ஊரிலும் முத்துராமலிங்க தேவரை வணங்கிவிட்டுதான் பிரசாரம் செய்தேன். இன்று அவரது பிறந்த நாள், இறந்த நாளில் தரிசிக்க வந்தது நிறைவாக இருக்கிறது.

தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், நீண்டநாள் போராட்டத்துக்கு பின் விஜய் மாநாடு நடத்தி உள்ளார். அதற்கு என் வாழ்த்துகள். அதிகாரத்தில் உள்ள கட்சியானது அனைவருக்கும் சரி சமமாக பகிர்ந்து தர வேண்டும். அதிகாரப் பகிர்வை அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன. நாங்களும் அதைப் பற்றி பேசுகிறோம். தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடைபெறும் போது எங்களுடைய நினைவுகளை சுட்டிக்காட்டுவதும் வழக்கம்.

அதுபோலதான் விஜய் மாநாட்டின் போது தேமுதிகவின் முதல் மாநாடு தொடர்பான வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்டது. நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்தவன். அண்ணன் விஜய் ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் ஒரு மாநாட்டைத்தான் நடத்தி முடித்துள்ளார் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்..!

தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் முதலமைச்சர் மாலை அணிவித்து செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117-வது பிறந்த நாள் விழா மற்றும் 62-வது குருபூஜை இன்று நடைபெற உள்ளது. இவ்விழாவை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெங்கல சிலைக்கு இன்று காலை 8.10 மணிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் உருவச் சிலைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அன்பில் மகேஷ், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து கோரிபாளையம் சிலைக்கு வி.கே.சசிகலா, எடப்பாடி பழனிசாமி, சீமான், ஜி.கே.மணி, ஒ.பன்னீர்செல்வம், துரை வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், அமைப்பினரும் அணிவித்து மரியாதை செய்கின்றனர். ஆகையால், மதுரை மாவட்டத்தில் 3,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எல்.முருகன் விமர்சனம்: திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம்..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு “ரோஜ்கர் மேளா” என்ற பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கும் தலைவர் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன் பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதன்படி, தற்போது வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து மக்களின் உணர்வுகளோடு தமிழக அரசு விளையாடக்கூடாது. நரகாசுரனை அழித்ததையே தீபாவளி திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதுபோல திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம். அனைத்து பண்டிகைகளுக்கும் முதல்வர் வாழ்த்து சொல்ல வேண்டியது அவரது கடமை. அதை தமிழக முதல்வர் செய்ய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

எல்.முருகன் விமர்சனம்: தவெக விஜய் தெளிவான பாதையில் செல்லவில்லை..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு “ரோஜ்கர் மேளா” என்ற பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கும் தலைவர் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன் பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதன்படி, தற்போது வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய் அவரது கட்சிக் கொள்கை, கோட்பாடுகளில் குழப்பான நிலையில்தான் இருக்கிறார்.

தேசமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என சொல்லியிருந்தால் வரவேற்றிருப்போம். திராவிடம் – தமிழ் தேசியம், இருமொழிக் கொள்கை எனவும் சொல்லியிருக்கிறார். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாக இருக்கின்றன. இருப்பினும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து எல்.முருகன் பேசுகையில், அவரது செயல்பாடுகள் போகப் போகத்தான் தெரியும். அவரது கொள்கை, கோட்பாடுகள் தெளிவான பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் தெளிவான பாதையில் பயணிக்க விரும்பவில்லை என்பதையுமே காட்டுகிறது. திமுக, போலி திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் போலி திராவிட மாடல் ஆட்சியை அதிகமாக தாக்கியிருக்கிறார். குடும்ப அரசியல் பற்றியும் பேசியுள்ளார்.

  குடும்ப அரசியல் நம் நாட்டிற்கு நல்லதல்ல. ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு பற்றி விஜய் பேசியுள்ளார். அந்த கொள்கையை பாஜக ஏற்கனெவே பின்பற்றி, முன் உதாரணமாகத் திகழ்கிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்திலும் ஆட்சி, அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு கொடுக்கப்படுகிறது என எல்.முருகன் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன் கேள்வி: இந்தியா கூட்டணி கட்சிகள் அனைவரையும் பாசிஸ்டுகள் என விஜய் சொல்கிறாரா..!?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய விஜய் பாசிஸ்டுகள் என்று திமுகவை மட்டும் சொல்கிறாரா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற 28 கட்சிகளும் பாசிஸ்டுகளை எதிர்க்கிறோம். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்தார். அப்போது,இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் “விஜய் அவர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறார். அவரது தொண்டர்கள் அவரிடம் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் பல்வேறு யூகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்தார். தனக்கு எதிரான விமர்சனங்களை பற்றி விளக்கம் சொல்வதிலேயே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார்.

நண்பர்கள் யார் யார் என அடையாளம் காட்டுவதை விட தன்னுடைய எதிரிகள் யார் என அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். யார் யார் நமது நட்பு சக்திகள் யார் யாரோடு நாம் இணைந்து செயல்பட முடியும் என தமது தொண்டர்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு பதிலாக தம்முடைய எதிரிகள் யார் என்று வரிசைப்படுத்துகிற போது பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும் ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி என்றும் கூறினார். பிளவுவாத சக்திகள் என்று அவர் சொல்கிற போது வெளிப்படையாக சொல்லவில்லை. குறிப்பிட்டு இந்த கட்சிதான் இந்த அமைப்புதான் என்று அடையாளப்படுத்தவில்லை.

பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலில் அந்தப் பிளவுவாத அரசியலில் தமக்கு உடன்பாடு இல்லை இத்தகைய பிளவுவாத கட்சிகளை எதிர்ப்போம் என்று மேம்போக்காக சொல்கிறார். அதிலே ஒரு முரண்பாடும் தெரிகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்கிற போது ஒரு சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என்று நாம் மகிழ்ச்சி அடைகிற வேளையில், பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலில் உடன்பாடு இல்லை என்கிறபோது பெரும்பான்மைவாதத்தை பேசுகிறார்கள் யார் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

அவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. பெரும்பான்மை வாதத்திலும் உடன்பாடு இல்லை சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடு இல்லை என்றால் பெரும்பான்மைவாதத்திற்கு துணை போகிற ஒரு நிலைப்பாடாக அது அமைந்து விடும். இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை வாதம் பேசுகிற ஒரே கட்சி பாஜக. அதற்கு துணை நிற்கிற சங்பரிவார்கள் அதனால் சிறுபான்மை சமூகத்தினர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இதர மத வழி சிறுபான்மையினர்களும் அச்சத்தோடு பீதியோடு இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

ஆனால், எனக்கு பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலிலேயே நம்பிக்கை இல்லை அதை எதிர்க்கிறோம் என்று மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்து போகிறார். அப்படி என்றால் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு பௌத்தர் சமணர் போன்ற சிறுபான்மை மதத்தினரின் பாதுகாப்பு குறித்து அவர் என்ன நிலைபாட்டை கொண்டிருக்கிறார் என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அது ஒரு குழப்பமான நிலையாக இருக்கிறது.

பாசிச எதிர்ப்பை பற்றி பேசுகிற போது மிக இலகுவாக கிண்டல் அடித்து விட்டு பாசிச எதிர்ப்பையே ஒன்றுமில்லை அது தேவையில்லை என்பது போல கடந்து போகிறார். ‘அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா’ என்று கேட்கிறார். அதில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று பாசிச எதிர்ப்பு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என எடுத்துக் கொள்ளலாம். இன்னொன்று நீங்களும் பாசிஸ்டுகள் தான் நீங்கள் ஒன்றும் சனநாயக சக்திகள் இல்லை என்று சொல்வதாக புரிந்து கொள்ளலாம்.

நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று அவர் திமுகவை மட்டும் சொல்கிறாரா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற 28 கட்சிகளும் பாசிஸ்டுகளை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாவை பொறுத்தவரையில் பாசிச எதிர்ப்பு என்றாலே பாஜக எதிர்ப்பு தான் சங்பரிவார் எதிர்ப்பு தான்.

ஆக ‘நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று சொல்லக்கூடாது’ என நான் சொல்ல முடியாது அது அவருடைய கருத்து. அப்படி என்றால் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என அனைவரையுமே பாசிஸ்டுகள் என கேலி செய்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. அதிலே பாசிச எதிர்ப்பு தேவை இல்லை என்கிற கருத்து தொனிப்பின் மூலம் பாஜக எதிர்ப்பு தேவை இல்லை என்கிற பொருளும் வெளிப்படுகிறது. ஆக பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பது அவரது உரையில் வெளிப்படுகிறது.

அவரது உரையில் அதிகம் திமுக எதிர்ப்பு நெடி வீசுகிறது. அவரது ஒட்டுமொத்த உரையின் சாராம்சமும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் அரசியலை எதிர்ப்பதாக இருக்கிறது. நண்பர் விஜய் அவர்களிடம் நாம் எதிர்பார்த்த ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் இல்லை, செயல் திட்டங்கள் இல்லை.” எனக் குறிப்பிட்டேன் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பயணித்த பயணிக்கு ரூ.200 அபராதம் Gpay செய்த பெண்..!

மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பயணித்த பயணிக்கு ரூ.200 அபராதம் Gpay செய்த பெண்..!

மேயர் ஆர்.பிரியா: சென்னை மாநகராட்சியின் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் கையடக்கக் கணினி

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், மேயர் ஆர்.பிரியா கையடக்கக் கணினிகளை (TAB) இன்று வழங்கினார். மேயர் அவர்களின் 2024-25-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும், காகிதமில்லா நடைமுறையினை செயல்படுத்துவதற்காகவும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், மேயர் ஆர்.பிரியா அவர்கள் கையடக்கக் கணினிகளை (TAB) ரிப்பன் கட்டட அலுவலகத்தில் இன்று வழங்கினார்.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் காகிதமில்லா நடைமுறையினை (Paperless Transaction) கொண்டு வருவதற்காகவும், அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் 200 எண்ணிக்கையில் Samsung S9 fE கையடக்கக் கணினிகள் மற்றும் 4G Wi-Fi Hotspot (2 Years Subscription cost) இணைப்புடன் தலா ரூ.47,646/- மதிப்பில் என மொத்தம் ரூ.95.29 இலட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு, இன்று மேயர் அவர்களால் 196 மாமன்ற உறுப்பினர்களுக்கு ஆர்.பிரியா அவர்கள் கையடக்கக் கணினிகளை வழங்கினார்.

2026-க்குள் அதிமுக ஒன்றிணையும் என வி.கே. சசிகலா நம்பிக்கை..!

“ மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே தமிழக முதலமைச்சர் ” என வி.கே.சசிகலா தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று சசிகலா மதுரை வந்தார். விமான நிலையத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ”மதுரையில் சில நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் போக வழியின்றி, முல்லைநகர், குறிஞ்சி நகர், பி.பி.குளம் போன்ற பகுதியில் தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மா காலத்தில் ஒரு அமைச்சரே ஒரு துறையை பார்க்கும்போது, பிரச்சினை இல்லை. தற்போது 3 அமைச்சர்கள் ஒரு துறையைப் பார்க்கின்றனர்.

திமுக ஆட்சியில் கட்சி சார்பிலான நிகழ்ச்சிகளை ஒழுங்காக நடத்துகின்றனர். தமிழக மக்கள் திமுக அரசாங்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2026 -ல் நிச்சயமாக அம்மாவின் ஆட்சி வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரை கிழிக்கிறார்கள் என்பதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தலைவருக்கும், அவருக்குப் பின்பு அம்மாவிற்கும் இது போன்று நடந்துள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கின்றனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது 60 கூட்டங்கள் நடத்தியுள்ளார். அம்மா முதலமைச்சராவதற்கு முன்பே 10 ஆண்டுகள் கட்சிப் பணி செய்துள்ளார். யார் சொன்ன கருத்தாக இருந்தாலும், சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது. சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும்.

சமூக நீதிக் கொள்கையை பட்டிதொட்டியிலுள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு திராவிடத் தலைவர்கள் வளர்ந்துள்ளனர். பெரியாரும் அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை. எம்ஜிஆரும், அம்மாவும் 68 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தனர். அதை ஒன்பதாவது அட்டவணையிலேயே சேர்த்துவிட்டோம். எந்த மாநிலத்திலும் இது நடைமுறையில் இல்லை.

2026-ல் பாருங்கள். அதிமுக ஒன்றிணைவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். அப்படி ஒன்றிணையும்போது, யாரை மக்கள் விரும்புகிறோர்களோ அவர் தான் முதலமைச்சராக இருப்பார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. உங்களுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் உங்களுக்குத் தெரியவரும்.” என வி.கே.சசிகலா தெரிவித்தார்.