வள்ளலாரின் 199வது பிறந்தநாளையொட்டி வடலூரில் உள்ள வள்ளலார் ஆலயத்தில் ஜோதி தரிசனம் மற்றும் அன்னதானம்

கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் 199 பிறந்தநாளை முன்னிட்டு கொள்கை பரப்பு மன்ற அமைப்பாளர் கண்ணதாசன் தலைமையில் அருட்பிரகாச வள்ளலார் ஆலயத்தில் ஜோதி தரிசனம் மற்றும் அனானதானம் நடைபெற்றது.

வள்ளலாரின் நினைவாக வடலூரில் அவருக்கு மண்டபம் அமைத்து இன்றுவரை அணையா ஜோதி எரிந்து கொண்டிருக்கும் வகையிலும், பசி என்று வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு உணவளித்தும் வருகின்றனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஜோதி தரிசனம் முடிந்தவுடன் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர், அன்னூர் உள்ளாட்சி இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் மாவட்ட, அன்னூர் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாவட்ட குழு உறுப்பினராக போட்டியிடும் தளபதியார் அவர்களின் ஆசிபெற்ற வேட்பாளர் இ. ஆனந்தன் அவர்களுக்கு நேற்று 04.10.2021 திங்கட்கிழமை மாலை பொழுதில் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 9வது வார்டுக்கு உட்பட்ட மசாண்டிபாளையம், பாலாஜி நகர் பகுதிகளில் திருப்பூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் MLA அவர்கள் வாக்கு சேகரித்தார்.

இதில் திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் TKT.மு.நாகராசன், திருப்பூர் வடக்கு மாநகர கழக பொறுப்பாளர் ந.தினேஷ்குமார், பகுதி கழக பொறுப்பாளர்கள் 15.வேலம்பாளையம், கோ. இராமதாஸ், அன்னாகாலனி செல்வம், வாலிபாளையம் மு.க.உசேன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் து.கோபிநாத், திருப்பூர் மத்திய மாவட்ட மற்றும் மாநகர கழக நிர்வாகிகள் தம்பி.குமாரசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் மாணவர் அணியை சார்ந்த மாவட்ட துனை அமைப்பாளர் சக்திவேல், திருப்பூர் வடக்கு மாநகர துனை அமைப்பாளர் சூர்யபிரகாஷ், தெற்கு மாநகர வர்த்தகர் அணி துனை அமைப்பாளர் பார்த்திபன்,நல்லூர் பகுதி கழக மாணவரணி துனை அமைப்பாளர் மணிகண்டன், மாணவர் அணியை சார்ந்த தோழர்கள் பிரேம்நாத், பிரவீன், தினேஷ்குமார், 9வது வார்டு உறுப்பினர் சரவண மூர்த்தி மற்றும் மசாண்டிபாளையம் மகளிர் அணியை சார்ந்த சரசுவதி அம்மா உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

சோலார் மின்சாரம் தயாரிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா நடகோட்டை பகுதியில், பூமிதான நிறுவனம் சார்பில் சோலார் மின்சாரம் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு, நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு கிராம மக்கள் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். திடீரென அவர்கள், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடுதல் விலைக்கு மது விற்றதாக மேற்பார்வையாளர்கள் உள்பட 3 பேருக்கு பணியிட மாற்றம்

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகளில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமிருந்தது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் சேகர் தலைமையிலான அதிகாரிகள் குன்னூர், கூடலூர் உள்பட பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது குன்னூரில் உள்ள டாஸ்மாக்கடை ஒன்றில் ஒரே வாடிக்கையாளரிடம் பலமுறை கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், காந்தி, விற்பனையாளர் ஆறுமுகம் ஆகிய 3 பேர் அப்பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்த பணியிட மாறுதல் அளிக்கப்பட்டு ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு மதுபானக் கழகத்துக்கு சொந்தமான குடோனில் பணி அமர்த்தப்பட்டனர்.

முன்னாள் முதலமைச்சர் பெயரை பயன்படுத்தி போலி அரசாணை வழங்கி மோசடி

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த மதனகோபால் என்பவர் தன்னை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்றும், பன்னீர்செல்வத்துக்கு அரசு வேலைக்கான தனி ஒதுக்கீடு அதிகாரம் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அரசு வேலை வாங்கித்தர முடியும் என்றும் ஒரு பெரிய கட்டுகதை அவிழ்த்து விட்டுள்ளார்.

அதை உண்மை என்று நம்பி, வங்கி அதிகாரி கமலக்கண்ணன் என்பவர் தனது மகள்கள் இருவருக்கு அரசு வேலை கேட்டு, மதனகோபாலை அணுகி ரூ.44 லட்சம் பணத்தை வாங்கி மதனகோபால் ஏமாற்றிவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் மதனகோபால் கைது செய்து அவரிடம் இருந்து 1 கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

கணவனை இழந்த இளம்பெண் இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரம் கேட்டு மனு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை நேற்று நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகிரி கருக்கம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி துளசிமணி தனது இரண்டு கைக்குழந்தைகளுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில், எனது கணவர் டிரைவர் வேலை செய்து வந்தார். எங்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நான் 7 மாத கர்ப்பமாக இருந்தபோது எனது கணவர் கொரோனா தொற்று பாதித்து இறந்துவிட்டார். எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. கணவர் இறந்ததால், வாழ்வாதாரமின்றி 2 குழந்தைகளுடன் தவித்து வருகிறேன். எனக்கு நிவாரண நிதியும், குழந்தைகளை பராமரிக்க அரசு வேலையும் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

வாடகைக்கு வீடு பார்க்க சென்ற இடத்தில் விபரீதம்: இளம்பெண்ணை காதலித்து கரம்பிடித்த கணவர் கழுத்து நெரித்து கொலை..!

திருப்பூர் மாவட்டம் ,மங்கலத்தை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகள் வைஷ்ணவி (20) திருப்பூர் செட்டிபாளையத்தில் சேர்ந்த ஐயப்பன் மகன் அருண்குமார்(22) கடந்த ஓராண்டுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வைஷ்ணவியை அருண்குமார் திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னர் இவர்களது வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதால் இவர்கள் அடிக்கடி சண்டையிடுவதும் பின் சேர்வதும் என இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கணவருடன் கோபித்து கொண்டு தாயின் வீட்டிற்கு சென்று வைஷ்ணவியை நேற்று 03/10/2021 மாலை சுமார் 6 மணி அளவில் சமாதானம் செய்து இருவரும் சேர்ந்து வாழலாம் எனக்கூறி அண்ணா நகரில் உள்ள தாய்தமிழ் பள்ளிக்கு பின்புறம் வீடு வாடகைக்கு பார்த்து வரலாம் என கூறி வைஷ்ணவியை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர்களுக்கிடையே தகராறு வர வாடகைக்கு பார்க்கச் சென்று வீட்டில் வைத்தே வைஷ்ணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அருண்குமார் தப்பி ஓடிவிட்டார் . தகவல் அறிந்த திருமுருகன் பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றினர். தப்பி ஓடிய அருண்குமாரை காவல்துறை வலை வீசி தேடி வருகின்றனர்.

தாபா ஓட்டலில் மது விற்பனை செய்த 2 பேர் கைது

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர், திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில் திருச்செங்கோட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்செங்கோடு- பரமத்திவேலூர் சாலையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாபா ஓட்டல் உரிமையாளர் ராஜா என்பவரை காவல்துறை கைது செய்தது தாபா ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

இப்போதெல்லாம் லஞ்சம் என்பது நாகரீகமாகிவிட்டது – இதற்கு காரணமே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதுதான்

மதுரையில் காவல் அதிகாரியாக பணியாற்றிய ஓ.பாஸ்கரன் என்பவர் ரூ.1,500 லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து கடந்த 2014-ம் ஆண்டு மதுரை காவல் ஆணையர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பின்னர், பாஸ்கரன் மீது துறை ரீதியான ஒழுங்கு விசாரணையை அதிகாரிகள் நீண்டகாலமாக மேற்கொள்ளவில்லை. அதையடுத்து பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, முக்கியத்துவம் இல்லாத பணியை அவருக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., மதுரை காவல் ஆணையர் ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்து உத்தரவில், பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்த பின்னர் துறை ரீதியான விசாரணையை மதுரை காவல் ஆணையர் மேற்கொள்ளவில்லை. அவரை விசாரணை மேற்கொள்ளவிடாமல் எது தடுத்தது என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் எங்களுக்குப் பல சந்தேகங்கள் உள்ளன.

பொது ஊழியரை பணியிடை நீக்கம் செய்துவிட்டு, அவருக்கு எதிரான துறை ரீதியான விசாரணையை பல ஆண்டுகளாக மேற்கொள்ளவில்லை என்றால், எந்த ஒரு நீதிமன்றம், பணியிடை நீக்கத்தை ரத்து செய்து பணி வழங்கத்தான் உத்தரவிடும். எனவே, தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது.

அதேநேரம், பாஸ்கரனுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்த வேண்டும். மேலும், இப்போதெல்லாம் லஞ்சம் என்பது நாகரீகமாகிவிட்டது. இதுபோன்ற கேவலமான செயல் சம்பந்தப்பட்ட துறை மற்றும் பணியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. முன்பெல்லாம் கூடுதலாக பணி செய்வதற்காக வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் கேட்கப்பட்டது.

ஆனால், இப்போது அரசுத் துறைகள் அனைத்திலும் லஞ்சம் புகுந்துவிட்டது. இதற்கு காரணமே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதுதான். லஞ்சம் தன்னுடைய வேர்களைப் பரப்பி, சமுதாயத்தை கரையான் போல் அரித்து வருகிறது என தெரிவித்தனர்.

பிறந்த நாளன்று உயிரிழந்த வீரபாண்டி ஆ. ராஜா

சேலம் பூலாவரி கிராமத்தை சேர்ந்த மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அவருடைய 2-வது மகன் வீரபாண்டி ஆ.ராஜா தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். தற்போது தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்தார்.

வீரபாண்டி ராஜாவுக்கு நேற்று 58-வது பிறந்த நாள் அதனால் தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்துக்கு தயாராகுவதற்காக அவர் காலை குளியலறைக்கு சென்றார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய குடும்பத்தினர் குளியலறைக்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை உடனடியாக மீட்டு குடும்பத்தினர் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்ததை உறுதி செய்தனர்.