ஆபாசப் படங்கள் அனுப்புவது, பகிர்வது தொடர்பாக தமிழகத்தில் சி.பி.ஐ அதிரடி சோதனை

சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நம் நாட்டில் குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் எடுப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் ஆபாசப் படங்கள் பார்ப்பது, பகிர்வது உள்ளிட்ட குற்ற செயல்கள் ஈடுபாடுயோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுக்கும் மாஃபியா கும்பல்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பவர்கள், பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் தொடர்பாக கிடைத்த பல்வேறு துப்புகளின் அடிப்படையில் தமிழகத்தில் 6 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆர்.எச். காலனியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய கேம்களை அனுப்பி விளையாட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 14 மாநிலங்களில் 83 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில், அரசு ஊழியரின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரசு ஊழியரின் மகனான கல்லூரி மாணவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதி சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது.

14 ஊராட்சி ஒன்றியங்களில் 600 இடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைகாலத்தில் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 445 கிராமங்களில் உள்ள அரசு கட்டிடங்களில் 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டு மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது.

அரசு கட்டிடங்களின் மேற்கூரைகளில் விழும் மழைநீரை தேக்கி வைத்து பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 600 இடங்களில் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்த 600 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளையும் 21 நாட்களில் அமைத்து உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனையில் ரூ.31 ஆயிரம் சிக்கியது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்தில் வணிகவரித்துறையை சேர்ந்த ஊழியர் ஒருவர், அங்குள்ள கடைகளில் தீபாவளி வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை வேடசந்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது வட்டார வரிவிதிப்பு அலுவலக உதவியாளர் ஒருவர் அங்குள்ள கடைகளில் பணம் வசூலிக்கும் போது கையும், களவுமாக சிக்கினார். ஆனால் உடனடியாக அவர் இரு சக்கர வாகனத்தில் தப்பித்தார் அதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர்.

பின்னர் அவர் திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்துக்குள் சென்றதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரது அவரை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவருடைய சட்டை பையில் ரூ.31 ஆயிரத்து 100 இருந்ததை லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை இந்த வசூல் வேட்டையில் வேறு யாருக்கேனும் அவருடன் தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோலார் மின்சாரம் தயாரிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா நடகோட்டை பகுதியில், பூமிதான நிறுவனம் சார்பில் சோலார் மின்சாரம் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு, நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு கிராம மக்கள் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். திடீரென அவர்கள், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.