தொல் திருமாவளவன்: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை என்ன எனக்கு..!?

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை என்ன எனக்கு இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவும் இல்லை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நியூஸ்18 தொலைகாட்சி நடத்தும் களம்18 நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசினார்.

அப்போது, விசிக, திமுக கூட்டணியில் உள்ள கட்சியாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். திமுக கூட்டணி என்பது மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இந்த கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த கூட்டணியின் நோக்கத்தை நோக்கி பயணிப்பதுதான் என்னுடைய தேவையாக இருக்க முடியும். அந்த கூட்டணியை சிதைக்க வேண்டும் என்று நான் ஏன் முடிவு செய்ய வேண்டும்? அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை எனக்கு என்ன இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவும் இல்லை.

கூட்டணியில் இருந்தால் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறோம். தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டிக்கிறோம். நாங்கள் எதுவும் செய்வதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அது எங்கள் மீதான காழ்ப்புணர்ச்சி. திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை நாங்கள் தொடுகிறோம். உள்ளே இருந்து எங்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தாலும் கூட இந்த கூட்டணியை சிதைய விடாமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

சிறுமியை மிரட்டி உல்லாசம்..! எனக்கு இருக்கும் நோயை நீயும் எடுத்துக்கோ..!

ஹெராயின் போதைக்கு அடிமையான 17 வயது சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்காத உலகில் மிகவும் கொடிய தொற்று HIV ஆகும். HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போனாலும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் மருத்துவ உலகம் கூறுகின்றது. ஆனாலும், HIV -யுடன் வாழ்வது என்பது, மிகப்பெரிய போராட்டம் ஆகும். இப்படிபட்ட சூழ்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில், போதைக்கு அடிமையான சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்கள் HIV தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் நானிடால் மாவட்டத்திலுள்ள ராம் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் ஹெராயின் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறுமியுடன் பழகிய இளைஞர்கள் சிலர், போதை பொருள் வேண்டும் என்றால் தன்னுடன் நெருக்கமாக பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். இப்படி 17 வயது சிறுமியை 19 பேருக்கும் அதிகமான இளைஞர்களால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இந்த இளைஞர்களில் ஒரு சிலருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், தீராத உடல் சோர்வு என உடல்நலப் பிரச்சனை ஏற்பட்ட இவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து உள்ளனர்.

இவர்களின் ரத்த மாதிரியை பரிசோதித்தபோது, இவர்களுக்கு HIV தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் அந்த சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொற்று யார் மூலம் பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை பேச்சு: 2031-ல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு..!

2031 திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இளைய பாரதம் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்ணாமலை லண்டனில் பேட்டி அளித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி 40 சதவீத வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்தார். அதே போல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி 40% வாக்குகள் பெற்று ஆட்சியை தக்கவைக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிலோ 30 முதல் 35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வருகின்றன.

திராவிட சித்தாந்தங்கள் காலாவதியாகி வருவதை ஒவ்வொரு தேர்தலும் நமக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. போன தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது. இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது. இனியும் மக்கள் திராவிட கொள்கையை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதே இந்த சரிவுக்கு காரணம். 2026-ஆம் ஆண்டு கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 12 சதவீதத்துக்கும் கீழே போய்விடும். அது நடந்தே தீரும். அந்த இடத்துக்கு வேறு ஒரு கட்சி வரும். 2026-ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக இருக்கும். 2031 திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” என அண்ணாமலை தெரிவித்தார்.

வெறும் 21 கிலோமீட்டர் பயணத்திற்கு 1000 ரூபாய் வசூலித்த ரேபிடோ ஓட்டுனர்..!

சென்னையிலுள்ள ஒரு ரேபிடோ பயணி, வெறும் 21 கிலோமீட்டர் பயணத்திற்கு 1000 ரூபாய் வசூலித்த ரேபிடோ ஓட்டுனர் இரட்டிப்பு கட்டணம் வசூலித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ்வே என அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் துரைப்பாக்கத்தில் AJ ஸ்கில் டெவலப்மென்ட் அகாடமி செயல்பட்டு வருகின்றது. இதன் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான அசோக் ராஜ் ராஜேந்திரன் இருக்கிறார்.

அசோக் ராஜ் ராஜேந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 21 கி.மீ தொலைவிலுள்ள துரைப்பாக்கம் வரை செல்ல ரேபிடோ முன்பதிவு செய்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து துரைப்பாக்கம் வரை செல்ல ரேபிடோ ஆப்பில் கட்டணம் ரூ.350 ஆக காட்டியுள்ளது. இதனை நம்பி ரேபிடோவில் பயணம் செய்துள்ளார். அதன்பின்னர், அசோக் ராஜ் ராஜேந்திரன் துரைப்பாக்கத்தில் AJ ஸ்கில் டெவலப்மென்ட் அகாடமி இறங்கியுள்ளார். அப்போது, ரேபிடோ ஓட்டுநர் ரூ.1,000 கேட்டதாக தெரிய வருகிறது. இந்த சம்பவம் குறித்து, அசோக் ராஜ் ராஜேந்திரன் ரேபிடோவிற்கு புகார் தெரிவித்துள்ளார். ஆனால் ரேபிடோ அந்த சாட்டை எந்த வித பதிலும் இன்றி முடித்து விட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அதிகமாக கட்டணம் கேட்டதற்கு ரேபிடோ ஓட்டுநர் அந்த பகுதியில் நீர் தேங்கி இருப்பதை காரணம் காட்டி 1000 கேட்க, ராஜேந்திரன் ஒரு வழியாக பேரம் பேசி 800 ரூபாயாக குறைத்துள்ளார் என தனது லிங்க்டின் பதிவில் ராஜேந்திரன் எழுதியுள்ளார். ரேப்பிடோ வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு பேசிய சாட் ஸ்கிரீன்ஷாட்டை ராஜேந்திரன் பகிர்ந்திருந்தார். அதில் இறங்கிய இடத்தில் முரண்பாடு இருப்பதாக ரைட் ஹைலிங் ஆப்-பில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. ராஜேந்திரன் வித்தியாசம் வெறும் 100 மீட்டர் தூரம் மட்டுமே என்றும், 100 மீட்டருக்கு 100 சதவீத கூடுதல் கட்டணமா? என்றும் அந்த கஸ்டமர் சர்வீஸ் அதிகாரியிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலாக இறங்கிய இடத்தில் முரண்பாடு இருப்பதாக கூறி கஸ்டமர் சர்வீஸ் அதிகாரி சாட்டை முடித்து விட்டார்.

தொல் திருமாவளவன்: விஜய் பேசியதை சுட்டிக் காட்டினேன்..! தனிப்பட்ட வன்மமும் இல்லை..!

தவெக மாநாட்டில் விஜய் பேசிய உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நியூஸ்18 தொலைகாட்சி நடத்தும் களம்18 நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசினார். அப்போது, “எடுத்த எடுப்பிலேயே 30 சதவீத வாக்குகளை விஜய்யால் வாங்க முடியுமா? எம்ஜிஆர் கட்சி தொடங்கும் முன்பே அவர் திமுக காரர். தேர்தல் அனுபவம் உள்ளவர். அவருக்குப் பின்னால் வந்த எந்த நடிக்கருக்கும் எம்ஜிஆருக்கு இருந்த பின்னணி இல்லை.

எம்ஜிஆரின் தொடர்ச்சியாகத்தான் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தார். விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

முன்னதாக தவெக மாநாட்டின் விஜய் பேசியது குறித்து தொல் திருமாவளவன் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், “திமுகவை பொது எதிரி என்று அறிவித்திருப்பதும் திமுக கூட்டணியை குறிவைத்திருப்பதும் தான் நடிகை விஜய்யின் ஒட்டுமொத்த உரையின் சாரம். பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்திருக்கிறார். பாசிசம் என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜகவை அடையாளப்படுத்தும் ஒரு சொல். பாசிச எதிர்ப்பு என்றால் பாஜக எதிர்ப்புதான். பாஜக எதிர்ப்பை அவர் நையாண்டி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அவருடைய கருத்துக்கு அது முரண்பாடாக இருக்கிறது. பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. பாசிசம் என்னால் என்னவென்று அவர் உணர்ந்திருக்கிறார் என்று தெரியவில்லை. விஜய்யின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் தெரிகிறது” என தொல் திருமாவளவன் கருத்து தெரிவித்து இருந்தார்.

கின்னஸ் சாதனை: 28 லட்சம் விளக்கொளியில் ஜொலித்த அயோத்தி..!

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபின், அங்கு முதல் முறையாக நடைபெறும் தீப உற்சவத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டு,இது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.

வட இந்தியாவில் ராமர் வனவாசத்தை முடித்து விட்டு அயோத்தி திரும்புவதை , தீபாவளியாகவும், தீப உற்சவமாகவும் 5 நாள் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபின், அங்கு முதல் முறையாக நடைபெறும் தீப உற்சவத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த உத்தர பிரதேச அரசு முடிவு செய்தது. இதற்காக ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரையின் 55 படித்துறைகளில் நேற்று 28 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கப்பட்டன.

விளக்கொளியால் ஏற்படும் மாசுவை குறைக்க கோயிலுக்கு வெளியே மெழுகு விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. விளக்கேற்றும் நிகழ்ச்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை சேர்ந்த 30 பேர் குழுவினரும் இங்கு வந்திருந்தனர். அவர்கள் டிரோன்கள் மூலம் விளக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீப உற்சவத்தை பார்வையிட பல்லாயிர கணக்கான பக்தர்கள் கூடி இருந்தனர். ஆகையால், இந்த தீப உற்சவத்தை பக்தர்கள் பார்வையிட ஆங்காங்கே LED திரைகள் பொருத்தப்பட்டு இருந்தன. மேலும் தீப உற்சவத்தை முன்னிட்டு, 10,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல். முருகன் இப்போ உதயநிதி ஸ்டாலின்.. சீக்கிரம் முதலமைச்சர் ஸ்டாலின்..!

தீபாவளிக்கு இதுவரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன், தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி அவர் தீபாவளியைக் கொண்டாடினார். அதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு எல்.முருகன் பதிலளித்தார்.

அப்போது, தீபாவளிக்கு இதுவரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் இதுவே எங்களுக்கு வெற்றி தான் என்று குறிப்பிட்ட எல்.முருகன், முதலமைச்சரும் விரைவில் வாழ்த்து சொல்வார் என நம்புகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

திமுக தலைவர்கள் தீபாவளி வாழ்த்து சொல்லாதது ஆண்டுதோறும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

தீபாவளிப் பண்டிகைகளின் போது பாஜக , அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், திமுக தலைமை சார்பில் இதுவரை தீபாவளி பண்டிகைகளுக்கு வாழ்த்து சொன்னதே கிடையாது. இதன் காரணத்தால், திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பவள விழா ஆண்டின் நிறைவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் சுமார் 4,250 கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துறைமுகம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திராவிடம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆளுநருக்கு அலர்ஜியாகிவிடும். திராவிடம் என்ற வார்த்தையை எடுத்து விட்டால் திராவிடமே அழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். கலைஞரின் உயிரினும் மேலான கழக உடன் பிறப்புகள் இருக்கும் வரை தமிழகத்தையும் திராவிடத்தையும் எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. நீங்கள் என்ன முயன்றாலும் திராவிடம் இருக்கும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், “நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அனைவருக்கும் திமுக பவள விழா ஆண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கொண்டாடுபவர்களுக்கு தீபாவளித் திருநாள் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சரியான பதிலடி: எம்ஜிஆர் பெயரை சொல்லி பொழப்பு நடத்தவேண்டிய நிலை..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த மற்றும் மரணமடைந்தோர் குடும்பங்கள் உள்ளிட்ட 167 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1.67 கோடி நிதியுதவி வழங்கினார்.

அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் நடிகர் விஜய் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில்போய் இது சரியா, அது சரியா என்று நாம் சொல்ல முடியாது. கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படும்.

அதிமுக கட்சி பற்றி விஜய் தனது மாநாட்டில் விமர்சிக்கவில்லை. கொள்கையில் இருந்து அதிமுக எப்போதும் மாறாது. விஜய் மட்டுமல்ல, யாராலும் அதிமுக வாக்கை பிரிக்க முடியாது. எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

உயிரோடு இருப்பவருக்கு இறந்ததாக ஆவணம்..! ஓய்வூதியம் கேட்டு டெல்லிக்கு படையெடுத்த ராஜஸ்தான் பெண்கள்..!

உயிரோடிருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணங்களில் உள்ள நிலையில் தங்களுக்கு ஓய்வூதியமும், நீதியும் கேட்டு ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்கள் டெல்லி வந்துள்ளனர். பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலம் சதரன் பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த ஜம்கு தேவி கடந்த 2022-ஆம் ஆண்டு வரை, முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்தார். ஆனால் அதன் பிறகு இவருக்கு முதியோர் ஓய்வூதியம் வரவில்லை. இதுதொடர்பாக தனது கிராம நிர்வாக அதிகாரியைக் கேட்டபோது, இவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் உள்ளதென்றும், அதனால்தான் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது என தெரிவித்தார்.

தான் உயிருடன் இருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணம் பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் கடந்த 21 மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நடையாய் ஜம்கு தேவி நடந்து நடந்தார். இந்நிலையில் இவர் உரிய நீதி கேட்டும், முதியோர் ஓய்வூதியம் வழங்கக் கோரியும் அவர் டெல்லியில் நடைபெற்ற முதியோர் ஓய்வூதியம் குறைதீர்ப்பு தொடர்பான கூட்டத்துக்கு வந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஜம்கு தேவி பேசுகையில், “கணவர் இறந்த பின்னர், என்னிடம் உள்ள ஆடுகளை மேய்த்து வாழ்க்கையை நடத்தி வருகிறேன். திடீரென முதியோர் ஓய்வூதியத்தை நிறுத்தியதால் கடும் அவதி பட்டுக் கொண்டுள்ளேன். அதிகாரிகளை கேட்டால் அங்குபோ , இங்குபோ என இழுத்தடித்து கொண்டுள்ளனர். அதனால்தான் எனது புகாரை பதிவு செய்ய டெல்லி வந்தேன்” என தெரிவித்தார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த பல ஆயிரம் பெண்கள் இதுபோன்ற தவறான ஆவணப் பதிவால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் இறந்ததாக பதிவு செய்யப்பட்டதால் அவர்களுக்கு வந்து கொண்டிருந்த முதியோர் பென்ஷன் நிறுத்தப்பட்டுவிட்டது. இதேபோல ஆஜ்மீரைச் சேர்ந்த காஞ்சன் தேவி பேசுகையில், “நான் எனது கணவரை இழந்துவிட்டேன். 30 மாதங்களுக்கு முன்பு எனது விதவை ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விட்டது. நான் இறந்ததாக கிராமத்தில் உள்ள ஆவணங்கள் கூறுகின்றன. இதுகுறித்து பஞ்சாயத்து அதிகாரிகள் கேட்டால், புதிதாக பென்ஷன் கணக்கு தொடங்குமாறு கூறுகின்றனர் என காஞ்சன் தேவி தெரிவித்தார்.

பீவார் மாவட்டம் மொஹல்லா நரசிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்த குடியா பேசுகையில், “நான் ஒரு மாற்றுத்திறனாளி. கடந்த 2023 ஜனவரி வரை எனக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் கிடைத்து வந்தது. ஆனால் ஜனவரி மாதம் திடீரென ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆவணத்தில் எனது முகவரி மாற்றப்பட்டு விட்டதாகவும், நான் வேறு மாநிலத்துக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் ஆவணங்களில் உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால், நான் ராஜஸ்தானில்தான் இருக்கிறேன். ஓய்வூதியம் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறேன் என மாற்றுத்திறனாளி தெரிவித்தார்.

பீவார் மாவட்டம் பியாகேடா பகுதியைச் சேர்ந்த கெலி தேவி கூறும்போது, “எனக்கும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது. எனது ஓய்வூதியம் ஆணை நகலை, மற்றொரு பெண்ணின் வங்கிக் கணக்குடன், இ-மித்ரா மைய ஊழியர் தவறுதலாக இணைத்துவிட்டார். சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு உள்ள பெண் கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டார். இதனால் எனக்கு ஓய்வூதியம் வருவது நிறுத்தப்பட்டுவிட்டது. இவ்வாறு நிர்வாகப் பிரச்சினைகள், அதிகாரிகள் செய்யும் தவறுகள், தொழில்நுட்பத் தவறுகளால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம்” என தெரிவித்தனர்.

இவர்கள் டெல்லியில் நடைபெற்ற ஓய்வூதியம் குறைதீர்ப்புத் தொடர்பான கூட்டத்தில் தங்களது குறைகளை எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை டெல்லியிலுள்ள ஓய்வூதியம் பரிஷத், மஸ்தூர் கிஸான் சக்தி சங்கடன் அமைப்புகள் நடத்தின. ராஜஸ்தான் மாநிலத்தில் முதியோர், மாற்றுத்திறனாளி, விதவைகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் அளித்த பேட்டி மீண்டும் வெளியானது தொடர்பாக பஞ்சாப் அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்..!

லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தபடி அளித்த பேட்டி மீண்டும் வெளியானது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பாபா சித்தி கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றது. தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத வழக்குகளில் கைதாகி குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், பாபா சித்திக் படுகொலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் என லாரன்ஸ் பிஷ்னோய் பெயர் செய்திகளில் அடிபட்டு வருகிறது. எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகிறார்.

இதனிடையே, பஞ்சாப் சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் இருந்தபோது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவரது பேட்டி வெளியானது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வந்த நிலையில், அதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வீடியோ பேட்டி சமூக வலைதளங்களிலும் வெளியானது. இதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த வீடியோ மீண்டும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, நீதிபதிகள் அனுபிந்தர் சிங்கர், லபிதா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவரை வீடியோ பேட்டி எடுப்பதற்காக ஸ்டூடியோ போன்ற வசதியை மூத்த சிறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இது குற்றத்துக்கு புகழ் சேர்ப்பது போல் உள்ளது. அந்தக் குற்றவாளியை மேலும் குற்றங்கள் செய்ய தூண்டுவது போல் இது அமைந்துள்ளது. இந்த வீடியோ, தொடர்பாக தீவிர விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.