உச்ச நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவைச் செயல்படுத்தாதது குறித்து, முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 167(b)-ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேரடியாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 167(b) என்பது ஒரு மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து ஆளுநர் தகவலோ அல்லது விளக்கமோ கேட்டால், அதனை முதலமைச்சர் கட்டாயம் ஆளுநருக்கு வழங்க வேண்டும். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் களத்தில் என்ன நடந்தது, காவல்துறைக்கு என்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன என்பது குறித்த உண்மை அறிக்கையை ஆளுநர் அர்லேகர் தற்போது முதலமைச்சர் விஜய்யிடம் கேட்டுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகேயுள்ள கல் தூணில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 20-ந் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், நவம்பர் 24-ந் தேதி மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.. மாறாக, வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த முடியவில்லை எனத் தமிழக அரசு தெரிவித்த நிலையில், மனுதாரர்கள் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டதாகக் கூறி பல்வேறு தரப்பினரும் ஆளுநரிடம் முறையிட்ட நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகைத் தகவல்களின்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கான காரணம் என்ன? இது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே நடந்த தகவல் பரிமாற்றங்கள் என்ன? என்பது குறித்து ஒருங்கிணைந்த விரிவான அறிக்கையை முதலமைச்சர் விஜய் சமர்ப்பிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆளுநரின் இந்தக் கடிதத்திற்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.