அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 260-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் ஜாதி ரீதியான கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனை மாணவர்களிடமும் ஆசிரியர்கள் வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் முழுவதும் தீபாவளி விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 10-ந் தேதி பள்ளி திறக்கப்பட்ட போது பட்டியலின சமூக ஆசிரியர்கள் பயன்படுத்தும் அறையில் உள்ள மேசையில் மனிதக்கழிவு வீசப்பட்டிருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணதாசன் என்பவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதன்பிறகு பள்ளியில் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஆய்வக உதவியாளர் கண்ணதாசன், சமூக அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனிடையே பள்ளியில் பணியாற்றிய 5 பட்டியலின ஆசிரியர்களை பிற சமூகங்களை சேர்ந்த 12 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பள்ளியில் ஜாதி ரீதியாக கருத்து வேறுபாடு கொண்ட அனைத்து ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும், ஆய்வக அறையில் மனிதக்கழிவு வீசிய நபர்களை கைது செய்ய வேண்டும், பள்ளிக்கு இரவு நேர காவலர் நியமிக்க வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்களும், பெற்றோரும் 2 நாட்களாக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக 2 நாட்களாக 200-க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தால் அப்பகுதியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சூழலில், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவரான நீதிபதி எம்.வி.முரளிதரன் மற்றும் உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர்.
அதேபோல் ஜாதி ரீதியாக ஆசிரியர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டது குறித்தும் மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விசாரணை நடத்தி டிசம்பர் 15-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை ஜெயங்கொண்டம் துணைக் கண்காணிப்பாளர் அறிக்கையாக அளிக்கவும் உத்தரவிட்டனர்.