தென்காசி அருகே பாவூர்சத்திரம் பகுதியில் சாலையில் கிடந்த சுமார் 35 லட்சம் தங்க நகைகள், பணம் அடங்கிய பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாப்பையா என்ற முதியவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் அரியப்பப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பாவூர்சத்திரம் அருகே குருசாமிபுரத்திலுள்ள தன் மகள் வீட்டுக்கு 250 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் அடங்கிய பையோடு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தன் பைக்கில் வைத்திருந்த நகை, பணம் அடங்கிய பை மட்டும் கீழே விழுந்துள்ளது.

இதனை கவனிக்காமல் வீட்டுக்கு சென்ற சுப்பிரமணியன் நகைப்பை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் பதறிப்போன அவர் தான் வந்த வழியிலும், அக்கம் பக்கத்தினரிடமும் சொல்லி தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே மேட்டூர் பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர் பாப்பையா அவ்வழியாக நடந்து சென்ற போது பை ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார்.
அதில் நகை பணம் இருந்ததால் உடனே வீட்டுக்கு சென்ற அவர் தன் மகனை அழைத்துக்கொண்டு பாவூர்சத்திரம் காவல் நிலையம் சென்றார். அங்கு நகைப்பை கீழே கிடந்ததாகவும், உரியவரிடம் ஒப்படைக்குமாறும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். பையில் 250 கிராம் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் பணம் இருந்துள்ளது. இதனால் நகையை உரியவரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் விசாரனையில் இறங்கினர்.

அதற்குள் நகைப்பையை கண்டுபிடிக்க முடியாததால் சுப்பிரமணியன் காவல் நிலையத்திற்கு புகார் கொடுப்பதாக வந்தார். இதையடுத்து அவர் தான் நகைக்கு சொந்தக்காரர் என்பதை உறுதி செய்த காவல்துறையினர் அவர்களிடம் நகைகளை ஒப்படைத்தனர். இதையடுத்து நேர்மையாக நகைகளை ஒப்படைத்த பாப்பையாவை நேரில் அழைத்து காவல்துறையினர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான தகவல் அப்பகுதி முழுக்க தீயாய் பரவிய நிலையில் சமூக வலைத்தளத்தில் பலரும் முதியவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இதை அறிந்த திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசும், விவசாயி பாப்பையாவை நேரில் வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சாலையில் கிடந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 35 லட்சம் இருக்கும் நிலையில், அதை நேர்மையாக ஒப்படைத்த முதியவரின் செயலை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.